வானதிக்கு வாழ்த்து அனுப்பிய சத்தியலிங்கம்!

பாரதிய ஜனதா கட்சியின் அகில இந்திய மகளிர் அணி தலைவியாக பதவிப்பிரமாணம் செய்து கொண்ட வானதி ஸ்ரீனிவாசனிற்கு இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பதில் பொதுச் செயலாளர் ப.சத்தியலிங்கம் வாழ்த்துக் கடிதம் ஒன்றை அனுப்பிவைத்துள்ளார்.

குறித்த வாழ்த்துக்கடிதத்தில்,

‘தாங்கள் பாரதிய ஜனதா கட்சியினுடைய தேசிய மகளிர் அணியினுடைய தலைவியாக நியமனம் பெற்று இன்று உத்தியோகப்பூர்வமாக பதவிப்பிரமாணம் செய்வதையிட்டு எங்களுடைய வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம். தங்களுடைய இந்நியமனமானது அகில இந்திய அளவிலும் குறிப்பாக தமிழ்நாட்டின் பாரதிய ஜனதா கட்சியின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும் என எண்ணுகிறேன்.

அதேவேளை உலகெங்கும் அடக்கி ஒடுக்கப்படும் பெண்களினதும் குறிப்பாக இந்தியாவில் வாழ்கின்ற பெண்களினது சமூக, பொருளாதார விடுதலைக்கு உந்துசக்தியாக இருக்கும் என நம்புகிறேன். தமிழ் மக்கள் தங்களுடைய அரசியல்,பொருளாதார,சமூக விடுதலைக்காக முன்னெடுத்த நீண்டகால விடுதலைப் போராட்டத்திலே மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்ட தரப்பாக பெண்களே உள்ளனர். எமது மக்களிற்கான, குறிப்பாக பாதிக்கப்பட்ட பெண்களுடைய மறுவாழ்விற்கு தங்களது ஆக்கபூர்வமான நடவடிக்கையை எதிர்பார்த்தவர்களாக நாம் உள்ளோம்.

அத்தோடு இலங்கை தமிழ் மக்களின் அரசியல் பிரச்சனைக்கான நிரந்த தீர்வினை நோக்கிய பயணத்திற்கு தங்களுடைய அனுசரணை நிச்சயமாக இருக்குமென உறுதியாக நம்புகிறேன்.

தாங்கள் மென்மேலும் பல பொறுப்புகளை பெற்று மக்களுக்கு பணி செய்ய வாழ்த்துவதோடு உடல், உள ஆரோக்கியத்துடன் மக்கள் பணி செய்ய வாழ்த்துகிறேன்.’என்றும் குறிப்பிட்டிருக்கிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here