‘டெனீஸ்வரனை இரண்டு நாள் அமைச்சராக்குங்கள்’: நீதிமன்றத்திற்குள் சுமந்திரன் சமரச முயற்சி!

வடக்கு அமைச்சரவை சர்ச்சையை முடிவுக்கு கொண்டு வரும் பேச்சுவார்த்தைகள் மிக தீவிரமாக நடந்து வருவதை தமிழ்பக்கம் மிக நம்பகரமாக அறிந்துள்ளது. இந்த பேச்சுக்கள் இன்றும் மிக தீவிரமாக நடந்துள்ளன.

வடக்கு அமைச்சரவையிலிருந்து தன்னை நீக்கியது சட்டவிரோதமானதென கூறி, பா.டெனீஸ்வரன் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார். இதை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட நீதிமன்றம், டெனீஸ்வரனின் நீக்கத்திற்கு எதிராக இடைக்கால தடை விதித்துள்ளது. டெனீஸ்வரன் சட்டபூர்வமாக அமைச்சராக நீடிப்பதையும் உறுதிசெய்திருந்தது.

இந்தநிலையில், நீதிமன்ற தீர்ப்பின் பிரகாரம் தன்னை பதவியில் நீடிக்கும் ஏற்பாடு செய்யவில்லையென கூறி, முதலமைச்சர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கொன்றையும் டெனீஸ்வரன் தாக்கல் செய்திருந்தார். கடந்த 7ம் திகதி முதலமைச்சர் நீதிமன்றில் முன்னிலையாகியிருந்தார்.

இந்த வழக்கு விசாரணையின் பின்னர், ப.சத்தியலிங்கம் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் ஒரு சமரச திட்டமொன்றை முதலமைச்சரிடம் பிரேரித்திருந்தார் என்பதை தமிழ்பக்கம் நம்பரகமாக அறிந்துள்ளது. பா.டெனீஸ்வரனை இரண்டு நாள் மாத்திரம் அமைச்சராக நீடிக்க அனுமதிக்கும்படியும், அதன்பின்னர் அவரை அமைச்சரவையிலிருந்து நீக்கிவிடும்படியும் சுமந்திரன் கோரியிருந்தார்.

எனினும், முதலமைச்சர் அதற்கு சாதகமாக பதிலளித்திருக்கவில்லை. டெனீஸ்வரனை அமைச்சராக்கினால் இரண்டு ஆபத்துக்கள் உள்ளதாக முதமைச்சர் சுட்டிக்காட்டினார். பதவியில் இல்லாத காலத்திற்குரிய அமைச்சர் சம்பளத்தை கோருவார், முன்னைய அமைச்சரவை சட்டபூர்வமில்லாதது என மாகாண நிர்வாகமே அறிவித்தால் அப்போது எடுக்கப்பட்ட தீர்மானங்களின் சட்டவலுவும் இல்லாமல் போய்விடும். அப்போதைய தீர்மானங்களிற்கு எதிராக யாராவது நீதிமன்றத்தையும் நாடலாம். இதனால் வீண் குழப்பங்கள் ஏற்படலாமென முதலமைச்சர் சுட்டிக்காட்டினார்.

டெனீஸ்வரன் பதவியில் இல்லாத காலத்திற்குரிய சம்பளத்தை கோரமாட்டார் என்பதற்கான உத்தரவாதத்தை தன்னால் தர முடியுமென சுமந்திரன் குறிப்பிட்டார். எனினும், முதலமைச்சர் அதை ஏற்கவில்லை. இதனால் அந்த சமரச முயற்சி வெற்றியளிக்கவில்லை.

இந்தநிலையில் வடக்கு அவைத்தலைவர் சீ.வீ.கே.சிவஞானம், வடமாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் ஆகியோர் இன்று மதியம் முதலமைச்சரை சந்தித்து சமரச முயற்சியில் இறங்கினர். வடக்கு அவைத்தலைவர் இன்றைய தினம் டெனீஸ்வரன் மற்றும் ஆளுனருடனும் தொலைபேசியில் பேச்சு நடத்தியிருந்தார்.

தன்னை ஐந்து நாட்கள் அமைச்சராக நீடிக்க அனுமதிக்கும்படியும், ஒரு அமைச்சரவை வாரிய கூட்டத்தில் கலந்து கொண்டுவிட்டு, அமைச்சர் பதவியை துறப்பதாகவும் டெனீஸ்வரன் குறிப்பிட்டிருந்தார்.

இதேவேளை, டெனீஸ்வரனுடன் வடக்கு ஆளுனரும் இந்த விடயத்தை கலந்தாலோசித்திருக்கிறார். சிக்கலில்லாமல் விவகாரத்தை தீர்க்க ஆளுனரும் முயற்சித்தார். எனினும், மீளவும் அமைச்சர் பதவி வழங்க வேண்டும் (சில நாளில் நீக்கினாலும் சரி) என டெனீஸ்வரன் தரப்பில் நிபந்தனை விதிக்கப்பட்டிருந்தது.

டெனீஸ்வரனின் நீக்கத்தை ஆளுனர் வர்த்தமானியில் பிரசுரித்தால் இந்த விவகாரத்தை தீர்க்கலாமென முதலமைச்சர் முன்னர் கூறிவந்தது வலிதான வாதமல்ல என்பதை ஆளுனர் இன்று சமரச பேச்சாளர்களிடம் தெரிவித்துள்ளார். டெனீஸ்வரனை நீக்கும்படி தனக்கு பரிந்துரை செய்தால் மாத்திரமே அதை வர்த்தமானியில் பிரசுரிக்கலாம், ஆனால் டெனீஸ்வரனை பதவி நீக்கிவிட்டு அதன் பிரதியை தனக்கு அனுப்பினால் வர்த்தமானியில் பிரசுரிக்க சட்டத்தில் இடமில்லையென்பதை ஆளுனர் குறிப்பிட்டிருந்தார். இதுபற்றி இன்று முதலமைச்சருக்கும் குறிப்பிடப்பட்டுள்ளது.

டெனீஸ்வரன் தற்போது அமைச்சராக நீடிப்பதில் சட்டரீதியான தடைகள் இல்லையென மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் இடைக்கால தடையில் குறிப்பிடப்பட்டுள்ளதால், முதலமைச்சரின் முன்னைய யோசனைப்படி ஆளுனர் வர்த்தமானி மூலம் டெனீஸ்வரனை பதவிநீக்க முடியாது.

அப்படி பதவிநீக்குவதில் ஆட்செபணை இருக்கிறதா என ஆளுனர் தரப்பிலிருந்து டெனீஸ்வரனிடம் கேட்கப்பட்டுள்ளது. அப்படி நீக்கினால் நீதிமன்றத்தை நாடப் போவதாக டெனீஸ்வரன் தரப்பில் கூறப்பட்டதையடுத்து, அந்த திட்டம் கைவிடப்பட்டுள்ளது.

தற்போதைய அமைச்சர்களில் ஒருவரை பதவி நீக்கிவிட்டு, அமைச்சரவை கூட்டமொன்றை நடத்துமாறும், அதில் கலந்து கொண்டதும், பதவியை துறப்பதாகவும், அதன் பின்னர் பதவி நீக்கிய அமைச்சரை மீளவும் பதவியில் அமர்த்தும் படியும் டெனீஸ்வரன் தரப்பில் யோசனை சொல்லப்பட்டுள்ளதை தமிழ்பக்கம் அறிந்துள்ளது.

மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் 18ம் திகதி வழக்கு தவணையில், நீதிமன்ற அவமதிப்பு தொடர்பான குற்றப்பத்திரம் வாசிக்கப்படவுள்ளது. குற்றப்பத்திரம் வாசிக்கப்பட்டால், டெனீஸ்வரன் வழக்கிலிருந்து விலகினாலும், நீதிமன்ற அவமதிப்பு வழக்கிலிருந்து முதலமைச்சரால் மீள முடியாமல் போகலாம். இதை கருத்தில் கொண்டே வடக்கு அவைத்தலைவர் இந்த சமரச முயற்சியை ஆரம்பித்துள்ளதாக தெரிகிறது.

இன்றைய சந்திப்பில் இரண்டு தரப்பும் மிக சுமுகமான பேச்சு நடத்தியதாகவும், தமது யோசனைகளை முதலமைச்சர் ஏற்றுக்கொள்ளும் வாய்ப்புள்ளதாகவும் சந்திப்பில் கலந்து கொண்ட சிவாஜிலிங்கம் தமிழ்பக்கத்திடம் தெரிவித்தார்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here