குருந்தூர் மலையில் பௌத்த விகாரை அமைக்க முடியாது; பாரம்பரிய சைவ வழிபாட்டிற்கு தடையில்லை: நீதிமன்றம் அதிரடி!

முல்லைத்தீவு குமுழமுனை தண்ணிமுறிப்பு பகுதியில் அமைந்துள்ள சர்ச்சைக்குரிய குருந்தூர் மலைப்பகுதியில் பௌத்த விகாரை அமைக்க முடியாதென முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அங்குள்ள சைவ ஆலயத்தில் மக்கள் வழிபாடுகளை நடத்த எந்த தடையுமில்லையென்றும் நீதிமன்ற உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

குருந்தூர் மலையில் தொல்பொருள் திணைக்களத்தின் அனுசரணையுடன் விகாரை அமைக்க பௌத்த பிக்குகள் சிலர் முயற்சித்தனர். இம்மாதம் 04ம் திகதி பிக்குகள் அங்கு சென்றபோது, பிரதேச இளைஞர்கள் அவர்களை வழிமறித்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

ஒட்டுசுட்டான் பொலிசார் தலையிட்டு, நிலைமையை சுமுகமாக்கியதுடன், முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றில் சம்பவம் தொடர்பில் அறிக்கையொன்றை தாக்கல் செய்தனர். குருந்தூர் மலையில் பௌத்த விகாரை அமைப்பதை தடைசெய்யுமாறும் அதில் குறிப்பிட்டிருந்தனர்.

06ம் திகதி இந்த விவகாரம் விசாரணைக்கு எடுக்கப்பட்டது. இன்றுவரை (13) குருந்தூர் மலைக்கு யாரும் செல்ல முடியாதென தற்காலிக தடையுத்தரவை பிறப்பித்த நீதிமன்றம், இன்றை வரை வழக்கை ஒத்திவைத்திருந்தது.

இன்றையதினம் மாவட்ட நீதவான் எஸ்.லெனின்குமார் முன்னிலையில் வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. கிராம மக்கள் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி சாந்த அபிமன்ன சிங்கம், மூத்த சட்டத்தரணி ரி.பரஞ்சோதி உள்ளிட்ட சட்டத்தரணிகள் அணியொன்று முன்னிலையானது. முல்லைத்தீவு மாவட்ட சட்டத்தரணிகள் சங்கத்தை சேர்ந்த பதின்னான்கு சட்டத்தரணிகள் இதில் முன்னிலையாகியிருந்தனர்.

பொலிசார் சமர்ப்பித்த அறிக்கையில் – “குறித்த பிரதேசம் தமிழ் மக்களின் பூர்வீக வரலாற்றினை கொண்ட பிரதேசம். அங்கு பல நூற்றாண்டுகளகாக இயற்கை வழிபாட்டுமுறையில் ஆலயம் ஒன்றை அமைத்து கிராம மக்கள் வழிபட்டு வருகின்றார்கள். அந்த இடத்திற்கு சம்மந்தமில்லாத பௌத்த மதகுருமார் தொல்பொருள் ஆய்வு என்ற பெயரில் தொல்பொருள் திணைக்களத்தின் அனுசரணையுடன் விகாரை அமைப்பதற்காக வருகை தந்திருப்பதானது இனங்களுக்கும் மதங்களுக்கும் இடையில் சுமூகமற்ற ஒரு நிலையினை தோற்றிவிக்கும். குறித்த பிரதேசத்தில் தொன்று தொட்டு வழிபட்டு வரும் மக்களின் வழிபாட்டிற்கு தடைவிதிப்பது இனங்களுக்கிடையில் முரண்பாடுகளை ஏற்படுத்தும் என்றும்“ குறிப்பிடப்பட்டிருந்தது.

தொல்பொருள் திணைக்களம் ஆய்வு என்ற பெயரில் விகாரை அமைப்பதற்கு அனுமதி வழங்கியுள்ளமை பிழையான விடயம் என்றும் அதனை தடுக்கவேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த வழக்கினை விசாரித்த  நீதவான், குருந்தூர் மலைப்பிரதேசத்தில் தொன்று தொட்டு வழிபாட்டில் ஈடுபடும் கிராம மக்கள் இயற்கை முறையில் அமைந்த கிராமிய வழிபாட்டினை ஆலயத்தில் மேற்கொள்ள எந்தவித தடையும் இல்லை என்றும், அங்கு  புதிதான கட்டுமானம் மற்றும் அகழ்வு பணிகளை மேற்கொள்ளகூடாது என்றும், தொல்பொருள் ஆய்வு என்ற போர்வையில் ஆலயங்கள் அமைப்பதோ, கட்டுமானங்கள் மேற்கொள்ளவோ முடியாது என்றும், அப்படி நிர்மாணிப்பதாக இருந்தால் பொலீசில் அறிக்கை சமர்ப்பித்து நீதிமன்றின் அனுமதியுடனே செய்யப்பட முடியுமென்றும், குருந்தூர் மலையில் தொல்பொருள் அகழ்வு ஆராய்சிகள் மேற்கொள்ள வேண்டுமாக இருந்தால் யாழ்.பல்கலைக்கழகத்தின் வரலாற்று துறை பங்குபற்றல், தொல்லியல்துறை தொல்பொருள் மூத்த வரலாற்று ஆராச்சியாளர்களின் பங்குபற்றலுடனும் குறித்த கிராமத்தினை சேர்ந்த அனுபவம் வாய்ந்தவர்களையும் ஈடுபடுத்தியே அகழ்வு ஆராய்சியை மேற்கொள்ள வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.

அப்படி செய்யாவிட்டால் இனமுரண்பாடுகள் ஏற்படுத்துவதற்கான வாய்ப்பு உள்ளது என்றும் நீதிமன்றம் சுட்டிக்காட்டியது.

இது தொடர்பில் தொல்பொருள் திணைக்களத்துடன் இணைந்து மன்றுக்கு அறிக்கை ஒன்றினை சமர்ப்பிக்குமாறும் பொலிசாருக்கு உத்தரவிட்டுள்ளதுடன், குறித்த பிரதேசத்திற்கு சம்மந்தம் இல்லாதவர்களான பௌத்த துறவிகள் வரமுடியாது என்றும் நீதிமன்றம்  உத்தரவு பிறப்பித்துள்ளது.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here