அரியாலையில் காணாமல் போன இளைஞனின் ஆள்கொணர்வு வழக்கு: இழுத்தடிக்க முயல்கிறதா சட்டமா அதிபர் திணைக்களம்?

யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் இடம்பெறும் காணாமல் ஆக்கப்பட்ட இளைஞர் தொடர்பான ஆள்கொணர்வு மனுவை இழுத்தடிக்கும் முயற்சியில் சட்ட மா அதிபர் திணைக்களம் முன்னெடுத்துள்ளா என்ற சந்தேகம் எழுப்பப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றின் கட்டளைக்கு அமைவாக, யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் முன்னெடுக்கப்படும் ஆரம்ப விசாரணைகளில் நேற்று (12) புதன்கிழமை இடம்பெற்ற முக்கிய சாட்சியப் பதிவின் போது, 5வது பிரதிவாதியான சட்ட மா அதிபர் சார்பில் அரச சட்டவாதி மன்றில் முன்னிலையாகவில்லை.

எனினும் வழக்கை இழுத்தடிக்காமல் நிறைவு செய்யது, விசாரணையை அறிக்கையை மேல் நீதிமன்றுக்கு பாரப்படுத்தவேண்டும் என்று சுட்டிக்காட்டிய யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் சின்னத்துரை சதீஸ்தரன், சாட்சியப் பதிவை முன்வைக்க மனுதாரருக்கு அனுமதியளித்தார்.

மனுதாரர் தொடர்பான சாட்சியப் பதிவு நிறைவுற்றதும், சட்ட மா அதிபர் சார்பான குறுக்கு விசாரணைக்காக வரும் 25ஆம் திகதிவரை வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.

யாழ்ப்பாணம் அரியாலை பகுதியில் 1996 ஆம் ஆண்டு இளைஞர் ஒருவர் காணாமல் ஆக்கப்பட்டார். அவரை இராணுவத்தினரால் கடத்திச் சென்று தடுப்பு முகாமில் தடுத்துவைத்துள்ளனர் என்று இளைஞனின் உறவினரான குணவதி நடேசர், யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் ஆள்கொணர்வு எழுத்தாணை மனுவைத் தாக்கல் செய்தார்.

2013ஆம் ஆண்டு பெப்ரவரி மாத முற்பகுதியில் தாக்கல் செய்யப்பட்ட இந்த மனுவில் அரியாலை துண்டி இராணுவ முகாமில் 1996ஆம் ஆண்டு பொறுப்பதிகாரியாகக் கடமையாற்றிய ஜெயவர்த்தன முதலாவது பிரதிவாதியாகவும் பூசா தடுப்பு நிலைய பொறுப்பதிகாரி இரண்டாவது பிரதிவாதியாகவும் இராணுவத் தளபதி, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மற்றும் சட்ட மா அதிபர் ஆகியோர் முறையே 3,4 மற்றும் 5ஆவது பிரதிவாதிகளாகக் குறிப்பிடப்பட்டனர்.

யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் ஆரம்ப விசாரணைகள் சுமார் 30 மாதங்களாக இடம்பெற்றன. நிறைவில் மனு தாரரின் கோரிக்கைக்கு அமைவாக காணாமல் ஆக்கப்பட்டவர் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றுக்கு அறிக்கை சமர்ப்பிக்குமாறு யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவானுக்கு மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் கட்டளை வழங்கினார்.

இந்தக் கட்டளை 2015ஆம் ஆண்டு ஓகஸ்ட் 28ஆம் திகதி வழங்கப்பட்டது.

இந்தக் கட்டளைக்கு அமைவாக எதிர்மனுதாரர்கள் மற்றும் மனுதாரர்களால் குறிப்பிடப்பட்ட சாட்சிகளுக்கு யாழ்ப்பாணம் நீதிமன்று அறிவித்தல் வழங்கி வழக்கு விசாரணைகளை முன்னெடுத்துள்ளது.

இந்த நிலையில் இரண்டாவது கண்கண்ட முக்கிய சாட்சியிடம் நேற்று புதன்கிழமை விசாரணை நடத்த நீதிவான் நீதிமன்று கட்டளையிட்டிருந்தது.

மனுதாரர் சார்பில் சட்டத்தரணி ரஞ்சித்குமார் மற்றும் யாழ்ப்பாண இராணுவத்தின் சட்டத்தரணி ஆகியோர் மன்றில் முன்னிலையாகியிருந்தனர். எனினும் சட்டமா அதிபர் சார்பில் அரச சட்டாவதி முன்னிலையாகவில்லை.

கண்கண்ட சாட்சியத்தின் சாட்சிப் பதிவுக்காக எடுத்துக்கொள்ளப்பட்டது. அரச சட்டவாதி மன்றில் முன்னிலையாகததால் சாட்சியப் பதிவை வேறு ஒரு தினத்துக்கு ஒத்திவைக்குமாறு இராணுவத் தரப்பு சட்டத்தரணி மன்றில் விண்ணப்பம் செய்தார்.

அவரது விண்ணப்பத்தை நிராகரித்த நீதிவான் சி.சதீஸ்தரன், வழக்கு விசாரணைகளை இழுத்தடிக்காமல் விசாரணையை அறிக்கை மேல் நீதிமன்றுக்கு விரைவில் சமர்ப்பிக்கவேண்டும் என்று சுட்டிக்காட்டினார். அத்துடன், மனுதாரர் சாட்சியை நெறிப்படுத்த நீதிவான் அனுமதியளித்தார்.

“சம்பவ தினம் மாலை 5.45 மணியளவில் கொழும்புத்துறையிலிருந்து மாம்பழம் சந்தி நோக்கி நான் சென்றுகொண்டிருந்தேன். காணாமல் ஆக்கபபட்டுள்ள இளைஞன் கொழும்புத்துறை இலந்தைகுளம் வீதியில் உள்ள புளியடி சந்தி இராணுவ முகாமுக்குள் சென்றதை நான் அப்போது கண்டேன்.

இதன் பின்னர் மறுநாள் காலையிலேயே அந்த இளைஞன் காணாமற் போயுள்ளார் என்ற தகவலைத் தெரிந்துகொண்டேன்” என்று இரண்டாவது சாட்சி மன்றில் சாட்சியமளித்திருந்தார்.

சாட்சியிடம் மனுதாரர் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி கேள்விகளை எழுப்பி சாட்சியத்தை நெறிப்படுத்தினார்.

இந்த சாட்சியிடம் அரச சட்டவாதியின் குறுக்கு விசாரணையை வரும் 25 ஆம் திகதிக்கு நீதிமன்று தவணையிட்டது.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here