பாதுகாப்பு அமைச்சின் நிதி ஒதுக்கீட்டை எதிர்த்ததால் ரெலோவுடன் கோபம் போட்ட தமிழ் அரசு எம்.பிக்கள்: நாடாளுமன்றத்திற்குள் முகத்தை திருப்பும் சுவாரஸ்யம்!

வரவு செலவு திட்டத்தில் பாதுகாப்பு அமைச்சின் நிதி ஒதுக்கீடு மீதான வாக்கெடுப்பை தொடர்ந்து தமிழ் தேசிய கூட்டமைப்பிற்குள் களேபரம் வெடித்துள்ளது. வாக்கெடுப்பில் கலந்து கொண்டு எதிர்த்து வாக்களித்த ரெலோ தரப்பினருடன், “கோபம் போட்டுள்ளனர்“ தமிழ் அரசு கட்சியினர்.

பாதுகாப்பு அமைச்சிற்கான நிதி ஒதுக்கீட்டு விவாதத்தை தொடர்ந்து, அதன் மீதான வாக்கெடுப்பு கோரிக்கையை அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் தரப்பில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வைத்தார்.

அவர் வாக்கெடுப்பு கோரிக்கை வைத்ததும், சபையிலிருந்து தமிழ் அரசுக்கட்சி எம்.பிக்களான சி.சிறிதரன், சாள்ஸ் நிர்மலநாதன், சாணக்கிய ராகுல ராஜபுத்திரன், த.கலையரசன் ஆகியோர் வெளியேறி சென்றனர்.

மாவீரர்தினம், கார்த்திகை விளக்கீட்டில் பாதுகாப்பு தரப்பு நடந்து கொண்ட முறை தொடர்பில் எதிர்ப்பை தெரிவிக்கவும் ஒரு வாய்ப்பாக பயன்படுத்தி பாதுகாப்பு அமைச்சிற்கான ஒதுக்கீட்டை 5 தமிழ் எம்.பிக்கள் எதிர்த்து வாக்களித்தனர். தமிழ் காங்கிரசின் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செல்வராசா கஜேந்திரன், தமிழீழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) செல்வம் அடைக்கலநாதன், கோவிந்தம் கருணாகரன், வினோ நோகராதலிங்கம் ஆகியோர் எதிர்த்து வாக்களித்தனர்.

அதற்கு பின்னர்தான் விடயமே ஆரம்பித்துள்ளது.

ஏதோ “சில காரணங்களினால்“ தமிழ் அரசு கட்சி எம்.பிக்கள் பாதுகாப்பு அமைச்சின் வரவு செலவு திட்டத்தை எதிர்த்து வாக்களிக்க விரும்பவில்லை. எதிர்த்து வாக்களித்த தமிழ் எம்.பிக்களையும் அவர்களிற்கு பிடிக்கவில்லை.

கடந்த 2 நாட்களாக நாடாளுமன்றத்தில் ஒரு சுவாரஸ்ய சம்பவம் நடக்கிறது.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் பங்காளிக்கட்சிகளில் ஒன்றான ரெலோவின் எம்.பிக்கள், இன்னொரு பங்காளிக்கட்சியான தமிழ் அரசு கட்சியின் எம்.பிக்களுடன் பேச முயன்றாலும், அவர்கள் முகத்தை திருப்பிக் கொண்டு இடத்தை காலி செய்து விடுகிறார்கள். அல்லது தாங்கள் இருக்கும் இடத்திற்கு ரெலோ எம்.பிக்கள் வருவதை கண்டாலே இடத்தை காலி செய்து விடுகிறார்கள். சிறிதரன், சாணக்கியன் போன்றவர்கள்தான் இதில் முக்கியமாக “கோபம் போட்டுள்ளனர்“.

பாதுகாப்பு அமைச்சிற்கான ஒதுக்கீட்டை எதிர்த்ததில் கோட்டா அரசை விட, தமிழ் அரசு கட்சி எம்.பிக்களிற்கு வந்த கோபத்தின் சூட்சுமம்தான் இன்னும் புரியவில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here