சானிட்டரி நாப்கின்களை அத்தியாவசியப் பொருளாக மாற்றுமாறு நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் பெண் உறுப்பினர்கள் நேற்று (24) கோரிக்கை விடுத்துள்ளனர்.
2021 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்தில் சானிட்டரி நாப்கின்களுக்கு 15% வரியை அரசு முன்மொழிந்துள்ளதை அவர்கள் கடுமையாக எதிர்த்தனர்.
இதை “மென்சஸ் வரி” என ஐக்கிய மக்கள் சக்தியின் எம்.பி. ரோகிணி காவிரத்ன மற்றும் அண்மையில் அரச தரப்பிற்கு தாவிய டயானா கமகே ஆகியோர் இது தொடர்பாக தங்கள் ஆட்சேபனைகளை எழுப்பினர்.
டயானா கமகே, சானிட்டரி நாப்கின்களிற்கு 15% வாட் வரி விதிக்கும் அரசின் நடவடிக்கையால், நாட்டிலுள்ள பெரும்பாலான பெண்கள் குறிப்பாக பாடசாலை செல்லும் மாணவிகள் பெரும் சுகாதார நெருக்கடியை எதிர்கொள்வார்கள் என தெரிவித்தார். சானிட்டரி நாப்கின்கள்ளிற்கு 15% வாட் வரி விதிக்க அரசாங்கம் எடுத்த நடவடிக்கையை கண்டிப்பதாகவும் தெரிவித்தார்.
15% வாட் வரியை நீக்கி இதை ஒரு அத்தியாவசியப் பொருளாக மாற்றுமாறு பிரதமர் மற்றும் ஜனாதிபதியை நான் கேட்டுக்கொள்கிறேன். நாட்டின் மக்கள் தொகையில் 52 சதவீதம் பெண்கள். இது அந்த பெண்களுக்கு சுகாதார மற்றும் மனிதாபிமான பிரச்சினையாக மாறியுள்ளது.
இந்தப் பிரச்சினையால் பாடசாலைக்குச் செல்லும் பெண்கள் ஐம்பது சதவீதம் பேர் பாடசாலைக்குச் செல்வதில்லை. எனவே, இது குறித்து கவனம் செலுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன். ஐம்பது சதவீத மகள்கள் ஒவ்வொரு மாதமும் பள்ளிக்கு செல்வதில்லை. நிதி அமைச்சர் இன்று இங்கே இருக்கிறார். அவர் கவனம் செலுத்துவார் என்று நான் நினைக்கிறேன்” என்று அவர் மேலும் கூறினார்.