தோல்வியுற்றது அரசா?அரசாங்கமா?: ஆங்கிலம் நன்றாக தெரியுமென்றார் சஜித்!

தோல்வியுற்ற அரசா? அல்லது அரசாங்கமா? என்ற விடயத்தில் நாடாளுமன்றத்தில் சபாநாயகருக்கும் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவுக்குமிடையில் வாக்குவாதம் இடம்பெற்றது.

நாடாளுமன்றத்தில் இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற அடுத்த வருடத்துக்கான வரவு – செலவு திட்டத்தில் கைத்தொழில், வர்த்தக அமைச்சுகள் மற்றும் இராஜாங்க அமைச்சுகளுக்கான நிதி ஒதுக்கீடு தொடர்பிலான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு ஆங்கிலத்தில் உரையாற்றிக்கொண்டிருந்தார்.

இதன்போது ஒரு சந்தர்ப்பத்தில் அவர், அரசாங்கத்தின் பொருளாதார கொள்கை தொடர்பில் தெரிவிக்கும்போது வடகொரியாவின் பொருளாதார நிலைக்கே எமது பொருளாதாரம் செல்லும். அது தோல்வியடைந்த அரசு என தெரிவித்திருந்தார்.

சஜித் பிரேமதாசவின் பேச்சு நிறைவடைந்ததும் சபாநாயகர், உங்களது பேச்சில் தோல்வியடைந்த அரசு என தெரிவித்தீர்கள். அதனால் அந்த வார்த்தையை நீக்குகின்றேன் என்றார்.

அதனைத்தொடர்ந்து, சஜித் பிரேமதாச எழுந்து ‘நான் ஒருபோதும் தோல்வியுற்ற அரசு என தெரிவிக்கவில்லை. தோல்வியுற்ற அரசாங்கம் என்றே தெரிவித்தேன்’ என்றார்.<

எனினும், சபாநாயகர், தோல்வியுற்ற அரசு என கூறக் கேட்டேன் என்றார்.

அரசுக்கும், அரசாங்கத்திற்கும் உள்ள வித்தியாசம் தனக்கு நன்கு தெரியுமென்றும், ஆங்கிலத்தை தான் அறிந்து வைத்திருக்கிறேன் என்றும் சஜித் குறிப்பிட்டார்.

அதனைத்தொடர்ந்து கஜேந்திரகுமார் பொன்னம்பலம் எழுந்து, ‘தோல்வியுற்ற அரசு என தெரிவித்திருந்தால், அதனை எந்த அடிப்படையில் நீக்கமுடியும்? அதனை நீக்குவதற்கான நிலையியற் கட்டளை என்ன? இது தோல்வியுற்ற அரசு என நான் எனது பேச்சில் தெரிவித்தால் அதனை உங்களால் எப்படி நீக்கமுடியும்? அது எனது நிலைப்பாடு. சட்டத்தின் பிரகாரம் எனது நிலைப்பாட்டை தெரிவிக்கும் சுதந்திரம் எனக்கு இருக்கின்றது’ என்றார்.

இராஜங்க அமைச்சர் தயாசிறி ஜயசேக எழுந்து, ‘இலங்கை தோல்வியடைந்த இராஜ்ஜியம் என காண்பிக்க தேவையாக இருக்கின்றது. அதனால்தான் பொன்னம்பலம் எம்.பியும் ஆதரவாக பேசுகின்றார்’ என்றார்.

மீண்டும் எழுந்த சஜித் பிரேமதாச, ‘எனக்கு யாருடைய ஆதரவும் தேவையில்லை. என்னால் தனித்து செயற்படும் அளவுக்கு எனது முதுகெலும்பு உறுதியாக இருக்கின்றது’ என்றார்.

இறுதியில் சபாநாயகர், ‘சரி, நீங்கள் அவ்வாறு தெரிவிக்கவில்லை என்றால் அதனை விட்டுவிடுவோம்’ என தெரிவித்து சபையை தொடர்ந்து கொண்டு சென்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here