இணக்கப்பாட்டை நெருங்கும் அமைச்சரவை சர்ச்சை… சட்டத்தரணிகள் பேச்சு நடத்த தீர்மானம்!

வடக்கு அமைச்சரவை சர்ச்சைக்கு சுமுகமான தீர்வு காண்பதற்கான வாய்ப்புக்கள் தென்பட ஆரம்பித்துள்ளன. விவகாரத்தில் சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரும் ஒரு இணக்கப்பாட்டிற்கு வரும் ஆர்வத்தையும், இணக்கப்பாட்டையும் வெளிப்படுத்தியுள்ளதை தமிழ்பக்கம் நம்பகரமாக அறிந்துள்ளது.

பா.டெனீஸ்வரன் விவகாரத்தில் சுமுகமான இணக்கப்பாட்டை ஏற்படுத்த வடக்கு அவைத்தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் முயற்சியொன்றை ஆரம்பித்துள்ளார் என்ற தகவலை நேற்று முன்தினமே தமிழ்பக்கத்தில் வெளியிட்டிருந்தோம். முதலமைச்சர், பா.டெனீஸ்வரன், ஆளுனர் ஆகியோருடன் நேற்று முன்தினம் சீ.வீ.கே.சிவஞானம் பேச்சு நடத்தியிருந்தார்.

இதன் தொடர்ச்சியாக நேற்றும், இன்றும் முதலமைச்சர் மற்றும் டெனீஸ்வரன் தரப்புடன் வடக்கு அவைத்தலைவர் பேச்சு நடத்தியிருந்தார்.

இதையடுத்து நேற்று வடக்கு முதலமைச்சர் தனது சட்டத்தரணி கனகஈஸ்வரனுடன் கலந்துரையாடியிருந்தார். முதலமைச்சர் தரப்பு ஒரு முடிவை அறிவித்து, அதன்படி செயற்பட்டாலும் இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட மற்றைய இரண்டு தரப்புக்களான டெனீஸ்வரன் மற்றும் சத்தியலிங்கம் தரப்பு சட்டத்தரணிகளான சுரேன் பெர்ணான்டோ, எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் எப்படியான நிலைப்பாடு எடுப்பார்கள் என்பது தெரியாது, வழக்கு தினத்தில் திட்டத்திற்கு மாறாகவும் செயற்பட கூடும், அனைவரும் ஒன்றாக உட்கார்ந்து பேசி முடிவெடுப்பதே சிறந்தது என முதலமைச்சரின் சட்டத்தரணியால் ஆலோசனை கூறப்பட்டது.

இதை முதலமைச்சர் இன்று சீ.வீ.கே.சிவஞானத்திடம் தெரிவித்திருந்தார். அதையடுத்து, டெனீஸ்வரனுடன் பேசிய அவைத்தலைவர், டெனீஸ்வரன் தரப்பு சட்டத்தரணியும், சத்தியலிங்கம் தரப்பு சட்டத்தரணியையும் கொழும்பில் சந்தித்து பேசுமாறு கேட்டுக் கொண்டார்.

நாளை யாழில் நடக்கும் நினைவுப்பேருரைக்காக சுமந்திரன் இன்றிரவே கொழும்பிலிருந்து புறப்படுவதால், நாளை சனிக்கிழமை அந்த சந்திப்பு நடக்க வாய்ப்பில்லை. அனேகமாக வரும் திங்கள் கிழமை- 17ம் திகதி- கொழும்பில் அந்த சந்திப்பு நடக்கலாமென தெரிகிறது.

இந்த விவகாரத்தை எப்படி சுமுகமாக தீர்ப்பதென கனகஈஸ்வரன், சுரேன் பெர்ணான்டோ, எம்.ஏ.சுமந்திரன் ஆகிய மூவரும் ஒன்றாக உட்கார்ந்து, இந்த விவகாரத்தை எப்படி இணக்கப்பாட்டுடன் முடிப்பதென ஆராய்ந்து முடிவொன்றை எட்டவுள்ளதாக தெரிகிறது.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here