நுவரெலியாவில் மேலும் 3 பேருக்கு கொரோனா!

நுவரெலியா மாவட்டத்தில் லிந்துலை லிப்பகலை, அக்கரப்பத்தனை மற்றும் பூண்டுலோயா ஆகிய பகுதிகளில் கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் மூவர் நேற்று (21) அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

தலவாக்கலை – லிந்துல, லிப்பகல தோட்டம், அக்கரபத்தனை பெல்மோர் தோட்டம் கிளைட்ஸ்டேல் பிரிவு, பூண்டுலோயா சீன் தோட்டம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த மூவருக்கே இவ்வாறு வைரஸ் தொற்றியுள்ளது என சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.

இவர்கள் மூவரும் சுகாதார பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு மத்தியில் அம்பாந்தோட்டையில் அமைந்துள்ள கொரோனா வைரஸ் தடுப்பு சிகிச்சை நிலையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். இவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் சுய தனிமைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

லிந்துலை லிப்பகல தோட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான நபர், தலவாக்கலை சென்கிளயார் பகுதியில் நேற்று முன்தினம் (20) வைரஸ் தொற்றாளராக அடையாளம் காணப்பட்ட பெண்ணின் கணவராவார்.

கடந்த 16 ஆம் திகதி கொழும்பு, தெமட்டகொடை பகுதியில் இருந்து வந்து தோட்டத்தில் உள்ள தனது வீட்டில் இவர் இரகசியமாக தங்கியுள்ளார். எனினும், இவர் தொடர்பில் பொலிஸார் மற்றும் சுகாதார பிரிவினருக்கு தகவல் கிடைத்ததையடுத்து பி.சி.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டார். பரிசோதனை முடிவில் அவருக்கு வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அத்துடன், அக்கரப்பத்தனை பெல்மோர் தோட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்றாளராக அடையாளம் காணப்பட்டுள்ள நபர் கொழும்பு 12 பகுதியில் இருந்து வந்துள்ளார். இதனால் அவரிடம் பி.சி.ஆர் பரிசோதனைக்கான மாதிரிகள் பெறப்பட்டன. பரிசோதனை முடிவுகள் வெளியான நிலையில் வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அதேவேளை, கொழும்பில் கூலித்தொழிலாளியாக வேலைசெய்த 25 வயதுடைய இளைஞர் ஒருவர் பூண்டுலோயா சீன் தோட்டத்திலுள்ள தனது வீட்டுக்கு கடந்த 16 ஆம் திகதி வந்துள்ளார். பி.சி.ஆர் பரிசோதனை மூலம் அவருக்கு வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இவர் பல இடங்களுக்கு சென்று வந்துள்ளார் என்பதை பொலிஸார் கண்டறிந்துள்ளனர். எனவே, அவருடன் தொடர்பில் இருந்த 50ற்கும் மேற்பட்ட குடும்பங்கள் தற்போது சுய தனிமைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.

க.கிஷாந்தன்-

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here