யுத்தத்தை முடித்து சோறும், புட்டும் சாப்பிட்டுக் கொண்டிருந்த தமிழர்களை பீட்சா சாப்பிட வைத்தோம்: பொலிஸ் அதிகாரி பொறுப்பில்லாத பேச்சு!

சோறும் புட்டும் வடையும் சாப்பிட்டுக் கொண்டிருந்த வடக்கு மாகாண மக்களுக்கு யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்ததன் ஊடாக பீட்சா சாப்பிடும் நிலையை உருவாக்கினோம் என்று யாழ்ப்பாண தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரசாத் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

யுத்தத்தில் உயிரிழந்தவர்களிற்கு தடைகோரி யாழ்ப்பாணம், கோப்பாய் பொலிசார் யாழ் நீதிவான் நீதிமன்றத்தில் நேற்று விண்ணப்பங்களை தாக்கல் செய்தனர். அது தொடர்பான விசாரணையின்போதே யாழ்ப்பான தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரசாத் பெர்னாண்டோ இவ்வாறு குறிப்பிட்டார்.

இதற்கு கடும் ஆட்சேபனை வெளியிட்ட ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் “சிவில் மற்றும் அரசியல் உரிமைகளுக்கான சர்வதேச உடன்படிக்கை மீறி வடக்கு மாகாண மக்களை இழிவாக பேசுகிறார்“ என்று கண்டித்து ஆட்சேபனை தெரிவித்தார். அதனை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம் பொலிஸ் பொறுப்பதிகாரி கண்டித்து, கட்டுப்படுத்தியது.

பொறுப்பதிகாரி சமர்ப்பத்தில்-

உயிரிழந்த உறவுகளை நினைவுகூர்வதற்கு வருடத்தில் 365 நாட்கள் உள்ளன. அவ்வாறிருக்கையில் நவம்பர் 21- 27ஆம் திகதிக்குள் நினைவுகூர வேண்டுமென்பது எதற்காக? விடுதலைப் புலிகள் கூறியதால்தான் இந்த வாரம் கடைபிடிக்கப்படுகிறது என்று கூறிய பொறுப்பதிகாரி, தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன், தியாக தீபம் திலீபன் உள்ளிட்டோருக்கு நினைவேந்தல் நடத்திய ஒளிப்படத்தை சான்றாக முன்வைத்தார்.

இதன் போது- விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் படத்தில் காணப்படுகிறார். அவருக்குத்தான் பொலிஸார் வழக்குத் தாக்கல் செய்ய வேண்டும் எங்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்கின்றமை ஏன் என்று சட்டத்தரணி கேள்வி எழுப்பினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here