வங்க கடலில் உருவான நிவர் புயல் நேற்று இரவு 11.30 முதல் இன்று அதிகாலை 2.30க்குள் கரையை கடந்திருக்கிறது. இதனால் இந்தியாவின் தமிழகத்தில் காஞ்சி,புதுச்சேரி, கடலூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகள் பாதிக்கப்பட்டிருக்கின்றன.
நிவர் புயலின் தாக்கத்தினால் கடலோர மாவட்டங்களில் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஏராளமான மரங்கள் வேருடன் சாய்ந்தன. சென்னையில் 50க்கும் மேற்பட்ட இடங்களில் மரங்கள் விழுந்துள்ளன. வீடுகளின் கூரைகள் பெயர்ந்து காற்றில் அடித்துச் செல்லப்பட்டன. தாழ்வான பகுதிகளில் மழைநீர் சூழ்ந்துள்ளது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாலும், பாதிக்கப்படும் பகுதிகளில் உள்ள மக்கள் முன்கூட்டியே வெளியேற்றப்பட்டு முகாம்களில் தங்க வைக்கப்பட்டதாலும், பெரிய அளவில் அசம்பாவிதங்கள் ஏற்படவில்லை.
சாலையில் விழுந்த மரங்களை அகற்றும் பணியில் மீட்புக்குழுவினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இதேபோல் தண்ணீர் சூழ்ந்த பகுதிகளில் உள்ள மக்களை மீட்கும் பணிகளும் நடைபெறுகின்றன.
தாழ்வான பகுதிகளில் சூழ்ந்துள்ள மழைநீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
இதற்காக அரசு உதவி எண்களை தொடர்பு கொண்டு மக்கள் தகவல் தெரிவித்தவண்ணம் உள்ளனர். அதன்படி பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு மீட்புக்குழுவினர் மற்றும் உள்ளாட்சி பணியாளர்கள் சென்று தேவையான நடவடிக்கைளை மேற்கொண்டுள்ளனர்.
புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதியில் ழை வெள்ளம் அதிகளவில் நிரம்பியுள்ளதாலும் அப்பகுதியில் புயலின் பாதிப்பு அதிகம் ஏற்பட்டுள்ளதாலும் எதிர்வரும் 28 ஆம் திகதிவரை குறித்த பகுதிகளில் உள்ள பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்ருக்கிறது.
இதேவேளை கடலூரிலும் அதிகளவு பாதிப்பு ஏற்பட்டிருக்கும் நிலையில் குறித்த பகுதியை நேரில் சென்று பார்வையிட்டுள்ளார் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி . கடலூரில் 800 ஏக்கர் நெற்பயிர்கல் நீரில் மூழ்கி நாசமடைந்துள்ளதாக கூறப்படுகிறது. சென்னை நகரும் அதீத மழை காரணமாக வெள்ளத்தில் மூழ்கியுள்ளதால் பேருந்து சேவைகள் மிக குறைந்தளவில் இடமம்பெறுவதாகவும் அததியாவசியம்கருதியே மக்கள் நடமாட்டம் உள்ளதாகவும் இந்திய செய்திகள் கூறுகின்றன.