கொரோனாவை காரணம் காட்டி மாவீரர் நினைவஞ்சலியை தடுக்க முயன்றீர்கள் என்றால் அது கொரோனாவிற்கே பிடிக்காது. ஏனெனில், கொரோனாவுடன் வாழப்பழகும்படி அரசு சொல்கிறது. கொரோனாவுடன் வாழப்பழகி மற்ற எல்லா விடயங்களையும் மீள ஆரம்பிக்கிறது. வடக்கு மக்கள் சுகாதார நடைமுறையை சிறப்பாக கடைப்பிடிக்கிறார்கள் என கொரோனா தடுப்பு செயலணியின் தலைவர் இாணுவத்தளபதி சவேந்திர சில்வாவே தெரிவித்துள்ளார் என நீண்ட சமர்ப்பணத்தை முன்வைத்தார் மூத்த சட்டத்தரணி என்.சிறிகாந்தா.
மாவீரர் நினைவஞ்சலியை நடத்தக் கூடாது என 38 பேருக்கு தடைவிதிக்க கோரி யாழ்ப்பாண பொலிசார், யாழ்ப்பாண நீதிவான் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
இதன்போது, பிரதிவாதிகள் தரப்பில் முன்னிலையான மூத்த சட்டத்தரணி என்.சிறிகாந்தா நீண்ட சமர்ப்பணத்தை முன்வைத்தார்.
அவரது சமர்ப்பணத்தில்-
“மாவீரர்தினத்தை இந்த வருடம் திடீரென தடை செய்ததன் காரணத்தை பொலிசார் விளக்க வேண்டும். ஏனெனில் கடந்த வருடம், அதற்கு முதல் வருடம் எல்லாம் மாவீரர்தினத்தை நாம் அனுட்டித்தோம். இதே பொலிசார்தான் இங்கிருந்தார்கள். புலிகள் அழிக்கப்பட்டதாக அரசாங்கம கூறியது. கடந்த வருடம் இல்லாத ஆபத்து இந்த வருடத்தில புதிதாக என்ன ஏற்பட்டது?
கொரோனாவை காரணம் காட்டி அஞ்சலி நிகழ்வை தடை செய்வதாக கூறினால், அது கொரோனாவிற்கே பிடிக்காது. கொரோனாவை காரணம் காட்டி மாவீரர் நினைவஞ்சலியை தடுக்க முயன்றீர்கள் என்றால் அது கொரோனாவிற்கே பிடிக்காது. ஏனெனில், கொரோனாவுடன் வாழப்பழகும்படி அரசு சொல்கிறது. கொரோனாவுடன் வாழப்பழகி மற்ற எல்லா விடயங்களையும் மீள ஆரம்பிக்கிறது. வடக்கு மக்கள் சுகாதார நடைமுறையை சிறப்பாக கடைப்பிடிக்கிறார்கள் என கொரோனா தடுப்பு செயலணியின் தலைவர் இாணுவத்தளபதி சவேந்திர சில்வாவே தெரிவித்துள்ளார்.
இலங்கையில் ஒரே சட்டம் அமுலில் உள்ளதாக அரசாங்கம் கூறுகிறது. ஆனால், மாவீரர் தினத்தை அனுட்டிக்க முல்லைத்தீவு, கிளிநொச்சி, மன்னார், வவுனியா, மட்டக்களப்பு, திருகோணமலை நீதிமன்றங்கள் தடை விதித்துள்ளன. மல்லாகம் நீதிமன்றம் கட்டுப்பாடுகளுடன் அனுமதி வழங்கியுள்ளது. பருத்தித்துறை நீதிமன்றத்தில் பொலிசாரே மனுக்களை வாபஸ் பெற்று விட்டனர். நாட்டில் ஒரே சட்டம் என்கிறார்கள். குறைந்த பட்சம் யாழ்ப்பாணத்தில் கூட ஒரே சட்டம் கிடையாது.
பொலிசாரை இதில் குறைகூற முடியாது. அவர்கள் வெறும் கருவிகள். அவர்களை ஏவி விட்டவர்களையே கேட்க வேண்டும். ஆனால் அதை அவர்களிடம் கேட்க முடியாது.
குற்றவியல் நடைமுறை சட்டக்கோவை பிரிவு 106 இன் கீழ் இந்த வழக்குகளை பொலிசார் தாக்கல் செய்ய முடியாது. ஆனால் பொலிசார் அந்த சட்டக்கோவையின்படி வழக்கு தொடர்ந்து துஷ்பிரயோகம் செய்கிறார்கள். தொடர்ந்து இந்த விடயத்தில் இழுபறிபட்டுக் கொண்டிருக்க முடியாது. இதை தெளிவாக விவாதித்து ஒரு முடிவை நாம் காண வேண்டும். அதனால் சட்டமா அதிபர் திணைக்களத்தை சேர்ந்த ஒருவரை அழையுங்கள். நாம் இது பற்றி விரிவாக எமது தரப்பை முன்வைக்கிறோம் என்றார்.
இதையடுத்து, சட்டமா அதிபர் திணைக்களத்தின் பிரதிநிதியொருவரை முன்னிலையாக உத்தரவிட்ட யாழ் நீதிவான் நீதிமன்றம், வழக்கை பிற்பகல் 3 மணி வரை ஒத்திவைத்தது.
பிற்பகல் 3 மணிக்கு மீண்டும் விவாதம் இடம்பெறும்.
தமிழ்பக்கத்தின் செய்திகளை ஜேவிபி நியூஸ், ஒன்லைன் யப்னா உள்ளிட்ட ஏராளமான இணையங்கள் பிரதி செய்தி வெளியிட்டு வருகின்றன. செய்திகளை உடனுக்குடன் நம்பகத்தன்மையுடன் அறிந்து கொள்ள தமிழ்பக்கத்துடன் இணைந்திருங்கள்.