யாழ் நகரில் வெதுப்பகம், புடவை விற்பனை நிலையங்களும் பூட்டு!

யாழ்ப்பாணம் மாநகரில் கஸ்தூரியார் வீதியில் அமைந்துள்ள வெதுப்பகம், மின்சார நிலைய வீதியில் உள்ள மேலும் ஒரு புடவை வியாபார நிலையம் என்பவற்றை மூடுவதற்கு மாநகர சுகாதார மருத்துவ அதிகாரி பாலமுரளி அறிவுறுத்தியுள்ளார்.

காரைநகரில் ஒருவருக்கு கோரோனா வைரஸ் தொற்று உள்ளமை நேற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் அவர் சென்று வந்த இடங்கள் சுகாதாரத் துறையினரால் இனங்காணப்பட்டு தொடர்புடையவர்கள் சுயதனிமைப்படுத்தப்படுகின்றனர்.

யாழ்ப்பாணம் மாநகரில் திருநெல்வேலி நொதேர்ன் வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவின் சேவைகள் இடைநிறுத்தபட்டுள்ளன. அந்தப் பிரிவில் பணியாற்றும் 15 பேர் சுயதனிமைப்படுத்துள்ளனர்.

யாழ்ப்பாணம் நகரில் மின்சார நிலைய வீதியில் உள்ள புடவை விற்பனை நிலையம் தனியார் பேருந்து மற்றும் பாரவூர்திகள் போக்குவரத்து சேவை நிறுவனம் மற்றும் நாவந்துறையில் வியாபார நிலையம் என்பன இன்று முற்பகல் மூடப்பட்டுள்ளன.

இந்த நிலையில் தொடர்ச்சியான நடவடிக்கையாக யாழ்ப்பாணம் கஸ்தூரியார் வீதியில் அமைந்துள்ள வெதுப்பகம் ஒன்று மறு அறிவித்தல் வரை இன்று பிற்பகல் முதல் மூடப்பட்டது. அதன் முன்பக்க வாயிலைப் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளதுடன் வெதுப்பகத்தை இயக்கி உற்பத்திப் பொருள்களை மாற்று வழியூடாக விநியோகிக்க அனுமதியளிக்கப்பட்டுள்ளது. அத்துடன், நவம்பர் 21ஆம் திகதி வெதுப்பக விற்பனையகத்தில் பணியாற்றிய அத்தனை பேரும் தனிப்படுதலுக்கு உள்படுத்தப்படவுள்ளனர்.

திருநெல்வேலியில் உள்ள தனியாருக்குச் சொந்தமான யாழ்.வைத்தியசாலையும் மறு அறிவித்தல்வரை சேவைகளை இடைநிறுத்தப் பணிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் மின்சார நிலைய வீதியில் உள்ள மேலும் ஒரு புடவை விற்பனை நிலையம் இன்று பிற்பகல் மூடப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் வைத்தியசாலை வீதியில் நவீன சந்தை கட்டடத் தொகுதியில் உள்ள புத்தக நிலையமும் அதிகாரிகளால் மூடப்பட்டுள்ளது.

அத்துடன் யாழ்ப்பாணம் மாநகரில் மூன்று வீடுகளுக்கு அவர் சென்று வந்த நிலையில் அந்தக் குடும்பங்களும் சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்கு 7 நாள்களின் பின் பிசிஆர் பரிசோதனை முன்னெடுக்கப்படும். அதன் பெறுபேற்று அறிக்கை கிடைத்த பின் மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்று யாழ்ப்பாணம் மாநகர சுகாதார மருத்துவ அதிகாரி தெரிவித்தார்.

காரைநகர் வாசி பயணித்த பேருந்தின் சேவையும் இடைநிறுத்தப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here