அம்பாறை மக்கள் துரோகிகளல்ல; கருணாவை நம்பி ஏமாந்து விட்டனர்: காரைதீவு தவிசாளர்!

தமிழ் மக்களை ஏமாற்றிய கருணா அம்மான் தனக்கு வாக்களித்த மக்களை துரோகிகள் என கூறுவதை ஏற்கமுடியாது என காரைதீவு பிரதேச சபை தவிசாளர் ஜெயசிறில் குறிப்பிட்டார்.

அம்பாறை மாவட்டம் கல்முனை பிரதேச செயலக கணக்காளர் நிறுத்தப்பட்டமை தொடர்பாக காரைதீவு பகுதியில் இன்று(4) மாலை இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

அமைச்சரவையில் அங்கீகாரம் பெற்று கணக்காளர் நியமிக்கப்பட்டுள்ள நிலையில் இனவாத அரசியல் செயற்பாட்டிற்காக கணக்காளரை இடைநிறுத்துமாறு முட்டுக்கட்டை போட்டு சில அரசியல் வாதிகள் செயற்படுகின்றனர். குறிப்பாக 29 கிராம சேவகர் பிரிவு கொண்ட கல்முனை வடக்கு பிரதேச செயலகம் மக்களுக்காக தரமுயர்த்தப்பட வேண்டும். இச்செயலகத்தை தரமுயர்த்துவதற்காக தமிழ் தேசிய கூட்டமைப்பினர் பாராளுமன்றத்தில் இவ்விடயம் தொடர்பில் பேசியிருந்தனர். ஆனால் இனவாத அரசியலுக்கூடாக வந்தவர்கள் 20 அரசியல் திருத்த சட்டமூலம் வாக்கெடுப்பில் கல்முனை வடக்கு பிரதேச செயலகம் தரமுயர்த்தபட கூடாது என்பதற்காக பல்டியடித்து வாக்களித்தவர் இந்த கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை வைத்து அரசியல் செய்கின்றனர்.

இவ்விடயத்தில் முன்னாள் பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரனிடம் நான் ஒன்றினை கேட்க விரும்புகின்றேன்.

கடந்த பாராளுமன்ற தேர்தல் காலகட்டத்தில் இந்த கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை தரமுயர்த்தி தருவதாக கூறியிருந்தார். ஆனால் இந்த விடயத்தில் எவ்வித முன்னெடுப்பும் மேற்கொண்டதாக அறிய முடியவில்லை. குறிப்பாக அம்பாறை மாவட்டத்தில் அலுவலகம் ஒன்றினை திறந்து வைத்து உரையாற்றிய அவர் கடந்த தேர்தலில் 30 ஆயிரம் மக்கள் தனக்கு வாக்களித்துள்ளதாகவும் அதனால் கருணா அம்மானை துரோகி என்று வெளிநாட்டு புலம்பெயர்வாளர்கள் கூற முடியாது. அப்படியாயின் தக்கு வாக்களித்த 30 ஆயிரம் மக்களும் துரோகிகள் என கூறி இருந்தார். நான் கூறுகின்றேன், இவருக்கு வாக்களித்த 30 ஆயிரம் மக்களும் துரோகிகள் அல்லர்.

கடந்த பாராளுமன்ற தேர்தலில் தமிழ் மக்கள் வாக்குறுதிகளை நம்பி ஏமாந்தார்களெ தவிர அவர்கள் துரோகிகள் அல்லர். தற்போது பிரதமரின் இணைப்பாளராக உள்ள நீங்கள் கல்முனை தரமுயர்விற்கு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. நீங்கள் அளித்த அறிக்கைகள் யாவும் காற்றில் பறந்து விட்டது. ஆனால் உங்களுக்கு வாக்களித்த மக்களை துரோகிகள் என நீங்கள் கூற முடியாது. உங்களின் பசப்பு வார்த்தைகளை நம்பி தான் அம்மக்கள் வாக்களித்தனர். இன்று எமது மக்கள் நன்கு சிந்திக்கின்றார்கள். அம்பாறை மாவட்டத்தில் பல்வேறு அபிவிருத்திகளை முன்னெடுப்பதாக கூறி வரும் நீங்கள் கல்முனை வடக்கு பிரதேச செயலக கணக்காளரை சில அரசியல்வாதிகள் தடுத்து நிறுத்துள்ளதை ஏன் உங்களால் தடுக்க முடியவில்லை.

இதுவரைக்கும் கல்முனை வடக்கு பிரதேச செயலகம் தொடர்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் தான் குரல் எழுப்பியுள்ளனர். இதுவரைக்கும் இப்பிரதேச செயலகம் குறித்து எந்தவொரு நடவடிக்கையும் எடுக்காத நீங்கள் எதிர்வரும் தேர்தலிலாவது தமிழ் மக்களை பிரிக்காது செயற்படுங்கள். அம்பாறை மாவட்டத்திற்காக தமிழ் தேசிய கூட்டமைப்பினர் தேசிய பட்டியல் ஒன்றையும் தந்துள்ளனர். இனியாவது இனங்களுக்கிடையில் பிளவுகளை ஏற்படுத்தாது செயற்பட முன்வர வேண்டும்.

இந்த அரசாங்கள் இனவாதம் கதைப்போரை ஒதுக்கி வைப்போம் என கூறிய போதிலும் இனவாதம் பேசுபோரை தான் உள்வாங்கி கொண்டிருக்கின்றீர்கள். சிங்கள மக்களுடன் தமிழ் மக்கள் இணைந்து வாழ ஆசைப்படுகின்றார்கள். 29 கிராம சேவகர் பிரிவினை கொண்ட கல்முனை வடக்கு பிரதேச செயலகம் தரமுயர்த்தப்பட வேண்டும். இத்தரமுயர்த்தலுக்காக கடந்த ஜனாதிபதி தேர்தலிலும் கல்முனை வாழ் மக்கள் 7 ஆயிரம் வாக்குகளை அள்ளி வழங்கி இருந்தனர். ஒரு சில அரசியல் வாதிகள் போடுகின்ற தடைகளை நிராகரித்து கல்முனை வடக்கு பிரதேச செயலகம் தரமுயர்த்தப்பட வேண்டும். தரமுயர்த்தப்படாவிடின் கோரோனா காலகட்டம் சுமூக நிலைக்கு வருகின்ற பட்சத்தில் பல்வேறு போராட்டங்களை முன்னெடுக்க தயாராகவுள்ளோம்.

இந்த விடயத்தில் தமிழர்களின் உரிமை பறிக்கப்படுமாயின் அனைத்த மக்களும் உண்ணாவிரதத்தை முன்னெடுப்பர். எமது மக்கள் சொந்த நிலமில்லாமல் ஒரு கணக்காளர் இல்லாமல் அபிவிருத்தி சார்ந்த முன்னெடுப்பு இல்லாமல் புறக்கணிக்கப்பட்டவாறு மக்கள் வாழ்கின்றனர் என்றார்.

-பா.டிலான்-

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here