கிளிநொச்சி கிராமத்திலிருந்து முதலாவது பொறியியலாளரும் மருத்துவரும்: வறுமை சாதிக்க தடையல்ல என்பதனை உணர்த்திய சகோதரிகள்

1989 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட கிளிநொச்சி பாரதிபுரம் பாடசாலையில் 2014
ஆம் ஆண்டே க.பொ.த. உயர்தரம் கொண்டுவரப்பட்டது. இதன் போது சிலர்
பாரதிபுரம் பாடசாலைக்கு ஏன் கணித விஞ்ஞானப் பிரிவுகள், இங்கு இதனை
ஆரம்பிப்பது தேவையற்ற வேலை எனக் தமது வழமையான எண்ணங்களை
வெளிப்படுத்தினார்கள்.

ஆனால் அங்கு ஏன் கணித விஞ்ஞானப் பிரிவுகள் எனக் கேட்டவர்களுக்கு இப்போது
அந்தப் பாடசாலை பதிலளிக்க ஆரம்பித்திக்கிறது. உயர்தரம் ஆரம்பித்ததன்
பின்னர் பல மாணவர்கள் பின்தங்கிய அந்த பிரதேசங்களிலிருந்து
பல்கலைகழகங்களுக்கு சென்றிருந்தாலும் முதற்தடவையாக
பாரதிபுரம் வித்தியாலயத்திலிருந்து பொறியியல் துறைக்கும் (E2) சித்த
மருத்துவ துறைக்கும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சகோதரிகள்
செல்கின்றார்கள்.

தென்னிலங்கையில் ஏற்பட்ட இனவன்முறைகளால் பாதிக்கப்பட்ட- மலையக பின்னணியுடையவர்கள் குடியேற்றப்பட்ட கிராமங்களே பாரதிபுரம் பாடசாலையினை சூழவுமுள்ள பாரதிபுரம், மலையாளபுரம், கிருஸ்ணபுரம் விவேகானந்தநகர் போன்ற கிராமங்களாகும். பெருமளவு உடல் உழைப்பையே நம்பி வாழ்க்கையினை கொண்டு செல்கின்ற இந்த மக்கள் இப்பொழுது கல்வியில் படிப்படியான முன்னேற்றத்தை நோக்கி செல்வதனை பல குறிகாட்டிகள் வெளிப்படுத்தினாலும் கல்வியில் முன்னேற இன்னும் அதிக தூரம் செல்ல வேண்டியிருக்கிறது.

இந்த நிலையில்தான் பாரதிபுரம் பாடசாலையில் தரம் ஒன்றிலிருந்து உயர்தரம் வரை
கல்வி கற்ற மலையாளபுரத்தைச் சேர்ந்த சகோதரிகளான ஜெயராஜ் உஷாயினி,
பொறியியல் பீடத்திற்கும் (E2) ஜெயராஜ் ஜனார்த்தினி சித்த வைத்தியதுறைக்கும் தெரிவாகியுள்ளனர்.

குடும்ப பின்னணி

தந்தை தங்கராசா ஜெயராஜ் (59) கூலித்தொழில் செய்தவர், தற்போது சிறு தொழில்
முயற்சியாளர். வறுமைக்குட்பட்ட குடும்பம். வீட்டில் மூன்று பெண் பிள்ளைகள் கடைசி பிள்ளை தற்போது உயர் தரம் விஞ்ஞானப் பிரிவில் கல்வி கற்கின்றார். மிக்கசர், மரவள்ளி பொறியல் போன்றவற்றை சிறுதொழில் உற்பத்தி முயற்சி
மூலம் கிடைக்கின்ற வருமானத்தை கொண்டு வீட்டுச் செலவையும், பிள்ளைகளின்
கல்விச் செலவையும் மிகுந்த சிரமத்துடன் கொண்டு செல்கின்றார்.

மூத்த மகள் ஜனார்த்தினி க.பொ.த சாதாரண தரத்தில் 8ஏ,பி பெறுபேறு பெற்று
சித்தியடையும் வரை பிள்ளைகள் படிக்க ஒரு கதிரை மேசை கூட இல்லாத தற்காலிக
கொட்டில் வீடு. அதன் பின்னர் ஒய்வுபெற்ற அதிபர் ஒருவரின் உதவியால் ஒரு
மேசையும் கதிரையும் கிடைத்தது.

க.பொ.த சாதாரணம் தரம் கல்வி கற்கும் வரை இவர்கள் எந்தவொரு தனியார் கல்வி
நிலையத்திற்கோ, பிரத்தியோக வகுப்புக்களுக்கோ சென்றது கிடையாது. பாடசாலை
கல்வியும், அதன் பின்னர் வீட்டில் சுய கற்றலுமே. இருந்தும் சிறந்த
பெறுபேறுகளை பெற்ற மாணவிகளாக காணப்படுகின்றனர். ஜனார்த்தினி 2015 இல்
8ஏ,பி, உஷாயினி 2016 இல் 3ஏ,4பி,சி,எஸ் பெறுபேற்றையும் பெற்றுள்ளனர்.

படிக்கின்ற காலங்களில் பல தடவைகளில் கொப்பி முடிந்துவிட்டால் உடனடியாக
கொப்பிகளை வீட்டில் சொல்லி பெற்றுக்கொள்ள முடியாத நிலைகாணப்பட்டுள்ளது.
பயிற்சி புத்தகங்கள் வாங்க முடியாது, தனியார் கல்வி நிலையங்களுக்கு
செல்லும் சக மாணவிகளிடம் பாடசாலையில் ஆசிரியர் இல்லாத பாடங்களின்
நோட்ஸ்க் கேட்டால் கூட மாணவிகள் தர மறுத்து தங்களுடன் கதைப்பதனையே
நிறுத்திய கடந்தகால சம்பங்களை இன்றும் நினைத்து பார்க்கின்றனர். ஆனாலும்
நம்பிக்கையுடன் தாம் கற்றதாக தெரிவிக்கும் சகோதரிகள் தங்களுக்காக தங்கள்
பெற்றோர்கள் படும் கஸ்ரம் தங்களுக்கு அந்த நம்பிக்கையை தந்ததாகவும்
குறிப்பிட்டனர்.

கல்வியே எங்களின் வளமான எதிர்காலத்திற்கான ஒரேயொரு வழி என்பதனை நினைத்து கற்றோம். இதனால் நாம் எதிர்பார்த்தது கிடைக்கவில்லை என்றாலும் ஒரு நல்ல நிலையை பெற்றுள்ளோம். ஜனார்த்தினி விஞ்ஞானப் பிரிவில் 2பி சி பெறுபேற்றை பெற்று சித்த வைத்திய துறைக்கும், உஷாயினி ஏபிசி பெறுபேற்றை பெற்று பொறியியல் (E2) துறைக்கும் அனுமதி பெற்றுள்ளனர். கிளிநொச்சி பாரதிபுரம் வித்தியாலயம் மற்றுமல்ல அந்த பிரதேசமும் பெருமைகொள்கிறது. முதல் முதலாக ஒரு பொறியியலாளரும், வைத்தியரும் உருவானதை எண்ணி மலையாளபுரம் மண்ணும் மகிழ்ச்சியடைகிறது. ஒன்று இரண்டாகி, இரண்டு பத்தாகி செல்ல வேண்டும் என்பதே அனைவரினதும் விருப்பம். அத்தோடு வறுமை என்பது சாதிப்பதற்கு ஒருதடையல்ல என்பதனையும் இந்த சகோதரிகள் வெளிப்படுத்தி நிற்கின்றார்கள்.

தந்தையின் ஏக்கம்

இருவரும் பாடசாலையில் உயர்தரம் கல்வி கற்கும் போதே அவர்களின் செலவுகளை
ஈடு செய்ய முடியாது பெரும் நெருக்கடிக்குள் உள்ளாகியிருந்தேன் ஆனால்
தற்போது இருவரும் ஒரேநேரத்தில் பல்கலைகழகத்திற்கு செல்கின்றார்கள் இது
ஒரு புறம் அளவுகடந்த மகிழ்ச்சி மறுபுறம் இவர்களின் செலவுகளை எப்படி
சமாளிக்கப் போகின்றேன் என்ற கவலை என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here