மனைவியைக் கொன்று தூக்கில் தொங்கவிட்ட கணவர்: பிரேதப் பரிசோதனை முடிவால் கைது

திருவிக நகரில் மனைவியுடன் ஏற்பட்ட பிரச்சினையில் கழுத்தை நெரித்துக் கொன்று தூக்கில் தொங்கவிட்டு தற்கொலை நாடகமாடிய கணவர் பிரேதப் பரிசோதனை அறிக்கையில் சிக்கினார்.

சென்னை திருவிக நகர் அண்ணா தெருவைச் சேர்ந்தவர் கல்பனா (22). இவரது கணவர் சுரேஷ் (29). இவர்களுக்குத் திருமணமாகி சில ஆண்டுகள் ஆன நிலையில் கடந்த 11-ம் தேதி கல்பனா தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டதாக, கணவர் சுரேஷ் திருவிக நகர் போலீஸுக்குத் தகவல் அளித்தார். சம்பவ இடத்திற்குச் சென்ற போலீஸார் பிணத்தைக் கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

கணவர் சுரேஷ் மனைவி இறந்த துக்கம் தாளாமல் கதறி அழுதார். மனைவி தற்கொலை செய்துகொண்டதாக அழுது புலம்பினார். போலீஸார் சந்தேக மரணமாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனையில் கல்பனா தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொள்ளவில்லை, அவர் கழுத்து நெரிக்கப்பட்டதால் கொல்லப்பட்டிருப்பது தெரிய வந்தது.

இதையடுத்து பிரேதப் பரிசோதனை அறிக்கை கொலை என வந்தது. பிரேதப் பரிசோதனை அடிப்படையில் கணவர் சுரேஷைப் பிடித்த போலீஸார் விசாரணை நடத்தினர். முடிவில் மனைவி கல்பனாவை கழுத்தை நெரித்தும், பெல்ட்டால் இறுக்கியும் கொலை செய்ததை சுரேஷ் ஒப்புக்கொண்டார்.

வேறொரு பெண்ணுடன் தனக்கு தொடர்பிருப்பதாக சந்தேகத்தின்பேரில் மனைவி கல்பனா அடிக்கடி சண்டையிட்டதாகவும், இதனால் ஏற்பட்ட ஆத்திரத்தில் அன்று கல்பனாவைத் தாக்கி அவரது கழுத்தை நெரித்து தாமே கொன்று விட்டதாகவும், பின்னர் கொலையை மறைக்க தூக்கில் மாட்டிவிட்டு தற்கொலை நாடகமாடியதாகவும் போலீஸாரிடம் சுரேஷ் ஒப்புக் கொண்டார்.

இதையடுத்து 174-வது பிரிவை 302-வது பிரிவாக மாற்றி கொலை வழக்கின் கீழ் சுரேஷைப் போலீஸார் கைது செய்தனர்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here