அரசாங்கத்திற்கு நல்லெண்ணத்தை வெளிப்படுத்தும் விதமாகவே பாதுகாப்பு அமைச்சின் நிதி ஒதுக்கீட்டு விவகாரத்தில் எதிர்த்து வாக்களிக்காமல், வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாமல் வெளியேறியதாக இலங்கை தமிழ் அரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தமிழ்பக்கத்திடம் தெரிவித்தார்.
2021 வரவு செலவு திட்டத்தில் பாதுகாப்பு அமைச்சின் ஒதுக்கீடுகள் மீதான விவாதத்தின் இறுதியில் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் வாக்கெடுப்பை கோரியது. இதன்போது, நாடாளுமன்றத்தில் பிரசன்னமாகியிருந்த இலங்கை தமிழ் அரசு கட்சியின் சி.சிறிதரனி, சாள்ஸ் நிர்மலநாதன், சாணக்கிய ராகுல ராஜபுத்திரன், த.கலையரசன் ஆகியோர் உடனடியாக சபா மண்டபத்திலிருந்து வெளியேறி சென்றனர்.
கடந்த நவம்வர் மாவீரர்தினம், கார்த்திகை விளக்கீட்டில் பாதுகாப்பு தரப்பினர் தமிழ் மக்களுடன் நடந்து கொண்ட விதம் குறித்து நாடாளுமன்றத்தில் பல கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்தன. இந்த நிலையில் பாதுகாப்பு அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் மீதான வாக்கெடுப்பில் எதிராக வாக்களித்து, தமிழ் அரசு கட்சி எதிர்ப்பை வெளிப்படுத்துமென எதிர்பார்க்கப்பட்ட நிலையில், வாக்கெடுப்பு நடக்கும் இடத்திலிருந்தே வெளியேறி சென்றனர்.
கடந்த 2 நாட்களாக இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை உருவாக்கியுள்ள நிலையில், இது தொடர்பில் இலங்கை தமிழ் அரசு கட்சியின் எம்.பியொருவர் தமிழ்பக்கத்திடம் விளக்கமளித்தார்.
கோட்டாபய ராஜபக்ச அரசிற்கு நல்லெண்ணத்தை வெளிப்படுத்தவே, எதிர்த்து வாக்களிக்காமல் தவிர்த்ததாக தெரிவித்தார்.
இதேவேளை, மாவீரர்தினத்திற்கு முன்னதாக- மாவீரர்தினத்திற்கு அனுமதி கோரி கோட்டாபய ராஜபக்சவிற்கு சி.சிறிதரன் கடிதமெழுதியபோதும், கோட்டா அதை கணக்கிலெடுத்திருக்கவில்லையென்பது குறிப்பிடத்தக்கது.