புத்தரின் சேலை கட்டிய இளம் பெண் சட்டத்தரணியை ஒளிந்திருந்து ஒளிப்படம் எடுத்த பொலிசார்: நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பு!

நேற்று முன்தினம் புத்தரின் உருவம் பொறித்த சேலை அணிந்து நீதிமன்றத்திற்கு வந்து சர்ச்சையை கிளப்பிய இளம்பெண் சட்டத்தரணியை, ஒளிப்படம் எடுக்க முற்பட்ட பெண் பொலிஸ் உத்தியோகத்தரால் இன்று யாழ்ப்பாணம் நீதிமன்ற வளாகத்துக்குள் பெரும் பரபரப்பும், குழப்பமும் ஏற்பட்டது.

இளம்பெண் சட்டத்தரணி செல்வி நாகநாதன் தக்ஷாமினி புத்தரின் உருவப்படம் பொறித்த சேலை அணிந் வந்ததால் அவரை நேற்று முன்தினம் பொலிசார் கைது செய்ய முயன்றனர். பின்னர் அவர் பொலிஸ் நிலையத்தில் வாக்குமூலமளித்தார்.

இந்தநிலையில், இன்று யாழ்ப்பாணம் நீதிமன்றக் கட்டடத் தொகுதியின் பிரதான நுழைவாயில் பகுதியில் முற்பகல் 11.35 மணியளவில் பெண் பொலிஸ் உத்தியோகத்தர் தனது கைபேசியில் ஒளிப்படம் எடுத்தார்.

எதேச்சையாக திரும்பிப்பார்த்த சட்டத்தரணி, பொலிஸ் உத்தியோகத்தர் தன்னை ஒளிப்படம் எடுப்பதை அவதானித்த சட்டத்தரணி, அது தொடர்பில் கேள்வி எழுப்பினார். எனினும், ஒளிப்படம் எடுக்கவில்லையென, பெண் பொலிஸ் உத்தியோகத்தர் மறுத்தார்.

அவரிடமிருந்து கைத்தொலைபேசியை பெற்ற சட்டத்தரணிகள், அதை பரிசீலித்தபோது, இளம்பெண் சட்டத்தரணியின் படங்கள் இருப்பது அம்பலமானது.

சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் சி.சதீஸ்தரனிடம் சட்டத்தரணிகள் முறையிட்டனர். நீதிமன்ற வளாகத்துக்குள் இந்தப் பிரச்சினை இடம்பெற்றுள்ளதால் உரிய நடவடிக்கை எடுக்குமாறு சட்டத்தரணிகளுக்கு நீதிவான் ஆலோசனை வழங்கினார்.

இதையடுத்து, சட்டத்தரணிகள் கூடி சம்பவம் தொடர்பில் ஆராய்ந்தனர்.

இந்த நிலையில் யாழ்ப்பாணம் பொலிஸார் சட்டத்தரணிகளை சந்தித்துப் பேசினர். இரண்டு தரப்புமே ஒருமித்துப் பணியாற்றும் நிலையில் இந்த விவகாரத்தை இணக்கத்துடன் முடிப்போம் என பொலிஸார் கோரினர்.

அதனை ஏற்க சட்டத்தரணிகள் மறுத்துவிட்டனர். அத்துடன், உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி வடக்கு மாகாண பிரதிப் பொலிஸ் மா அதிபரை வரும் திங்கட்கிழமை நேரில் சந்திப்பதாக சட்டத்தரணிகள் ஒருமித்த முடிவை எடுத்தனர்.

பெண் பொலிஸ் உத்தியோகத்தரின் கைபேசி யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்ற பொலிஸ் அலுவலகரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here