இரட்ணஜீவன் கூல் விவகாரம்: வி.மணிவண்ணனுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்!

தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர் பேராசிரியர் இரட்ணஜீவன் கூலை அச்சுறுத்திய குற்றச்சாட்டு வழக்கில், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் சட்டத்தரணி வி. மணிவண்ணனுக்கு எதிராக குற்றப்பத்திரிகை யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் இன்று தாக்கல் செய்யப்பட்டது.

தம் மீதான குற்றச்சாட்டை வி.மணிவண்ணன் மறுத்தார். அதனால் வழக்கு வரும் ஒக்டோபர் 5ஆம் திகதிக்கு விளக்கத்துக்காக நியமிக்கப்பட்டுள்ளது.

கடந்த உள்ளூராட்சித் தேர்தலின் போது,  தமிழ் தேசிய பேரவையின் தேர்தல் அறிக்கை கடந்த ஜனவரி மாதம் 17ஆம் திகதி நல்லூர் இளஞ்கலைஞர் மண்டபத்தில் வெளியிடப்பட்டது. அந்த நிகழ்வில் உரையாற்றிய தமிழ் தேசிய பேரவையின் யாழ். மாநகர சபைக்கான முதல்வர் வேட்பாளர் வி.மணிவண்ணன், “ தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்குச் சார்பாக பல்வேறு கட்டுரைகளை எழுதிய ஒருவரை தேர்தல்கள் ஆணைக்குழுவின் அதிகாரி ஆக்கியிருக்கின்றார்கள். இலங்கை தேர்தல்கள் ஆணைக்குழுவில் அதிகாரியான ரட்ணஜீவன் எச். ஹுலிற்கு அரசால் வழங்கப்பட்டிருக்கின்ற பணி எம்மை நீதிமன்றங்களில் நிறுத்துவதே’ என்று பகிரங்கமாகக் குற்றஞ்சாட்டியிருந்தார்.

தேர்தல் ஆணைக்குழுவின் அதிகாரியாக நியமிக்கப்படுவதற்கு முன்பாக தமிழ் தேசிய கூட்டமைப்பை ஆதரித்து ரட்ணஜீவன் கூல் ஆங்கில பத்திரிகைகளில் கட்டுரைகள் எழுதியிருந்தார்.

மணிவண்ணனில் குற்றச்சாட்டையடுத்து, தம் மீது அவதூறு பரப்பப்பட்டதாக யாழ்ப்பாணம் பிரதிப் பொலிஸ்மா அதிபரிடம் இரட்ணஜீவன் கூல் முறைப்பாடு வழங்கியிருந்தார். இந்த விடயத்தில் உரிய விசாரணைவேண்டும் எனவும் பிரதிப் பொலிஸ்மா அதிபரிடம் அவர் கேட்டிருந்தார்.

அத்துடன், அந்தக் காலப்பகுதியில் சட்டத்தரணி வி.மணிவண்ணன் நடத்திய பத்திரிகையாளர் சந்திப்பிலும் தன்னை அச்சுறுத்தும் வகையில் கருத்துக்களைத் தெரிவித்தார் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர் ரட்ணஜூவன் கூல் பொலிஸில் முறைப்பாடு வழங்கியிருந்தார்.

அது தொடர்பில் விசாரணைகளை ஆரம்பிக்குமாறு யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் தேர்தலுக்குப் பொறுப்பாக இயங்கும் பிரிவுக்கு பிரதிப் பொலிஸ்மா அதிபர் கட்டளை வழங்கியிருந்தார்.

சம்பவம் தொடர்பில் வி.மணிவண்ணன் உள்ளிட்டவர்களிடம் பொலிஸார் வாக்குமூலங்களைப் பெற்றிருந்தனர்.

முறைப்பாடு தொடர்பில் இணங்கிச் செல்வதற்கு முறைப்பாட்டாளரான இரட்ணஜீவன் கூல் மறுப்புத் தெரிவித்தார். அதனால் வி.மணிவண்ணனுக்கு எதிராக யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் பொலிஸார் வழக்குத் தொடர்ந்தனர்.

இந்த வழக்கு யாழ்ப்பாணம் நீதிமன்றில் நீதிவான் சி.சதீஸ்தரன் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. முறைப்பாட்டாளர் மன்றில் தோன்றினார்.

எதிராளியான சட்டத்தரணி வி.மணிவண்ணன் மன்றில் முன்னிலையானார். அவர் சார்பில் சட்டத்தரணி கு.குருபரன் முற்பட்டார்.

குற்றவியல் சட்டக்கோவை 486ஆம் பிரிவின் கீழ் ஆள் ஒருவரை அச்சுறுத்தியதாக சட்டத்தரணி மணிவண்ணனுக்கு எதிராக பொலிஸார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.

குற்றப்பத்திரிகை மன்றில் வாசித்துக் காண்பிக்கப்பட்டது. குற்றஞ்சாட்டப்பட்டவரான் வி.மணிவண்ணன் சுற்றவாளி என மன்றுரைத்தார்.

அதனால் வழக்கை விளக்கத்துக்கு நியமிப்பதாக நீதிவான் சி.சதீஸ்தரன் அறிவித்தார்.

வழக்கை விரைந்து முடிப்பதற்கு குறிகிய காலத்தில் தவணையிடுமாறு வி.மணிவண்ணன் சார்பில் மன்றில் கோரப்பட்டது.

அதனை ஏற்றுக்கொண்ட மன்று, வரும் ஒக்டோபர் 5ஆம் திகதி வழக்கை விளக்கத்துக்கு நியமித்தது.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here