கொரோனாவால் இறப்பவர்களின் உடல்களை வடக்கு, கிழக்கில் புதையுங்கள்: ஹரீஸ் எம்.பி!

எமது நாட்டின் அதிலும் குறிப்பாக முஸ்லிம் சமூகத்தின் மக்கள் பிரதிநிதி என்ற அடிப்படையில் கொரோனா தொற்றினால் உயிரிழக்கின்றவர்களின் உடல்களை அடக்கம் செய்வது சம்மந்தமாக அரச தலைவர்கள் அமைச்சரவையில் பல முறைபேசி இணக்கப்பாட்டுக்கு வந்து நல்லடக்கம் செய்ய நடவடிக்கைகள் எடுத்த போதிலும் எமது நாட்டின் சுகாதார அமைச்சின் தொழில்நுட்ப நிபுணர்கள் குழு இது சம்மந்தமான ஒரு எதிர்ப்பினை தெரிவித்து அடக்கம் செய்வற்கான முடிவினை தள்ளி வைத்துள்ளனர்.

உண்மையில் உலகளாவிய ரீதியில் 200 நாடுகளில் உடல்கள் அடக்கம் செய்யப்படுகின்றது. குறிப்பாக உலகில் உள்ள விஞ்ஞானிகளில் தலைசிறந்து விளங்குகின்ற ஐக்கிய அமெரிக்கா, ரஸ்யா போன்ற பல நாடுகளில் கொரோனா தொற்று உடல்களை நல்லடக்கம் செய்வதற்கு அங்குள்ள சுகாதாரத்துறை நிபுணர்கள், விஞ்ஞானிகள் அனுமதியளித்துள்ள போதிலும் எமது நாட்டில் மட்டும் ஜனாசாக்களை அடக்குவதற்கான அனுமதியினை தொழில்நுட்ப நிபுணர்கள் குழு தான் தீர்மானிக்க வேண்டும் என்று ஒருதலைப்பட்சமாகவும், பாராபட்சமாகவும் நிராகரித்து வருவது மிகவும் வேதனையளிக்கின்ற விடயமாகும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் தெரிவித்தார்.

செவ்வாய்க்கிழமை பாராளுமன்றத்தில் நடைபெற்ற உள்ளூராட்சி மாகாண அமைச்சின் வரவு செலவுத் திட்ட குழு நிலை விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் அங்கு தொடர்ந்தும் பேசிய அவர்,

அண்மையில் ஸ்ரீ ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழக புவியியல்துறை பேராசிரியர் ஜினதாஸ கடுப்பேத்த ஊடகத்தில் கருத்து தெரிவிக்கும் போது உடல்களை அடக்கம் செய்வதைவிட இந்த நாட்டில் கொரோனா நோயாளிகள் சுமார் 60க்கு மேற்பட்ட வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அந்த கொரோனா நோயாளிகளினால் வெளிப்படுத்தப்படுகின்ற அவர்களின் மலசலம், கழிவு நீர்கள் உட்பட அனைத்தும் நிலத்திற்கு செல்லுகின்றன. எனவே அவைகள் இந்த மரணித்த உடல்களை விட பாரதூரமான கழிவுகளாக இருக்கின்றது. இது மரணித்த உடல்களை அடக்கம் செய்வதை விட இந்த நோயாளிகளின் கழிவு நீர் கடும் ஆபாத்தானதும், தொற்று வைரசுகளை பரப்பும் என்றும் ஏற்றுக்கொண்டு கூறி இருகின்றார்.

அப்போது கொரோனா தொற்றுக்கு சிகிச்சையளிக்கும் வைத்தியசாலைகள், தனிமைப்படுத்தும் நிலையங்களில் உள்ள கழிவுகள் நிலத்திற்கு சென்று அந்த வைரசுக்கு உந்துசக்தியாக இருக்கின்றது. இது சம்மந்தமாக சுகாதார தொழில்நுட்ப நிபுணர்கள் வாய் திறக்கவில்லை. உண்மையில் அடக்கம் செய்வதற்கான உடல்கள் முறையான அடிப்படையில் பொதி செய்து பெட்டியில் வைத்து நிலத்தடி நீர் குறைமட்டம் உள்ள இடத்தில் அடக்கம் செய்கின்ற பொழுது கொரோனா பரவும் என்ற ஆபத்து இல்லாமல் போய்விடும். இதனை அடக்கம் செய்யும் போது சமூக ரீதியான பிரச்சினைகள் எழும் என்பது எங்களுக்கு தெரியும். இதனால்தான் முஸ்லிம்கள் அடர்த்தியாக வாழுகின்ற வடக்கு மற்றும் கிழக்கு மாகாணத்தில் பல உயர் நிலங்கள் உள்ள பிரதேசங்களின் நல்லடக்கம் செய்ய ஊர் தலைமைகள் முன்வந்துள்ளார்கள். தங்களுடைய பிரதேசங்களில் வந்து இந்த உடல்களை அடக்குவதற்கும் அதற்கான அனுமதியினையும் தந்து இருக்கின்றார்கள்.

அவ்வாறு இருக்கின்ற போது கிழக்கு மாகாணத்தில் உயர் பிரதேசத்தில் உள்ள இடங்களை தெரிவு செய்து சுகாதார அமைச்சர் உடனடியாக தலையிட்டு இந்த தொழில்நுட்ப நிபுணர்கள் குழுவை அதற்கான ஆய்வுகளை செய்து கொரோனா தொற்றுக்கு இலக்கான ஜனாஸாக்களை அடக்கம் செய்வதற்கான அனுமதியினை வழங்குமாறு கேட்டுக்கொள்ளுகின்றேன். மனிதனின் வாழ்வியலில் இறுத்திக்கட்டமாக ஒவ்வொரு மனிதனும் நினைப்பது தான் நிம்மதியாக மரணித்து நிம்மதியாகவும், கெளரவத்துடனும் தனது இறுதிக்கிரியைகள் நடைபெற வேண்டும் என்று ஒவ்வொரு மனிதனின் அவாவாக இருக்கின்றது. எனவே இந்த மனிதநேயப் பண்புக்கு மிக நீண்ட பாரம்பரியம் கொண்ட எமது நாட்டில் மனிதனுடைய பாரம்பரிய ஆசையை நிறைவேறுவதற்கு எமது நாட்டின் சுகாதார அமைச்சின் அதிகாரிகள் தலையிட்டு தீர்வைப் பெற்றுத் தர முன்வர வேண்டும்

இது சம்மந்தமாக இந்த நாட்டின் அமைச்சரவையில் உள்ள உயர் தலைவர்கள் கடந்த பலமுறை சாதகமான முடிவுகளை எடுத்தாலும் கடவுள் வரம் கொடுத்தாலும் பூசாரி தடையாக இருப்பது போன்று இந்த நடவடிக்கைகள் இருந்து கொண்டு இருக்கின்றது. எனவே அவசர அவசரமாக இந்த விடயத்தில் அரசாங்கத்தின் சிரேஸ்ட தலைவர்கள் தலையிட்டு ஒரு நியாயமான தீர்வினை பெற்றுத் தருமாறு வேண்டுகின்றேன் என தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here