பாகிஸ்தானுக்குள் நுழைந்து நடத்திய தாக்குதலில் நாய்களை விரட்ட உதவிய சிறுத்தையின் சிறுநீர்!

பாகிஸ்தானுக்குள் புகுந்து துல்லிய தாக்குதல் நடத்திய இந்திய ராணுவ வீரர்கள், நாய்களை விரட்டுவதற்காக சிறுத்தையின் சிறுநீர், கழிவு ஆகியவற்றை பயன் படுத்தியது தெரியவந்துள்ளது.

பாகிஸ்தான் தீவிரவாதிகள் காஷ்மீருக்குள் அத்து மீறி நுழைந்து தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், கடந்த 2016-ம் ஆண்டு செப்டம்பர் 29-ம் தேதி நமது ராணுவ அதிரடிப்படை வீரர்கள் எல்லையைத் தாண்டி பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிக்குள் சுமார் 15 கி.மீ. தூரம் ஊடுருவிச் சென்று அங்கிருந்த தீவிரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தினர். இதில், பல தீவிரவாதிகள் பலியாயினர்.

ரகசியமாக நடந்த இந்த துல்லிய தாக்குதலில், அப்போதைய நக்ரோடா படைத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ராஜேந்திர நிம்போர்கர் முக்கிய பங்கு வகித்தார். ஆனால் இந்தத் தாக்குதல் குறித்த விவரங்களை வெளிப்படையாக தெரிவிக்க அப்போதைய ராணுவ தளபதி தல்பீர் சிங் சுஹாக் மறுத்துவிட்டார்.

இதனால் இந்தத் தாக்குதலின் உண்மைத் தன்மை குறித்து எதிர்க் கட்சிகள் கேள்வி எழுப்பினர். ஆதாரத்தை வெளியிடுமாறு கோரினர். இந்நிலையில் இந்த துல்லிய தாக்குதல் தொடர்பான வீடியோ காட்சியின் ஒரு பகுதி கடந்த ஜூன் மாதம் தொலைக்காட்சி சேனல்களில் வெளியானது. நமது ராணுவத்தின் சிறப்பு அதிரடிப்படை யினர், எல்லையைக் கடந்து சென்று எப்படி தாக்குதல் நடத்தினர் என் பதை இந்த வீடியோ விளக்குகிறது.

இந்நிலையில் மகாராஷ்டிர மாநிலம் புனே நகரைச் சேர்ந்த தோர்ல் பாஜிராவ் பெஷ்வே பிரதிஸ்தான் அமைப்பின் சார்பில், கடந்த 11ம் திகதி நடந்த நிகழ்ச்சியில், துல்லிய தாக்குதலை பாராட்டி நிம்போர்கருக்கு விருது வழங்கப் பட்டது.

இந்தத் தாக்குதல் குறித்து ராஜேந்திர நிம்போர்கர் கூறிய தாவது:

பாகிஸ்தான் பகுதியில் உள்ள தீவிரவாத முகாம்கள் மீது ஒரு வாரத்தில் தாக்குதல் நடத்த வேண்டும் என அப்போதைய பாதுகாப்பு அமைச்சர் மனோகர் பாரிக்கர் கேட்டுக்கொண்டார். இதுகுறித்து வீரர்களுடன் ஆலோசனை நடத்தினேன். ஆனால், எந்த இடத்தில் தாக்குதல் நடத்த வேண்டும் என்பது பற்றி ஒரு நாள் முன்புதான் அவர்களிடம் தெரிவித்தேன்.

இதனிடையே, தீவிரவாதிகளின் முகாம்கள் எங்கெங்கு உள்ளன என்பதை அடையாளம் கண்டோம். அவர்கள் முகாமுக்கு எந்த நேரத்தில் வருகிறார்கள் என்பதை ஆய்வு செய்து, அதற்கேற்ப அதிகாலை 3.30 மணிக்கு தாக்குதல் நடத்துவது என முடிவு செய்தோம். இதன்படி, நமது வீரர்கள் முன் கூட்டியே அப்பகுதிக்குச் சென்று காத்திருந்து தாக்கினர். இதில் 3 முகாம்கள் அழிக்கப்பட்டதுடன் 29 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.

மேலும் துல்லிய தாக்குதலுக்கான திட்டம் தீட்டியபோது, எல்லையைத் தாண்டி கிராமங்கள் வழியாக செல்லும்போது நாய்கள் குரைக்கவும் தாக்கவும் வாய்ப்பு உண்டு என்பதை அறிந்திருந்தோம். இதனிடையே, அப்பகுதியில் நாய்களை சிறுத்தைகள் அடிக்கடி தாக்கும் என்பதும் இதற்காக நாய்கள் இரவில் வெளியில் நடமாடுவதில்லை என்றும் தெரியவந்தது. இதன் அடிப்படையில், தாக்குதலில் ஈடுபட்ட வீரர்கள் சிறுத்தையின் சிறுநீர் மற்றும் கழிவை எடுத்துச் சென்றனர். இதன் துர்நாற்றத்தால் நாய்கள் வராது என்று கருதி கிராமங்களுக்கு வெளிப்புறத்தில் இதைத் தெளித்தனர். இதனால், நாய்களின் தொல்லையின்றி வீரர்கள் தாக்குதலை நடத்தினர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here