ஜப்பானின் கோடீஸ்வர குடும்பமொன்றிலிருந்து 15 வயது சிறுமியை இலங்கைக்கு கடத்தி வந்த இளைஞனிற்கு நீர்கொழும்பு நீதிமன்றம் நேற்று பிணை வழங்கியது.
500,000 ரூபா பெறுமதியான இரண்டு ஆட் பிணையில் அவர் விடுவிக்கப்பட்டுள்ளார்.
கொச்சிக்கடை, பலகதுரை பகுதியை சேர்ந்த கசுன் மதுஷங்க (24) என்பவரே பிணையில் விடுவிக்கப்பட்டார்.
கொச்சிக்கடை பொலிசாரால் இந்த இளம் தம்பதியினர் கைது செய்யப்பட்ட போது, ஜப்பானிய சிறுமி அளித்த வாக்குமூலத்தை சிங்களத்திற்கு மொழிபெயர்த்த மொழிபெயர்ப்பாளர், சிறுமியின் வாக்குமூலத்தின் முக்கிய பகுதியை பொலிசாரிடம் வெளிப்படுத்தாமல் மறைத்து வைத்ததாக, பிரதிவாதிகள் சார்பில் முன்னிலையான மூத்த சட்டத்தரணி வாரண வீரசூரிய நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
ஜப்பானிய சிறுமியின் தாய், இலங்கையை சேர்ந்த ஒருவருடன் உறவில் உள்ளார். அவர், ஒரு சுற்றுலா ஹோட்டலில் தனது தாயின் முன் தன்னை இரண்டு முறை பாலியல் பலாத்காரம் செய்ததாக ஜப்பானிய சிறுமி கொச்சிக்கடை பொலிசாரிடம் தெரிவித்திருந்தாலும், மொழிபெயர்ப்பாளர் இந்த விஷயத்தை பொலிசாரிடமிருந்து மறைத்து, சம்பவம் குறித்து விரிவான விசாரணைக்கு உத்தரவிட நீதிமன்றத்தை கேட்டுக் கொண்டார்.
சந்தேக நபருக்கு பிணை வழங்குவதில் ஏதேனும் ஆட்சேபனை உள்ளதா என்று சிறுமியின் தாய் தரப்பிடம் கேட்கப்பட்டது. தமது மகளின் காதலனிற்கு பிணை வழங்குவதை எதிர்க்கவில்லை என்று அங்கு சிறுமியின் தாய் தரப்பில் கூறப்பட்டது.
சிறுமியின் கர்ப்பம் மற்றும் பிற காரணிகளைக் கருத்தில் கொண்டபின், ஜப்பானிய பெண்ணின் தாய் தனது மகளை இலங்கை இளைஞனுடன் திருமணம் செய்து கொள்ள விருப்பம் தெரிவித்ததாகக் கூறினார். இதையடுத்து இளைஞனிற்கு பிணை வழங்கப்பட்டது.
ஜப்பானிய சிறுமியின் பாஸ்போர்ட்டை நீதிமன்றத்தில் ஒப்படைக்க உத்தரவிட்டு வழக்கை 2021 மார்ச் 18 வரை ஒத்திவைக்கப்பட்டது.