திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றிவிட்டார்: பாக்.கப்டன் மீது பெண் பாலியல் புகார்!

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கப்டன் பாபர் ஆஸம், தன்னைத் திருமணம் செய்து கொள்வதாகக் கூறி ஏமாற்றி, கர்ப்பமாக்கிவிட்டார் என்று பெண் ஒருவர் குற்றம் சாட்டியுள்ளார்.

பாகிஸ்தான் அணி தற்போது நியூஸிலாந்து பயணத்தில் இருக்கிறது. நியூஸிலாந்து சென்றுள்ள அந்த அணியினர் 14 நாட்கள் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளனர். இந்தச் சூழலில் கப்டன் பாபர் ஆஸம் மீது பெண் ஒருவர், பரபரப்புக் குற்றச்சாட்டுகளை அடுக்கியுள்ளார். பாகிஸ்தான் அணி வீரர்கள் 7 பேர் ஏற்கெனவே கொரோனாவில் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருக்கும் நிலையில், கப்டன் பாபர் மீதான இந்தக் குற்றச்சாட்டு மேலும் அவருக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

பாகிஸ்தான் அணியின் கப்டன் பாபர் ஆஸமும், பாதிக்கப்பட்ட அந்தப் பெண்ணும் பள்ளியிலிருந்தே ஒன்றாகப் படித்தவர்கள். லாகூரைச் சேர்ந்த தன்னைத் திருமணம் செய்வதாகக் கூறி ஏமாற்றி, பாபர் ஆஸம் பாலியல் உறவு வைத்துள்ளதாக அந்தப் பெண் குற்றம் சாட்டியுள்ளார். மேலும், கர்ப்பம் எனத் தெரிந்தவுடன் தன்னை அடித்துக் கொடுமைப்படுத்தியதாகவும் அந்தப் பெண் புகார் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட அந்தப் பெண் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் கூறுகையில், ”பாபர் ஆஸம் பிரபலமான கிரிக்கெட் வீரராக இல்லாதபோதே எனக்குத் தெரியும். நானும், பாபரும் பள்ளியில் ஒன்றாகப் படித்தோம். அவரிடம் பல நேரங்களில் பணரீதியாக உதவி கேட்டுள்ளேன். அவரும் வழங்கியுள்ளார். கடந்த 2010இல் பாபர் என்னிடம் காதலைத் தெரிவித்தார். நானும் ஏற்றுக்கொண்டேன்.

என்னைத் திருமணம் செய்வதாக உறுதியளித்த பாபர், என்னுடன் பாலியல் உறவு வைத்து கர்ப்பமாக்கினார். நான் கர்ப்பமானதை வெளியில் கூறக்கூடாது என மிரட்டினார் அடித்தார். எனக்கு பாபர் ஆஸமிடம் இருந்து நீதி கிடைக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

இந்தப் பெண்ணின் குற்றச்சாட்டு குறித்து பாகிஸ்தான் பத்திரிகையாளர் சாஜ் சித்திக் ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில், “பாபர் ஆஸம் மீது குற்றச்சாட்டு கூறும் இந்தப் பெண் ஏற்கெனவே இதேபோன்ற குற்றச்சாட்டைக் கூறி பின்னர் அதை வாபஸ் பெற்று அவரிடம் மன்னிப்பு கோரியுள்ளார்” எனத் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here