இம்மானுவேல் ஆனோல்ட் ஒரு மகாவீரன்தான்: சந்தேகமிருந்தால் இதை படியுங்கள்!

தியாகி திலீபனிற்கு தூபி அமைக்க வேண்டும், திலீபனின் நினைவிடம் பாதுகாக்க பட வேண்டுமென நீண்டகாலமாக பல தரப்பிலிருந்தும் சொல்லப்பட்டு வருகிறதுதான். ஆனால், திலீபனின் நினைவுத்தூபி புனரமைப்பிற்காகவும், சுற்றுவேலி அமைப்பிற்காகவும் ஒதுக்கப்பட்ட பணம் பல மாதங்களாக அப்படியே இருப்பது, திலீபனின் நினைவிடத்தை புனரமைக்க அதிகாரிகள் தயங்கிக் கொண்டிருப்பது பற்றிய தகவல்களை தமிழ் பக்கம் திரட்டியுள்ளது.

கடந்த வருடம் வரவு செலவு திட்டம் சமர்ப்பிக்கப்படவிருந்த நிலையில், தமிழரசுக்கட்சியின் சில எம்.பிக்களிற்கு இரண்டு கோடி அபிவிருத்தி ஒதுக்கீடு இரகசியமாக வழங்கப்பட்டிருந்தது. (அந்த விசயத்தை தமிழ் பக்கம்தான் வெளிப்படுத்தியிருந்தது. பின்னர், கூட்டமைப்பின் மற்றைய எம்.பிக்களும் முரண்டுபிடித்து அந்த ஒதுக்கீட்டை பெற்றுக்கொண்டது வேறு கதை). அந்த ஒதுக்கீட்டில் இருந்து கிளிநொச்சி மாவீரர் துயிலுமில்ல சுற்றுமதில் அமைக்க ஒரு தொகை பணத்தை சிறிதரன் எம்.பி வழங்கினார். நல்லூரிலுள்ள திலீபன் நினைவிடத்தில் சுற்றுவேலி அமைக்க இரண்டு இலட்சம் வழங்கினார். (தூபி அமைக்கவே வழங்கியதான சிறிதரன் எம்.பி சொல்கிறார்). அந்த பணம் நல்லூர் பிரதேச செயலகம் ஊடாகவே வழங்கப்படும்.

கிளிநொச்சி மாவீரர் துயிலுமில்ல சுற்றுமதில் விவகாரம் பெரிதாகி, கிளிநொச்சி மாவட்ட செயலாளரும் சில விளக்கம் கோரல்களை சந்தித்தித்தார். இதன்பின், திலீபன் நினைவிட புனரமைப்பிற்கு வந்த 2 இலட்சம் ரூபாவை பார்த்து அதிகாரிகள் மிரள தொடங்கினார்கள். அந்த வேலையை செய்ய வேண்டியது மாநகரசபைதான் என, மாநகரசபையின் தலையில் தூக்கிப்போட நல்லூர் பிரதேசசபை முயன்றது. மத்திய அரசின் நிதி ஒதுக்கீடுகள் நல்லூர் பிரதேசசபை ஊடாகத்தானே வரும்- அவர்களே பார்த்தால் என்ன என மாநகரசபையும் ஒதுங்க பார்த்தது.

ஆனால் திலீபனின் நினைவுத்தூபி அமைந்துள்ள இடத்தின் பொறுப்பு மாநகரசபையினுடையது. அவர்களே அதை பொறுப்பேற்க வேண்டியதானது. இறுதியில் இரண்டு இலட்சம் ரூபாவிற்கான சுற்றுவேலியை தயாரித்தார்கள்.

திலீபனின் நினைவிடத்தில் ஒரு சுற்றுவேலியும் இல்லையே என நீங்கள் தலையை சொறிவது தெரிகிறது… அவசரப்படாமல் தொடர்ந்து படியுங்கள்.

ஒதுக்கப்பட்ட நிதியில் சுற்றுவேலியொன்றை தயாரிக்கப்பட்டதுதான். ஆனால் அதை திலீபனின் நினைவிடத்தில் போடப்படவில்லை!

அது பத்திரமாக “பிரத்தியேக“ இடத்தில் வைக்கப்பட்டுள்ளது!

இந்த சமயத்தில்தான், மூத்த நிர்வாக அதிகாரியொருவர் வழங்கிய ஆலோசனையின் பேரில், அந்த திட்டத்தை இரண்டு தரப்பும் ஆறப்போட்டது. அந்த அதிகாரி வழங்கிய ஆலோசனை என்னவென்றால்- சுற்றுவேலியை அமைக்க அவசரப்பட வேண்டாம். காலத்தை தாழ்த்துங்கள். மாநகரசபை கூடியதும், அவர்களின் கையில் விசயத்தை கொடுத்து விடுங்கள் என்பதே!

புதிதாக அமைந்த யாழ் மாநகரசபையின் முதலாவது வேலையென்ன?

நல்லூரில் திலீபனின் நினைவிடத்தை புனரமைப்பதுதானே!

மாநகரசபையின் கையில் திலீபன் நினைவிட புனரமைப்பு, சுற்றுவேலி வைக்கும் விசயம் வந்து சேர்ந்த கதை இதுதான்.

திலீபனின் நினைவிடத்தை புனரமைத்தால், சுற்றுவேலி அமைத்தால் தமக்கு வீணாண சிக்கல் ஏற்படும் என நமது தமிழ் நிர்வாக அதிகாரிகள் அனைவரும் பயந்து, அமைத்த சுற்றுவேலியை கொண்டு போய் வைக்காமல் பின்னடித்துக் கொண்டிருந்த நிலையில்… மாநகரசபை மேயராக பொறுப்பேற்றதும் முதல் வேலையாக திலீபனின் தூபி புனரமைப்பை பொறுப்பேற்ற இம்மானுவேல் ஆனோல்ட் ஒரு மகாவீரன் என சொல்வதில் என்ன தவறுள்ளது?

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here