இலங்கையின் இரண்டு மனித உரிமை ஆர்வலர்கள் காணாமல் போனது தொடர்பாக ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷவுக்கு யாழ்ப்பாண நீதிவான் நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட அழைப்பாணையை மேல்முறையீட்டு நீதிமன்றம் இன்று ரத்து செய்தது.
லலித் வீரராஜ், குகன் முருகானந்தன் ஆகியோர் யாழ்ப்பாணத்தில் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டிருந்தனர். யுத்தம் முடிந்த பின்னர் இராணுவத்தின் முழுமையான கட்டுப்பாட்டில் யாழ்ப்பாணம் இருந்தபோது இந்த கடத்தல், காணாமல் போனமை நடைபெற்றது.
இது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு தொடர்பாக யாழ்ப்பாண நீதிவான் நீதிமன்றத்தால் 2019 ஆம் ஆண்டில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிற்கு அழைப்பாணை அனுப்பப்பட்டது.
ஜனாதிபதி தேர்தலின் முன்னதாக கோட்டாபய நீதிமன்றத்திற்கு அழைக்கப்பட்ட போதும், பாதுகாப்பு காரணங்களை சுட்டிக்காட்டி அவர் முன்னிலையாகவில்லை. ஆனால் பின்னர் தேர்தல் பிரச்சாரத்திற்காக யாழ்ப்பாணம் வந்திருந்தார்.
உரிமைகள் மற்றும் அரசியல் ஆர்வலர்கள் லலித் குமார் வீரராஜ் மற்றும் குகன் முருகானந்தன் ஆகியோர் உலக மனித உரிமை தினத்திற்கு ஒரு நாள் முன்னதாக, டிசம்பர் 9, 2011 அன்று காணாமல் ஆக்கப்பட்டனர். அவர்கள், கடைசியாக யாழ்ப்பாணத்தில் உள்ள கைதாடி பகுதியில் காணப்பட்டனர்.
வீரராஜ் மற்றும் முருகானந்தன் ஆகியோர் காணாமல் போன நேரத்தில், 2009 ல் போர் முடிவடைந்த காலத்திலும் அதற்குப் பின்னரும் வடக்கு மாகாணத்தில் காணாமல் போனதை ஆவணப்படுத்தி வந்தனர்.
அவர்களிற்கு புலனாய்வுத்துறையின் அச்சுறுத்தல் இருந்ததாகவும், படையினரே அவர்களை கடத்தி காணாமல் ஆக்கியதாகவும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறார்கள்.