முற்றுகைக்குள் வந்தது கிளிநொச்சி துயிலும் இல்லம்: யாரும் நுழைய முடியாது!

கிளிநொச்சி கனகபுரம் மாவீரர் துயிலுமில்லத்தில் மக்கள் கூடுகையை தடுப்பதற்கான வீதி தடைகள் அமைக்கும் பணிகள் பொலிசாரால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இன்று காலை 9 மணியிலிருந்து அதற்கான பணிகள் இடம்பெற்று வருகின்றன. கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றினால் மக்கள் கூடுகைக்கான தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் பொலிசார் அப்பகுதிகளில் வீதி தடைகளை அமைப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள கனகபுரம், தேராவில், முழங்காவில் மாவீரர் துயிலும் இல்லங்களில் மக்கள் கூடுவதற்கு நேற்று நீதிமன்ற தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இன்று காலைமுதல் அப்பகுதிகளில் வீதி தடைகளை அமைப்பதில் பொலிசார் ஈடுபட்டு வருகின்றனர்.

கனகபுரம் துயிலும் இல்லம் அமைந்துள்ள பகுதியில் இவ்வாறு பொலிசார் வீதி தடையினை அமைத்து வருகின்றனர். நேற்றைய நீதிமன்ற தடை உத்தரவினை நடைமுறைப்படுத்தம் வகையில் மக்கள் கூடுகையை தடுப்பதற்காக இவ்வாறு வீதி தடை அமைக்கப்பட்டு வருவதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.

துயிலும் இல்ல எல்லைப்பகுதியின் இரு மருங்கிலும் இவ்வாறு வீதி தடை அமைக்கப்பட உள்ளதாகவும், துயிலுமில்ல பிரதேசத்தின் வாயில் பகுதியில் அதற்கான கண்காணிப்பு நிலையம் அமைக்கப்படுவதாகவும் பொலிசார் தெரிவிக்கின்றனர்.

அப்பகுதியின் ஊடாக நடைபெறும் போக்குவரத்திற்கு எவ்வித தடைகளும் ஏற்படாது எனவும், துயிலுமில்லத்தில் மக்கள் ஒன்று கூடுவது தொடர்பில் நீதிமன்றினால் பிறப்பிக்கப்பட்டுள்ள தடையுத்தரவை நடைமுறைப்படுத்தவதற்காகவே இவ்வீதி தடை அமைக்கப்பட்டுள்ளதாகவும் பொலிசார் தெரிவிக்கின்றனர்.

அவ்வீதியை பயன்படுத்தும் மக்கள் தமது அன்றாட செயற்பாடுகளை வழமைபோன்று முன்னெடுக்க முடியும் எனவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

கடந்த வருடம் மற்றும் அதற்கு முன்னர் இடம்பெற்ற மாவீரர் தின நிகழ்வுகளில் பதினையாயிரம் வரையான மக்கள் ஒன்று கூடிய பகுதியாக கனகபுரம் துயிலுமில்ல வளாகம் காணப்படுகின்றது. இவ்வாறான நிலையில் நீதிமன்ற தடை உத்தரவுக்கு அமைவாக பொலிசாரினால் இவ்வாறு வீதி தடை அமைக்கப்பட்டுள்ளது.

மாவீரர் நினைவேந்தல் வாரம் இன்றைய தினம் ஆரம்பிக்கும் நிலையில் பொலிஸ் வீதி தடை அமைக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கதாகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here