வங்காள விரிகுடாவில் நிவர் புயல்: வடக்கு, கிழக்கு மீனவர்களிற்கு சிவப்பு எச்சரிக்கை!

வங்கக்கடலில் உருவாகி இருக்கும் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி, அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாகவும், 48 மணி நேரத்தில் புயலாகவும் மாறும் என வளிமண்டவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

வங்கக்கடலில் உருவாகும் புயலுக்கு ‘நிவர்’ என பெயர் சூட்டப்படுவதாக இந்தியா வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அது தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்பிற்கு மேலாக ஒரு தாழமுக்கமாக மேலும் விருத்தியடைந்து மேற்கு – வடமேற்கு திசையில் 2020 நவம்பர் 24ஆம், 25ஆம் திகதிகளில் இலங்கையின் வட கரையை நோக்கி நகரக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

புத்தளம் தொடக்கம் மன்னார், காங்கேசன்துறை, திருகோணமலை, மட்டக்களப்பு ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்பில் அதிக கடற்கொந்தளிப்பு, காற்று, மழை ஏற்படுமென அந்த பகுதிகளிற்கு சிவப்பு எச்சரிக்கையை வளிமண்டலவியல் திணைக்களம் இன்று மாலை விடுத்துள்ளது.

அதேபோல வடக்கு, கிழக்கு, வட மத்திய மாகாணத்தில் வாழ்பவர்கள் விழிப்புடன் இருக்க கோரப்பட்டுள்ளனர்.

இதேவேளை இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்-

வங்கக்கடலில் உருவாகி இருக்கும் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி, அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாகவும், 48 மணி நேரத்தில் புயலாகவும் மாறி கரையைக் கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதையடுத்து வருகிற நவம்பர் 24 ஆம் திகதி தமிழகத்திற்கு ஆரஞ்சு எச்சரிக்கையும், நவம்பர் 25 ஆம் திகதி சிவப்பு நிற எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. நவம்பர் 24, 25 திகதிகளில் தமிழகத்தில் கடலோர மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழையும், ஒரு சில இடங்களில் அதி கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து நவம்பர் 25 ஆம் திகதி பிற்பகல் மகாபலிபுரம்- காரைக்கால் இடையே புயல் கரையை கடக்கும் என்றும் வங்கக்கடலில் உருவாகும் இந்த புயலுக்கு ‘நிவர்’ என பெயர் சூட்டப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நவம்பர் 24, 25ம் திகதிகளில் நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், ராமநாதபுரம், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் கனமழை முதல் அதி கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here