கண் பார்வையை இழந்துவிட்டேன்; இறுதிக் காலத்தில் பராமரிக்க மகனை என்னிடம் கொடுங்கள்: சாந்தனின் தாயார் உருக்கமான கடிதம்!

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதாகி 27 ஆண்டுகளாக சிறை தண்டனையில் வாடும் சாந்தனை விடுவிக்குமாறு அவரது தாய் இலங்கையிலிருந்து உருக்கமான கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ள முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினி, ரவிச்சந்திரன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் ஆகிய 7 பேரையும் விடுவிக்க தமிழக அரசுக்கு அதிகாரம் அளித்து உச்ச நீதிமன்றம் சமீபத்தில் உத்தர்விட்டது. இதையடுத்து, ஏழு பேரையும் விடுவிக்கக் கோரி அமைச்சரவைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றி அதனை ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துக்கு தமிழக அரசு அனுப்பியது. இந்நிலையில், தமிழக அரசின் பரிந்துரை குறித்து மத்திய உள்துறை அமைச்சகத்தின் கருத்தை ஆளுநர் கேட்டிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இதனிடையே, சிறையில் இருக்கும் சாந்தனின் தாயார் மகேஸ்வரி இலங்கையிலிருந்து இந்தியப் பிரதமர், குடியரசுத் தலைவர், தமிழக ஆளுநர், முதல்வர், சட்ட அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தில் தனக்கு 72 வயதாவதாகக் குறிப்பிட்டுள்ள மகேஸ்வரி, தன் மகன் 27 ஆண்டுகளாக சிறையில் வாடுவதாகக் கவலை தெரிவித்துள்ளார்.

மேலும், தன் மகன் உள்ளிட்டோரை விடுதலை செய்ய பரிந்துரைத்ததற்கு தமிழக அரசுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளதாக மகேஸ்வரி தெரிவித்துள்ளார். 27 ஆண்டுகளாக தன் மகனைப் பார்க்கவில்லை எனவும், சாந்தனின் கடந்த 2013 ஆம் ஆண்டு சாந்தனின் தந்தை தில்லையம்பலம் மாரடைப்பால் இறந்து விட்டதாகவும், தனக்கு ஒற்றைக் கண் பார்வை வலுவிழந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

தன் இறுதிக்காலத்தில் தன்னை பராமரிக்கவாவது மகனை தன்னிடம் அளிக்கும்படி மன்றாடி வேண்டிக் கொள்வதாக அக்கடிதத்தில் மகேஸ்வரி உருக்கத்துடன் தெரிவித்துள்ளார்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here