வடமராட்சி மீனவர்களது வாழ்வாதாரத்தை புரட்டிப் போட்ட புரேவி!

எதிர்பாராத பயணப்பாதை மாறுதல்களுடன் கடந்து சென்ற ‘புரேவி’ புயலானது வடமாராட்சி மீனவர்களது வாழ்க்கையையும் புரட்டிப்போட்டுச் சென்றுள்ளது.

நேற்றுமுன் தினம் (புதன்) மாலை முதல் கடல் மிகவும் கொந்தளிப்பாக காணப்பட்ட நிலையில் புதன் இரவு 9 மணி முதல் கடும் சீற்றத்துடன் காணப்பட்டது. மிகவும் பலமான காற்றுடன் கடுமையான மழையின் தாக்கம் இருந்ததுடன் கடல் மிகவும் கொந்தளிப்புடன் காணப்பட்டது.

கடல் அலையானது கரையோர அணைக்கட்டை பலமாகத் தாக்கியதுடன் பல அடி உயரமாக எழும்பி வீதியில் வந்து விழுந்தது. இவ்வாறு திடீரென ஏற்பட்ட கடற்கொந்தளிப்பால் வடமராட்சி கரையோரப்பகுதி மிகப்பலத்த சேதத்தை சந்திதுள்ளது.

குறிப்பாக வடமராட்சி கரையோரப்பகுதிகளில் வசித்துவரும் மீனவர்களது வாழ்வாதாரம் பெரும் அழிவுக்குள்ளாகியுள்ளது. கடல் கொந்தளிப்பில் கடற்கரையில் கட்டப்பட்டிருந்த படகுகள் அடித்துச் செல்லப்பட்டும், படகுகளுக்குள் தண்ணீர் நிறைந்து தாண்டும் பலத்த சேதமேற்பட்டுள்ளது.

அத்துடன் பல இலட்சம் பெறுமதியான மீன்பிடி வலைகளும் கடல் அலையில் அள்ளுண்டு போயுள்ளது. இரவிரவாக படகுகளை மேலிழுக்கும் நடவடிக்கையில் ஈடுபட்ட போதிலும் சில படகுகள் கடல் அலைகளால் இழுத்துச் செல்லப்பட்டு காணாமல் போயுள்ளதாக பருத்திதுறை சுப்பர்மடம் பகுதி மீனவர்கள வேதனையுடன் தெரிவித்தனர்.

பருத்தித்துறை முனை பகுதி தொடக்கம் தொண்டைமானாறு வரையான கரையோரப்பகுதியில் சுமார் 25 இற்கும் அதிகமான படகுகள் சேதமடைந்துள்ள நிலையில் அவற்றில் பெருமளவான படகுகள் மீளவும் பயன்படுத்த முடியாதவகையில் பலத்த சேதத்திற்குள்ளாகியுள்ளது.

புரேவி புயல் காரணமாக ஏற்பட்ட இக்கடற் கொந்தளிப்பினால் பருத்தித்துறை சுப்பர்மடம், வியாபாரிமூலை மயிலிட்டித்துறை, வல்வெட்டித்துறை ஆதிகோவிலடி மற்றும் தொண்டைமானாறு ஆகிய இடங்களைச் சேர்ந்த மீனவர்களது படகுகள், மீன்பிடி வலைகள் உள்ளிட்ட பல இலட்சம் பெறுமதியான உடமைகள் அழிவடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

தடைசெய்யப்பட்ட மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டுவரும் உள்ளூர் மற்றும் தென்னிலைங்கை மீனவர்களாலும், இந்திய இழுவைப்படகுகளின் அட்டூழியத்துக்கு மத்தியில், போர்காலத்தின் பின்னர் தமது வாழ்வாதாரத்தை கொஞ்சம் கொஞ்சமாக மீள கட்டியெழுப்பி வரும் நிலையில் இந்த புரேவி புயல் ஏற்படுத்திய பாதிப்பு மரமேறி விழுந்தவனை மாடேறி மிதித்தகதையாக பெரும் அவலத்தை ஏற்படுத்தியிருப்பதாக மீனவர்கள் மிகுந்த விரக்தியுடன் தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here