புதுமுக மாணவர் வரவேற்பு நிறுத்தம்; மோதலில் ஈடுபட்ட மாணவர்களின் பாதிக்கப்பட்ட குடும்ப பின்னணி: யாழ் பல்கலைகழக நிர்வாக குறைபாடுகளையும் சீர்செய்ய யோசனை!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கலைப்பீடத்தில் கடந்த மாதம் 8ம் திகதி நடைற்ற மோதல் சம்பவத்துடன் தொடர்புடைய மாணவர்களுக்கு உரிய தண்டனை வழங்கும் அதேவேளை, இத்தகைய சம்பவங்கள் பல்கலைக்கழகத்துக்குள் நடைபெறுவதற்கு ஏதுவான பின்னணிக் காரணியாக இருக்கும் நிர்வாக ரீதியான குறைபாடுகளையும் சீர்செய்யுமாறு மாணவர் ஒழுக்காற்றுச் சபை கோரிக்கை விடுத்துள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பான தனிநபர் விசாரணையை நடாத்திய யாழ் பல்கலைக்கழக வணிக முகாமைத்துவ பீட முன்னாள் பீடாதிபதி பேராசிரியர் நடராஜசுந்தரம் சமர்ப்பித்த 130 பக்கங்களைகக் கொண்ட அறிக்கையை விரிவாக ஆராய்ந்த, பல்கலைக்கழகப் பேரவை உறுப்பினர் கோ.றுஷாங்கன் தலைமையிலான மாணவர் ஒழுக்காற்றுக்குழு, அந்த அறிக்கையில் மாணவர்கள், விரிவுரையாளர்கள், துறைத்தலைவர்கள் மற்றும் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் வழங்கிய வாக்குமூலங்கள் மற்றும் விசாரணை அதிகாரி நிர்வாகத்துக்கு வழங்கிய பரிந்துரைகள் என்பவற்றின் அடிப்படையில் இவ்வாறான சம்பவங்கள் நடைபெறுவதற்கு காரணியாக அமைந்த நிர்வாக ரீதியான குறைபாடுகள் தொடர்பாகவும் கலந்துரையாடியது.

மாணவர்களின் இதுபோன்ற முறைகேடான செயற்பாடுகளுக்கான மூலகாரணிகள் சரியாக ஆராயப்படவேண்டும் என்றும், மாணவர்களுக்கான சரியான வழிகாட்டல், ஒழுக்கம் பேணல் போன்ற விடயங்களில் நிர்வாகத்தின் அக்கறையீனம் களையப்படவேண்டும் என்றும் பல்கலைக்கழக மாணவ ஆலோசகர் ஒருவரும், துறைத்தலைவர் ஒருவரும் வழங்கியிருந்த வாக்குமூலங்கள் இந்தக் கலந்துரையாடலின்போது முக்கிய கவனத்தில் எடுக்கப்பட்டது.

இதன்போது, இந்தச் சம்பவத்துடன் தொடர்புடையதாக குற்றஞ்சாட்டப்பட்ட பெரும்பாலான மாணவர்கள் பொருளாதார ரீதியாக நலிவான குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் என்பதை கவனத்தில் எடுத்த ஒழுங்காற்றுக்குழுவினர், இவர்களில் பலரது குடும்பப் பின்னணிகள் சிக்கலானதாக இருப்பதையும் அவதானித்துள்ளனர்.

இந்தச் சம்பவத்துடன் தொடர்புடையவர் என குற்றஞ்சாட்டப்பட்ட ஒரு மாணவரின் தந்தையார் அவரது கண்முன்னாலேயே சுட்டுக்கொல்லப்பட்டதாக அவர் கொடுத்துள்ள வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார். ஏனைய மூன்று மாணவர்கள் தமது தந்தையரை இழந்தவர்களாக உள்ளதுடன், அவர்களில் ஒருவர் ஆசிரமம் ஒன்றில் வளர்ந்திருப்பதுடன், மற்றொருவரது தாயார் மறுமணம் செய்துள்ளதாகவும் வாக்குமூலங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மாணவர்களின் இவ்வாறான சிக்கல் நிறைந்த குடும்பப் பின்னணிகள் தொடர்பாக அவர்களுக்குக் கற்பித்த விரிவுரையாளர்கள், துறைத்தலைவர்கள், மாணவ ஆலோசகர்கள் முன்கூட்டியே அறிந்திருக்கவில்லையா என்று தமது அறிக்கையில் கேள்வியெழுப்பியுள்ள ஒழுக்காற்றுக்குழுவினர், இது விசாரணையின்போது பலரும் அளித்துள்ள வாக்குமூலங்களில் குறிப்பிடப்பட்டிருப்பதுபோல, விரிவுரையாளர்களுக்கும், மாணவர்களுக்குமிடையிலான சீரான உறவு காணப்படாததை நிரூபிப்பதாக அமைந்துள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளது.

விரிவுரையாளர்களுக்கும், மாணவர்களுக்குமிடையே நெருக்கமான உறவு பேணப்பட்டிருக்குமானால் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறாமல் தடுத்திருக்கலாம் என்று குறிப்பிட்டுள்ள அந்த அறிக்கை, அந்தவகையில் மாணவர்களின் முறைகேடான செயற்பாடுகளுக்கு நிர்வாகமும் ஒருவகையில் கூட்டுப்பொறுப்பு எடுத்தாகவேண்டும் என்றும், மாணவர்களது தவறுகளுக்கு தண்டனை வழங்கப்படும் அதேவேளை, இவ்வாறான நிர்வாகக் குறைபாடுகளும் சீர்செய்யப்படவேண்டும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளது.

மேலும், 3 வருடங்கள் ஊடகக் கற்கைநெறியைத் தொடர்ந்த மாணவர்கள், ஊடக ஒழுக்க விதிமுறைகளுக்கு மாறாக தாமே தம்மை ஒரு செய்தியின் கருப்பொருளாக்கி, பல்கலைக்கழகம் பணியிடப்பயிற்சிக்காக ஒழுங்குசெய்திருந்த ஊடகத் தொடர்புகளைப் பயன்படுத்தி பல்கலைக்கழகத்துக்கு அவப்பெயர் ஏற்படும் விதமாக செயற்பட்டிருப்பதும், ஊடக ஒழுக்க விதிமுறைகள் குறித்து இந்த மாணவர்களுக்கு காணப்படும் தெளிவின்மை புலப்படுவதாகவும் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இவற்றின் அடிப்படையில், மாணவர்களுக்கான முறையான வழிகாட்டல் ஆலோசனைகள் வழங்கப்படவேண்டும், மாணவ ஆலோசகர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படவேண்டும், பகிடிவதை என்ற பெயரில் எழுதப்படாத சட்டங்கள் மாணவர்கள் மத்தியில் பேணப்படுவது தடுத்துநிறுத்தப்படவேண்டும் உள்ளிட்ட சில பரிந்துரைகளை வழங்கியுள்ள ஒழுக்காற்றுக்குழு,

புதுமுக மாணவர்களுக்கான நிர்வாகத்தினால் நடாத்தப்படும் அறிமுக நிகழ்வில் மாணவர்களின் உரிமைகள், கடமைகள், கடப்பாடுகள் தொடர்பாக விளக்கும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் கட்டளைச் சாசனம் மாணவர்களுக்கு தெளிவாக விளக்கப்பட்டு, அறிமுக நிகழ்வின் முடிவில் சிரேஷ்ட மாணவர்களையும் உள்ளடக்கிய ஒன்றுகூடலை நடாத்துவதன்மூலம், சர்ச்சைக்குரிய புதுமுக மாணவர் வரவேற்பு நிகழ்வுக்கான தேவையை இல்லாமல் செய்யலாம் என்றும் பரிந்துரைத்துள்ளது. அத்துடன், மாணவர்கள் நாள் முழுவதும் கற்றல் செயற்பாடுகளில் முழுமையாக ஈடுபடுவதை உறுதிப்படுத்தும் வகையில், விரிவுரைகளுக்குப் புறம்பாக, ஒப்படைகள், செயன்முறைப் பயிற்சிகள், பாடப்புறச் செயற்பாடுகள், விளையாட்டு என்பவற்றுக்கான கண்டிப்பான நேரசூசி வகுக்கப்பட்டு, அனாவசியமான செயற்பாடுகளில் மாணவர்கள் ஈடுபடும் வாய்ப்புக்களைக் குறைக்கவேண்டும் என்று பரிந்துரைத்துள்ள ஒழுக்காற்றுக்குழு,

”பல்கலைக்கழகம் அடிப்படையில் ஒரு ஆராய்ச்சி மையம்“ என்று, தனிநபர் விசாரணை அதிகாரியான முன்னாள் வணிக, முகாமைத்துவ பீடாதிபதி பேராசிரியர் நடராஜசுந்தரம் தமது அறிக்கையில் சுட்டிக்காட்டியபடி, காலப்பொருத்தமான, அவசியமான விடயங்களில் விரிவுரையாளர்கள் ஆராய்ச்சி நடவடிக்கைகளை முன்னெடுப்பதுடன், அவற்றில் மாணவர்களையும் ஈடுபடுத்துவதன்மூலம், அவர்களுக்கான சிறந்த முன்னுதாரணமாகத் திகழவேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது.

பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், கல்விசாரா ஊழியர்கள் மற்றும் மாணவர்களுக்கான பொதுவான ஊடகக் கொள்கையொன்று வகுக்கப்பட்டு, பல்கலைக்கழகத்துக்கு அபகீர்த்தி ஏற்படும் வகையில் எவரும் செயற்படாதவாறு கட்டுப்பாடுகள் விதிக்கப்படவேண்டும் என்பதுடன், பல்கலைக்கழக ஊடகக் கற்கைப் பாடத்திட்டத்தில், ஊடக ஒழுக்கவிதிகள் தொடர்பான விடயங்கள் உள்ளடக்கப்பட்டு, துறைசார் ஊடக வல்லுநர்கள் மூலம் இதற்கான பயிற்சிகள் மாணவர்களுக்கு வழங்கப்படவேண்டும் என்றும்ஒ ழுக்காற்றுக்குழு அறிக்கை பரிந்துரைத்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here