தனி விமானத்தில் செல்லும் இலங்கை யானை: உலகின் தனிமையான யானைக்கு விடுதலை (VIDEO)

உலகின் தனிமையான யானை என்று அழைக்கப்பட்டு வந்த கவான் யானை பலவருட தனிமைக்குப் பிறகு இன்று புதிய வாழ்கை நோக்கிய பயணத்தை ஆரம்பித்தது.

பாகிஸ்தானின் மர்காசர் சரணலாயத்தில் கடந்த பத்து வருடங்களாக தனியாக தவித்து வந்த கவான் யானை, விமானம் மூலம் வடமேற்கு கம்போடியாவில் உள்ள சீம் சணாலயத்திற்கு தனி விமானத்தில் கொண்டு செல்லப்படுகிறது.

பாகிஸ்தானில் இருந்த ஒரேயொரு ஆசிய யானை கவானாகும்.

உலக வனவிலங்கு ஆர்வலர்களின் உணர்திறன்மிக்க விடயங்களில் ஒன்றாக நீண்டகாலமாக விளங்கிய கவான் விவகாரம் சுபமாக முடிந்ததில், கவானுக்கும், வனவிலங்கு ஆர்வலர்களிற்கும் பெரு மகிழ்ச்சியே. பாகிஸ்தானின் உயர்நீதிமன்ற உத்தரவு கவானின் விவகாரத்தை எளிதாக்கியது.

பாகிஸ்தான் சரணாலயத்தில் தனிமையிலிருந்த கவானை விடுவிக்க பொப் நட்சத்திரம் செர் ஆரம்பித்த பிரச்சார இயக்கத்தில் உலகெங்குமிருந்து ஏரளமானவர்கள் இணைந்தனர். இந்த கூட்டு முயற்சி, பாகிஸ்தானில் உணர்வலைகளை தட்டிவிட, கவானின் புதுவாழ்வு சாத்தியமாகியுள்ளது.

காவன் இன்று ஞாயிற்றுக்கிழமை யானை கம்போடியா சரணாலயத்திற்கு விமானத்தில் கொண்டு செல்லப்பட்டது.

சற்றே மயக்கமடைந்த கவானை விசேஷமாக கட்டப்பட்ட உலோகக் கூட்டில் அடைத்து விமானத்தில் ஏற்றினர். அந்த உலோகக்கூட்டிற்குள் கவானை அடைக்க- கயிறுகளைப் பயன்படுத்தி உள்ளே இழுத்தனர். பின்னர் பாரவூர்தியில் அந்த உலோககூண்டு ஏற்றப்பட்டு இஸ்லாமாபாத் விமான நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

அங்கிருந்து, கவான் ரஷ்ய போக்குவரத்து ஜம்போ ஜெட் வழியாக வடமேற்கு கம்போடியாவில் உள்ள சீம் சரணாலயத்திற்கு செல்கிறது. அந்த விமானம்  புதுடில்லியில் எரிபொருள் நிரப்புவதற்காக நிறுத்தப்படும். 36 வயதான யானையுடன் 10 பேர் கொண்ட மருத்துவக் குழுவும் செல்கிறது.

பாகிஸ்தான் மிருகக்காட்சி சாலையில் கவானிற்கு நடந்த பிரியாவிடை நிகழ்வில் உரையாற்றிய பாகிஸ்தான் பிரதமரின் காலநிலை மாற்றம் தொடர்பான சிறப்பு உதவியாளர் மாலிக் அமின் அஸ்லம், கம்போடிய விமான நிலையத்தில் வரவேற்புக் குழு காவனைப் பெறும் என்று கூறினார்.

ஆரம்பத்தில், காவன் அதற்காக தயாரிக்கப்பட்ட 10 ஏக்கர் பரப்பளவில் வைக்கப்படுவார், அங்கிருந்து அவர் தனது இனத்தைச் சேர்ந்த மற்றவர்களைக் காண முடியும் என்று அஸ்லம் கூறினார்.

“கவான் தனது வகையான மற்ற யானைகளுடன் இருக்கக்கூடிய இடத்திற்கு அவரை அனுப்புவது உண்மையில் சரியான தேர்வாகும். கம்போடியாவில் கவான் மகிழ்ச்சியாக இருப்பதைக் கண்டு நாங்கள் மகிழ்ச்சியடைவோம். கவான் விரைவில் ஒரு கூட்டாளரைக் கண்டுபிடிக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்.” என்றார்.

புகழ்பெற்ற பாடகியும் ஒஸ்கார் விருதும் பெற்ற நடிகையான செர், இஸ்லாமாபாத் மிருகக்காட்சிசாலையில் இருந்த காவனை உலகிற்கு அறிமுகப்படுத்தினார். அதிக எடை கொண்ட, 36 வயதான ஆண் யானை – பாழடைந்த தங்குமிடத்தில் உடலாலும் மனதாலும் சோர்ந்து  பரிதாபகரமான நிலைமையில் இருந்தது. செர் மேற்கொண்ட சமூக ஊடக பிரச்சாரம் இன்று கவானை, கம்போடியாவிற்கு விமானமேற்றியுள்ளது.

தொடர்ந்து சங்கிலியால் பிணைக்கப்பட்ட நிலையில், துணையில்லாத மனச்சோர்வில் சுவர்களில் தலையை மோதி பரிதாபமான வாழ்க்கை வாழ்ந்தது. இந்த தகவல்கள் வெளியானபோது இஸ்லாமாபாத் மிருகக்காட்சி சாலை நிர்வாகம், சங்கிலியால் பிணைத்து வைத்த செய்தியை மறுத்தது.

25,000 ஏக்கர் கம்போடிய வனவிலங்கு சரணாலயத்திற்கு கவான் பயணம் செய்வதற்கு முன்னர் காவானைப் பார்வையிட பாகிஸ்தான் தலைநகரில் அவர் பல நாட்கள் தங்கியிருந்தார். கவானை வரவேற்க செர் இன்று ஞாயிற்றுக்கிழமை கம்போடியா சென்றுள்ளார்.

கவான் பாகிஸ்தான் மிருகக்கட்சிசாலையில் பரிதாபமான நிலைமையில் இருப்பது தொடர்பில் இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றத்தின் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் வழங்கப்பட்ட முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பில், கவானை வாழ பொருத்தமான இடத்திற்கு அனுப்ப உத்தரவிடப்பட்டது. கவானின் பூர்வீக இடமான இலங்கையா அல்லது வேறு பொருத்தமான இடமா என்பதை தீர்மானித்து அறிக்கை சமர்ப்பிக்கவும் அரசிற்கு உத்தரவிட்டிருந்தது.

கம்போடியாவிற்கு கவானை அனுப்ப தீர்மானித்து அதற்காக பல மாதங்கள் அதற்கு பயிற்சியளிக்கப்பட்டது. உலோகக்கூண்டில் இருப்பது, பல மணி நேர விமான பயணத்திற்காக கவான் பயிற்சியளிக்கப்பட்டது.

இலங்கையிலிருந்து வந்த கவான்

1985 ஆம் ஆண்டு கவான் யானை பாகிஸ்தானின் மர்காசர் சரணலாயத்துக்கு அழைத்து வரப்பட்டது. இலங்கையிடமிருந்து அன்பு பரிசாக அளிக்கப்பட்டதுதான் இந்த கவான் யானை. சரணலாயத்தில் தனியாக இருந்த கவான் யானைக்கு துணையாக இருந்த சாஹிலி என்ற யானை 1990 ஆம் ஆண்டு அழைத்து வரப்பட்டது. இந்த நிலையில் பாகிஸ்தானில் நிலவும் தட்ப வெப்ப நிலைக் காரணமாக சாஹிலி யானை 2012 ஆண்டு மரணமடைந்தது. இதனைத் தொடர்ந்து கவான் யானை தனிமையில் இருந்து வந்தது. தனிமையின் காரணமாக கவானுக்கு அடிக்கடி மதமும் பிடித்து வந்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here