கண்பார்வையில்லை… ஆனால் மட்பாண்ட ஆசிரியர்: மட்டக்களப்பு கிராமமொன்றின் போராட்ட கதை!

♦திலக்ஸ் ரெட்ணம்

நவீன யுகமென்ற பெயரில் தமது பாரம்பரியங்கள், கலை, பண்பாட்டு வெளிப்பாடுகளை கைவிட்டு செல்லும் போக்கு தமிழர்களிடம் அதிகரித்துவிட்டது. தமிழர்களால் கைவிட்டு செல்லப்படும் முக்கியமான ஒன்று குடிசைக் கைத்தொழில் வகை உற்பத்திகள். குடிசைக் கைத்தொழிலில் கலையும், மதிநுட்பமும் இணைந்த உற்பத்திகள் பல செய்யப்பட்டன. மட்பாண்ட உற்பத்தி இதில் முதன்மையானது. இன்று தமிழர் பிரதேசத்தில் மட்பாண்ட உற்பத்தி அழிவடையும் நிலைக்கு சென்று கொண்டிருக்கிறது.

மட்டக்களப்பின் படுவான்கரையில் போரதீவுப்பற்று பிரதேச செயலகத்திற்குட்பட்ட கிராமம்தான் பெரியபோரதீவு. இந்த கிராமத்தில் வசிக்கும் மக்கள் பல்வேறு தொழில்களை தமது வாழ்வாதாரமாக கொண்டுள்ளனர். விவசாயம், மீன்பிடி, பொற்தொழில், மட்பாண்டத் தொழில் என பல்வேறு சுயதொழில்களிலும் ஈடுபட்டு வருகின்றனர். இந்த கிராமத்தில் அடையாளமாக இருந்தது பாரம்பரியமாக செய்யப்பட்ட மட்பாண்ட கைத்தொழிலும், நகைத் தொழிலுமே. எனினும் இன்று மட்பாண்ட கைத்தொழில் அருகிவரும் நிலையிலுள்ளது. இன்று சுமார் நூற்றி ஐம்பது குடும்பங்கள் மட்டுமே இதில் ஈடுபடுகின்றன. மண்பாண்ட தொழிலில் ஈடுபட்டுள்ள குடும்பங்கள் பற்றிய தமிழ் பக்கத்தின் தேடலே இந்த பகுதி.

பெரிய போரதீவுவில் உற்பத்தி செய்யப்படும் களி மண்ணிலான பாத்திரங்கள் உள்ளுர் வியாபாரிகளுக்கு விற்பனை செய்யப்படுகின்றது. பெரியபோரதீவில் மட்பாண்ட சங்கம் பதிவு செய்யப்பட்டு பலருக்கு பயிற்சியளிக்கும் நிலையமாகவும் உள்ளது. இங்கு பலர் பயிற்சி பெற்று தங்களது வருமானத்தை ஈட்டிக்கொண்டிருக்கின்றனர். தற்போது பத்து பேர் பயிற்சி பெற்று வருகின்றனர்.

இங்குள்ள மட்பாண்ட உற்பத்தி நிலையம் 1944ம் ஆண்டு கட்டப்பட்டது. அதாவது இலங்கை சுதந்திரமடைவதற்கு முன்னர் கட்டப்பட்டது. எனினும், இலங்கை சுதந்திரமடைந்த பின்னர் ஆட்சிக்கு வந்த எந்த அரசும் இந்த உற்பத்தி நிலையத்தை புனரமைத்ததாக பதிவுகள் இல்லை. இந்த உற்பத்தி நிலையத்தை நம்பி வாழ்க்கை நடத்திய, நடத்திக் கொண்டிருக்கும் குடும்பங்கள் பலவுள்ளன.

இங்குள்ள முக்கிய பிரச்சினை மின்சார வசதியின்மை. இதனால் மின்சாரம் மூலம் இயங்க வைக்கும் சக்கரத்தை பயன்படுத்த முடியாமல் உள்ளது. சுற்று மதில் இன்மையினாலும் பல அசௌகரியங்களை எதிர்நோக்குகின்றனர். மலசலகூட வசதியில்லை. குடிநீர் தட்டுப்பாடு என்று பிரச்சினைகளின் பட்டியல் நீண்டு கொண்டு செல்கின்றது.

கிராமிய சிறுகைத்தொழிற்துறை திணைக்களத்தினால் ஆறு மாதத்திற்கொரு தடவை மூலப்பொருள் கொள்வதற்கென இருபத்தி மூன்றாயிரம் ரூபா வழங்கப்படுகின்றது. தற்போது வைக்கோல் ஒரு லோட் இரண்டாயிரம் ரூபாவில் இருந்து நான்காயிரம் ரூபா வரை செல்கின்றது. வைக்கோல் தட்டுப்பாடான காலத்தில் இன்னும் அதிகரிக்கும். களிமண் ஐந்தாயிரம் ரூபா வரை செல்கின்றது. உரிமட்டை மூவாயிரம், நான்காயிரம் ரூபா வரை செல்கின்றது. வருடத்திற்கு வருமானமாக சுமார் ஒரு இலட்சம் ரூபா வரை ஈட்டிக் கொடுக்கப்படுகின்றது. பயிற்சி பெறுகின்ற ஒவ்வொரு பயிலுனர்களுக்கும் மாதமொன்றிற்கு மூவாயிரம் ரூபா வழங்கப்படுகின்றது.

பெரியபோரதீவு மக்களில் பலர் அன்று தொடக்கம் இன்று வரை குடிசைக் கைத்தொழிலான மட்பாண்ட உற்பத்தியை செய்துவருகின்றனர். இங்கு உற்பத்தி செய்யப்படும் சட்டி, பானை, முட்டி, உலை மூடி, குண்டான் சட்டி, கூஜா போன்ற பொருட்கள் அழகும் நேர்த்தியும் மிக்கவை. தரத்தில் மிகச் சிறந்ததாகவும் விளங்குகின்றன. இந்த தொழிலை 150 குடும்பங்கள் தங்களது ஜீவனோபாயத் தொழிலாக செய்து வருகின்றனர்.

இம் மக்களின் வாழ்வாதாரத்துக்கு கை கொடுக்கும் மட்பாண்ட தொழிலுக்கு எவரும் கை கொடுக்க முன்வராத நிலையில் இதனை நம்பிவாழும் பல குடும்பங்கள் நிர்க்கதிக்குள்ளாகியுள்ளனர். பலர் இத் தொழிலை கை விட்டுள்ளனர்.

அங்குள்ள பெரியவர் ஒருவருடன் பேசும்போது- ‘இப்பொழுது எல்லோரும் ஓடிக்கொண்டிருக்கிறார்கள். பறந்து பறந்து சமைக்க அலுமினியப் பாத்திரங்கள்தான் வசதியென நினைக்கிறார்கள். சுவைக்கும், ஆரோக்கியத்திற்கும் யாரும் முக்கியத்துவம் கொடுப்பதில்லை. நேரத்தையும், வசதியையும் மட்டும் பார்க்கிறார்கள். இதனால் மண் சட்டிகளை மறந்து விட்டார்கள். மண் சட்டி சமையலில் ருசியை இந்த தலைமுறை தெரியாமலே போகிறது’ என்றார் ஆதங்கத்துடன்.

‘இன்று வசதியான உணவகங்களில் ட்ரென்டிங்கே பாரம்பரிய சமையல்தான். இயற்கை உற்பத்தி மரக்கறிகளை, மண்சட்டியில் சமைத்து, மண்சட்டியிலேயே பரிமாறுகிறார்கள். தென்னிலங்கையில் இது பரவலடைந்து விட்டது. ஆனால் நம்மவர்கள் மண்சட்டியிலிருந்து அலுமினியத்திற்கு மாறி விட்டார்கள். எப்பொழுதாவது மண்சட்டி சமையலை சாப்பிட அதிக விலை கொடுத்து பெரிய உணவகங்களிற்கு போகிறார்கள்’ என்றார் இன்னொரு இளைஞர்.

கிராமிய குடிசைக் கைத்தொழில் விருத்திக்கு அரசு பல திட்டங்களை முன்வைத்து வருவதாக கூறுகின்ற போதிலும் குடிசைக் கைத்தொழில் விருத்தியடைந்ததாக தெரியவில்லை. காலங்காலமாக இம் மக்களைச் சூழ்ந்திருக்கும் வறுமையும், ஏழ்மையும் இன்றும் அவர்களை விட்டுப்போகவில்லை. பல வருடங்களுக்கு முன்னர் பெரிய போரதீவில் அரைவாசிக்கும் மேற்பட்டோர் மட்பாண்டங்களை உற்பத்தி தொழிலில் ஈடுபட்டனர். இன்று இவ்வாறான ஒரு நிலையைக் காணமுடியவில்லை. நாகரீகம் வளர்ச்சியடைய இத்தொழிலை செய்பவர்களின் மனநிலையிலும் மாற்றம் ஏற்பட்டதினால் பலர் இத்தொழிலை கைவிட்டுள்ளனர்.

கடந்த 35 வருடங்களாக மாரிமுத்து என்பவரும் இத்தொழிலைச் செய்து வருகின்றார். இன்று அவர் மட்பாண்ட நிலையத்தின் ஆசிரியராக கடமை புரிகின்றார். மாரிமுத்து அம்மாவிற்கு கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர் கண்ணில் ஏற்பட்ட நோயின் காரணமாக தற்போது இரண்டு கண்களும் முற்றாக செயலிழந்த நிலையில் தொடர்ந்து ஆசிரியர் பணியை செய்து வருகின்றார். கடந்த பதினான்கு ஆண்டுகளாக ஆசிரியராக கடமையாற்றுகின்றார். அனுபவத்தின் மூலம், கண் பார்த்தால் கை செய்யும் என்பார்கள். அதற்கு சிறந்த உதாரணம் மாரிமுத்து. கண் பார்வையில்லை. ஆனால் ஒருபிடி களிமண் மாரிமுத்து அம்மாவின் கையில் சுழன்று விளையாடியது. பின்னர் ஒரு பூச்சாடியாக மாறியது.

மேலே குறிப்பிட்ட விலைகளை கொடுத்தே அனைவரும் மூல்பொருட்களை கொள்வனவு செய்கின்றனர். இவற்றை இந்த விலை கொடுத்து பெற்று மிகுந்த சிரமத்திற்கு மத்தியில் மக்கள் இந்த தொழிலைச் செய்கின்றனர். முன்னரைப் போல் மட்பாண்ட தொழிலைச் செய்யமுடியாதளவிற்கு மனம் நொந்துபோயிருக்கின்றனர்.

குறைந்த முதலீட்டில் கூடிய வருமானம் ஈட்டித்தரும் சட்டி, பானைத் தொழிலுக்கு ஊக்குவிப்பை வழங்குவதற்கு இன்று வரை எமக்கு எவருமே உதவவில்லை என ஏக்கத்துடன் கூறுகின்றனர். வருமானம் ஈட்ட சுடிய தொழிலாக இருந்தாலும் வறுமையும் சேர்ந்திருப்பதால் கஸ்டம்தான். அரசாங்கம் அல்லது சமுர்த்தி என்பனவும் கூட இந்த கைத்தொழிலுக்கு கைகொடுக்கவில்லை என்றும் தமிழ்பக்கத்திடம் தெரிவித்தார்கள்.

கடந்த காலங்களில் யுத்தத்தினாலும், இயற்கையினாலும் பாதிக்கப்பட்ட இம் மக்களுக்கு உதவுவதற்கு அரசாங்கம் ஏன் பாராபட்சம் காட்டுகின்றது என்று இவ்வூர் மக்கள் கேள்வியெழுப்புகின்றனர். மட்டக்களப்பில் முதன் முதலில் மட்பாண்ட உற்பத்தியில் ஈடுபடுபவர்களைக் கொண்டு சட்டி, பானைச் சங்கம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டு அச்சங்கம் ஊடாக மட்பாண்ட உற்பத்தியாளர்களுக்கு ஊக்கமளிக்கப்பட்ட இடம் பெரியபோரதீவாகும்.

அருகிவரும் இவ் மட்பாண்ட குடிசைக்கைத் தொழிலை மீண்டும் கட்டியெழுப்ப நல்லாட்சி அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். என்பதே இவர்களின் எதிர்பார்ப்பாகும்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here