ஈரானின் அணு குண்டு ஆய்வுத்துறையின் தந்தை மொஹ்சென் ஃபக்ரிசாதே சில நாட்களுக்கு முன்னர் கொல்லப்பட்டார். இந்த நிலையில் இந்தக் கொலைக்கு பின்னணியில் இஸ்ரேல் இருப்பதாக ஈரான் தகவல் வெளியிட்டுள்ளது.
மொஹ்சென் ஃபக்ரிசாதே கடந்த 27 ஆம் திகதி தெஹ்ரானில் 80 கிலோ மீட்டர் தொலைவில் அப்சார்ட் பகுதியில் காரில் சென்றுக் கொண்டிருக்கும்போது துப்பாக்கியால் சுடப்பட்டு உயிரிழந்தார். இந்த படுகொலை ஈரானை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
முதலில் இக்கொலை துப்பாக்கிய ஏந்திய நபர்களால் நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. ஆனால் செயற்கை கோளால் கட்டுப்படுத்தப்படும் ஆயுதங்களால் மொஹ்சென் ஃபக்ரிசாதே கொல்லப்பட்டதாக ஈரான் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இது தொடர்பாக விசாரணை நடந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இத்தாக்குதலின் பின்னணியில் இஸ்ரேல் இருப்பதாகவும், இதன் காரணமாகத்தான் மேற்கத்திய நாடுகள் இந்த படுகொலைக்கு கண்டனம் தெரிவிக்க மறுத்துவிட்டன என்று ஈரான் தெரிவித்துள்ளது.
இஸ்ரேலின் இந்த செயலுக்கு அந்த நாடு கடுமையான விளைவுகளை சந்திக்கும் என்றும் ஈரான் தலைவர்கள் சபதம் ஏற்றுள்ளனர். ஆனால் இதுகுறித்த எந்த ஆதாரத்தை ஈரான் வெளியிடவில்லை.
2,000 ஆம் ஆண்டுகளில் ஈரானில் ஆணு ஆயுத புரட்சியில் முக்கிய பங்கு ஆற்றியவர் மொஹ்சென் ஃபக்ரிசாதே. இதன் காரணமாகவே அவர் ஈரானின் அணு குண்டு ஆய்வுத் துறையின் தந்தை என்று அழைக்கப்பட்டு வந்தார்.
மொஹ்சென் ஃபக்ரிசாதே படுகொலை தொடர்பாக இஸ்ரேல் இதுவரை எந்தக் கருத்தும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.