புதிய தாழமுக்கம் இலங்கையை ஊடறுத்த கடக்க சாத்தியமுள்ள 3 வழிகள்!

வங்காள விரிகுடாவில் உருவாகிய தாழமுக்கம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலையாக மாறியுள்ள நிலைமையில், காற்றின் நகர்வு பாதை குறித்து யாழ் பல்கலைகழக புவியியல் துறை மூத்த விரிவுரையாளர் ந.பிரதீபராஜா தகவல் வெளியிட்டுள்ளார்.

அவரது தகவலில்,

வங்காள விரிகுடாவில் உருவாகிய தாழமுக்கம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலையாக மாறியுள்ளது. தற்போது வரை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலையாகவே காணப்படும் இது புயலாக மாறுமா இல்லையா என்பதை அடுத்த 24 மணி நேரத்தின் பின்னரே உறுதியாக கூற முடியும். இதன் நகர்வுப் பாதை தொடர்பில் உறுதியான முடிவுக்கு வரமுடியவில்லை. எனினும் தற்போதைய (30.11.2020, 2.45 பி.ப) நிலையில் வேறுபட்ட மாதிரிகளின் அடிப்படையில் இது பின்வரும் மூன்று பாதைகளினூடகவே நகரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

1. எதிர்வரும் 02.12.2020 புதன்கிழமை இரவு 10.00 மணிக்கு திருகோணமலையின் கொட்டியாரக்குடாவுக்கு அண்மித்து நிலப்பகுதி க்குள் உள்நுழையும் தாழமுக்கம் புதன் இரவு 11.00 மணிக்கு குமரன்கடவைக்கும், வியாழக்கிழமை அதிகாலை 12.15 மணிக்கு பதவியா, அதிகாலை 1.00 மணிக்கு மாமடுவ, அதிகாலை 1.15க்கு ஓமந்தை மற்றும் வவுனியாவுக்கு இடைப்பட்ட பகுதி, அதிகாலை 2.00 மணிக்கு தந்திரிமலை மற்றும் அதிகாலை 3.00 மணிக்கு சாலியவெவ பகுதிகளூடாக நகர்ந்து வியாழக்கிழமை காலை 6.00 மணிக்கு அரபிக்கடலுக்குள் நகரும்.

2. எதிர்வரும் 03.12.2020 வியாழக்கிழமை அதிகாலை 2.00 மணிக்கு திருகோணமலைக்குள் பிரவேசிக்கும் இத்தாழமுக்கம் காலை 5.00 மணியளவில் குச்சவெளிக்கும், காலை 7.00 மணியளவில் பதவியா, குமரன் கடவையூடாகவும், முற்பகல் 11.00 மணியளவில் அனுராதபுரத்தினூடாகவும், பிற்பகல் 2.00 மணிக்கு சாலியவேவ ஊடாக நகர்ந்து மாலை 6.00 மணிக்கு புத்தளத்தினூடாக அரபிக்கடலுக்குள் நகரும்.

3. எதிர்வரும் 02.12.2020 புதன்கிழமை இரவு 10.00 மணிக்கு திருகோணமலைக்குள் நகர்ந்து 03.12.2020 வியாழக்கிழமை அதிகாலை 1.00 மணிக்கு குச்சவெளி அமரிவயல் பகுதிக்கும் வியாழன் அதிகாலை 4.00 மணிக்கு மணலாறு ஒதியமலைப் பகுதிக்கும், வியாழன் அதிகாலை 5.00 மணிக்கு கனகராயன்ககுளம் மற்றும் புளியங்குளம் பகுதிக்கும் வியாழக்கிழமை காலை 6.00 மணிக்கு மாங்குளம் பகுதிக்கும் நகர்ந்து காலை 7.00 மணிக்கு கீரிசுட்டான், சின்னத்தம்பனை, தட்டாங்குளம் பகுதிக்கும், காலை 8.00 மணிக்கு தந்திரிமலை சிலாவத்துறை ஊடாக நகர்ந்து வியாழக்கிழமை காலை 9.00 மணிக்கு தலைமன்னாருக்கு தெற்காக கரையைக் கடக்கும்.

தற்போதைய நிலையில் வேறுபட்ட மாதிரிகளின் (Models) அடிப்படையிலேயே இந்த நகர்வுப் பாதை வரையறுக்கப்பட்டுள்ளது. தாழமுக்கத்தின் சுழற்சி வேகம், கடல்மேற்பரப்பு வெப்பநிலை மற்றும் அமுக்க வேறுபாடுகளுக்கு ஏற்ப நகர்வு வேகமும் திசையும் மாறுபடலாம். அதன்படி தாழமுக்கம் நகரும் இடங்களும் நேரமும் மாறுபடலாம் என்பதனை கவனத்தில் கொள்ள வேண்டும்.

வங்காள விரிகுடாவில் உருவாகியுள்ள தாழமுக்கம் காரணமாக இன்றுமுதல் அடுத்த நான்கு நாட்களுக்கு வடக்கு கிழக்கு மாகாணம் முழுவதிலும் கனமழைக்கு வாய்ப்புண்டு. எதிர்வரும் டிசம்பர் 02 மற்றும் 03 திகதிகளில் இடிமின்னல் நிகழ்வுகளுக்கும் வாய்ப்புண்டு.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணக் கடற்பகுதிகளில் அலைகளின் உயரம் வழமையை விட உயர்வாக காணப்படும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here