ஈரானின் முதன்மை அணுவிஞ்ஞானி சுட்டுக்கொலை: இஸ்ரேல் கைவரிசை?

ஈரானின் மூத்த அணு இயற்பியலாளர் மொஹ்சென் பக்ரிசாதே கொல்லப்பட்டள்ளார். ஈரானின் அணுசக்தி திட்டங்களின் தந்தையென வர்ணிக்கப்படும் அவர், இஸ்ரேலிய புலனாய்வு நடவடிக்கையென கருதப்படும் ஒரு நடவடிக்கையில் கொல்லப்பட்டுள்ளர்.

கிழக்கு தெஹ்ரானின் புறநகர்ப் பகுதியான அப்சார்ட்டில் தனது வாகனத்தில் சென்று கொண்டிருந்த ஃபக்ரிசாதே ஆயுததாரிகளால் சுடப்பட்டார். அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்ததாக ஈரானின் வெளியுறவு அமைச்சு வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.

இஸ்ரேலிய பிரதம மந்திரி பெஞ்சமின் நெதன்யாகு ஒரு செய்தியாளர் மாநாட்டில் “அந்த பெயரை நினைவில் கொள்ளுங்கள்” என்று ஒரு முறை குறிப்பிட்டிருந்தார்.

கிட்டத்தட்ட 10 ஆண்டுகளாக ஈரானிய அணு விஞ்ஞானிகளை குறிவைத்து தொடர்ச்சியான கொலைகளை இஸ்ரேல் மேற்கொண்டதாக சந்தேகிக்கப்படுகிறது.

இன்று மதியம் அணுசக்தி விஞ்ஞானியை ஏற்றிச் சென்ற காருக்கு முன்னால் திடீரென தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

தாக்குதல் நடத்தியவர்களுக்கும் மொஹ்சென்னின் மெய்க்காப்பாளர்களுக்கும் இடையே துப்பாக்கிச் சூடு நடந்தது, தாக்குதலை நடத்த வந்த நான்கு பேர் கொல்லப்பட்டனர். இந்த சம்பவத்தில் விஞ்ஞானியின் 06 மெய்க்காப்பாளர்களும் கொல்லப்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்தன.

ஈரானிய வெளியுறவு மந்திரி “பயங்கரவாதிகள் இன்று ஒரு ஈரானிய விஞ்ஞானியைக் கொன்றனர், இஸ்ரேலின் ஆதரவோடு இந்த தாக்குதல் நடத்தப்பட்டது” என்று ட்வீட் செய்துள்ளார்.

இதற்கிடையில், ஈரானிய புரட்சிகர இராணுவத்தின் தளபதி தாக்குதலுக்கு ஆதரவளித்த அனைவரையும் நிச்சயமாக பழிவாங்குவார் என்று கூறினார்.

63 வயதான ஃபக்ரிசாதே ஈரானின் புரட்சிகர காவல்படையில் உறுப்பினராக இருந்தார் மற்றும் ஏவுகணை உற்பத்தியில் நிபுணராக இருந்தார். இஸ்ரேலிய இரகசிய சேவைகள் பல ஆண்டுகளாக அவரை கொல்ல நீண்ட காலமாக முயன்று வந்தன.

அமெரிக்க பென்டகனும் தாக்குதலின் அறிக்கைகள் குறித்து கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டது.

ஃபக்ரிசாதே ஈரானின் அமட் (ஹோப்) அணு திட்டத்தை வழிநடத்தினார். ஈரான் அணு ஆயுதத்தை உருவாக்குவதற்கான  நடவடிக்கை இது என்று இஸ்ரேலும் மேற்கு நாடுகளும் குற்றம் சாட்டின.

அமட் திட்டம் 2000 களின் முற்பகுதியில் முடிந்தது என்று சர்வதேச அணுசக்தி நிறுவனம் கூறுகிறது. அதன் ஆய்வாளர்கள் இப்போது ஈரானிய அணுசக்தி தளங்களை கண்காணிக்கின்றனர்.

இந்த ஆண்டு ஜனவரியில் அமெரிக்க வான்வழித் தாக்குதலில் ஐ.ஆர்.ஜி.சி குட்ஸ் படைத் தலைவர் ஜெனரல் காஸ்ஸெம் சோலைமணி கொல்லப்பட்ட பின்னர், ஈரானிய உயர் அதிகாரி ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.

2010 ல் கொல்லப்பட்ட மற்றொரு சிறந்த ஈரானிய அணு விஞ்ஞானி மஜித் ஷாஹ்ரியாவின் படுகொலை ஆண்டு நினைவு தினத்தன்று ஃபக்ரிசாதேவின் கொலை நிகழ்ந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here