போராளிகளிற்கு இல்லாத உணர்வு சிறிதரனுக்கும், கஜேந்திரனுக்கும் வந்தது எப்படி?; அரசியல் லாபம் தேடாதீர்கள்: பு.பு தலைவர்!

போராளிகளுக்கு இல்லாத உணர்வும், பற்றும் இவ்வாறான அரசியல்வாதிகளுக்கு தற்போது எங்கிருந்து வந்தது. எமது மாவீரர்களுக்கான கௌரவமும், மரியாதையும் எமது மனங்களில் இருக்கின்றது. இதனை அரசியலாக்கி பிரச்சினைக்குள்ளாக்குவது நோக்கமாக இருக்கக் கூடாது என புனர்வாழ்வளிக்கப்பட்ட தமிழ் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் க.இன்பராசா தெரிவித்தார்.

அண்மையில் மாவீரர் துயிலுமில்லங்களை நாடாளுமன்ற உறுப்பினர்கள் சி.சிறிதரன், பொ.கஜேந்திரகுமார், செ.கஜேந்திரன் ஆகியோர் தலைமையில் சிரமதானம் செய்தமை தொடர்பில் கருத்து வெளியிட்டபோதே இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

தற்போது உலகெங்கும் உள்ள கொரோனா அச்சுறுத்தல் சூழ்நிலையில் இலங்கையில் மட்டுமல்ல உலகெங்கும் வாழும் மக்கள் அனைவரும் இதனால் பெரும் அச்சம் அடைந்துள்ள வேளையில் எதிர்வரும் நவம்பர் 27ம் திகதி எமது தாயகத்தில் மண் மீட்புக்காகப் போராடி வீரச்சாவடைந்த மாவீரர்களின் நினைவுநாள் அனுஷ்டிக்கப்படவுள்ளது. இவ்வேளையில் தற்போதுள்ள சூழ்நிலையில் தமிழ் மக்களாகிய நாம் சிந்தித்துச் செயற்பட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கின்றோம்.

கடந்த காலங்களைப் போன்று நாம் செயற்பட முடியாது. கொரோனா நிலையிலிருந்து விடுபட முடியாமல் இருக்கின்ற இந்த வேளையில் நாம் எமது மாவீரச் செல்வங்களுக்கான, அவர்களின் தியாகத்திற்கான நினைவேந்தலை அமைதியாகவும், அடக்கமாகவும், ஆடம்பரமில்லாமல், அரசின் கொரோனா சுகாதார விதிமுறைகளுக்கமைவாக நடத்த வேண்டிய நிர்ப்பந்தத்தில் உள்ளோம்.

இப்படியான வேளையில் நாம் அமைதியாகச் செய்ய வேண்டிய எமது நிகழ்வுகளை சில அரசியல்வாதிகள் முற்கூட்டியே தம்பட்டம் அடித்து அனைத்தையும் கெடுக்கும் செயற்பாடுகளை மேற்கொள்ள ஆரம்பித்துள்ளனர். அண்மையில் யாழ்ப்பாணத்தில் மாவீரர் துயிலுமில்ல துப்பரவு பணிகளின் போது இடையூறு விளைவித்ததாகவும், இதில் தாங்கள் வீராதிவீரர்கள் போல் அவர்களை எதிர்ப்பதாகவும் செய்திகள் பிரசுரித்துள்ளார்கள்.

ஒரு விடயத்தை அமைதியாகவும், பொறுமையாகவும் தற்போதுள்ள சூழ்நிலையில் விடயங்களைக் கடைப்பிடித்து மேற்கொள்ளாமல் அதிலும் தற்போதுள்ள அரசாங்கம் தமிழ் மக்களின் அனைத்து விடயங்களையும் கொரோனாவினைக் காட்டி தடுத்து வருகின்ற இந்த வேளையில் முந்திக்கொண்டு அரசியல் இலாபத்திற்காக மூக்கை நுழைத்து அனுஷ்டிக்கப்பட வேண்டிய நினைவேந்தலை முற்றாகத் தடைசெய்வதற்காக அரசாங்கத்திற்கு ஒரு உந்துதலை ஏற்படுத்துகின்றார்கள்.

இந்த அரசாங்கம் திலீபன் அண்ணனின் நினைவேந்தலையே செய்ய விடாமல் பல முட்டுக்கட்டைகளை இட்டது. அவ்வாறிருக்கையில் போராடி வீரச்சாவடைந்த எமது செல்வங்களின் நினைவேந்தலை செய்ய விடுமா? என்ற கேள்வி இருக்கின்றது. இன்றுவரை இலங்கையில் பயங்கரவாதத் தடைச்சட்டம் இயங்கிக் கொண்டு வருகின்றது. இவ்வாறான நிலைமைகள் இருக்கும் போது ஒரு சில அரசியல்வாதிகள் புலம்பெயர் தேசத்தில் இருக்கும் குழப்பவாதிகள் ஒரு சிலருடன் இணைந்து அனைத்தையும் குழப்புவதற்கு முனைகின்றார்கள். இவர்களால் தான் கடந்த காலங்களில் சில போராளிகள் கைது செய்யப்பட்டார்கள். அவர்கள் போராளிகளை வைத்து அவர்களின் வறுமை, கஷ்டங்களை வைத்து பயன்படுத்தி அவர்களைச் சிக்கல்களுக்குள் மாட்டிவிடுகின்றார்கள்.

இந்த நாட்டில் அமைதியான நிலைமையில் எமது விடயங்களைக் கொண்டு செல்வதற்கு நாம் செயற்பட்டு வருகின்ற வேளையில் இவர்கள் முற்கூட்டியே அனைத்தையும் குழப்பி விடுகின்றார்கள். இவ்வாறு குழப்பங்களை ஏற்படுத்தும் அரசியல்வாதிகளை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கின்றோம்.

போராளிகளுக்கு இல்லாத உணர்வும். பற்றும் இவ்வாறான அரசியல்வாதிகளுக்கு தற்போது எங்கிருந்து வந்தது. போராடி, பல இன்னல்களைக் கடந்து, அங்கவீனப்பட்டு, இன்று இத்தனை உயிர்களையும் விலையாகக் கொடுத்த எஞ்சிய போராளிகள் இருக்கின்ற போது இவர்கள் முந்தியடித்துக் கொண்டு இவற்றை மேற்கொள்வதென்பது அரசியல் இலாபமே தவிர வேறெதுவும் இல்லை. இவ்வாறான அரசியல்வாதிகள் இனிமேல் நினைவேந்தல்கள் தொடர்பான விடயங்களுக்கு முற்றும் முழுதாக மூக்கை நுழைக்காமல் போராளிகளையும், போராளிகளின் பெற்றோர்களையும், மாவீரர் குடும்பங்பளையும் இணைத்து அவர்களை முன்னிலைப்படுத்தி செயற்பட வேண்டும்.

அந்தவகையில் எதிர்வரும் நவம்பர் 27ம் திகதி இடம்பெறவுள்ள மாவீரர் தின நிகழ்வினை பொறுமையாக இருந்து தற்போது நாட்டிலுள்ள அரசாதாரண நிலைமையினைக் கருத்திற்கொண்டு செயற்பட வேண்டும். இதனைச் சாட்டாக வைத்து அரசாங்கம் எமது நிகழ்வுகளை முற்றுமுழுதாக முடக்குவதற்கு இருக்கின்றார்கள். அதற்கு ஏற்றவாறு போராளிகளின் பெற்றோரும் போராளிகளாகிய நாமும் இணைந்து சில விடயங்களை தந்திரோபாயமாக, ஆரவாரமின்றிக் கையாள வேண்டும்.

எமது மாவீரர்களுக்கான கௌரவமும், மரியாதையும் எமது மனங்களில் இருக்கின்றது. இதனை அரசியலாக்கி பிரச்சினைக்குள்ளாக்குவது எமது நோக்கமாக இருக்கக் கூடாது. மாவீரர்களை ஒரு கனம் மனதில் எண்ணி அவர்களின் ஆத்மசாந்திக்கா வேண்டி. அவர்கள் எதற்காக உயிரைத் தியாகம் செய்தார்களோ அந்த இலட்சியத்தை நிறைவேற்ற அனைவரும் செயற்பட வேண்டும். அதைவிடுத்து தங்களின் அரசியல் இலாபத்திற்காக மக்களை ஏமாற்றுவது போன்று போhளிகளின் உரிமைகளை பறித்து போராளிகளுக்கு பிரச்சினையையும் உருவாக்க முயற்சிக்கும் அரசியல்வாதிகளை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கின்றோம்.

இனிவரும் காலங்களில் இவ்வாறான நிகழ்வுகளை போராளிகள், போராளிகளின் பெற்றோர்கள், மாவீரர் குடும்பங்கள் மேற்கொள்வதற்கு அரசியல்வாதிகள் இடமளிக்க வேண்டும். அத்துடன் உயிரிழந்த ஆத்மாக்களுக்காக பிரார்த்தனை செய்வதை அரசாங்கம் எக்காரணத்தைக் கூறியும் தடுக்காது அதற்கான அனுமதியினை வெளிப்படையாகக வழங்க வேண்டும் எனவும் கேட்டுக் கொள்கின்றேன் என்று தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here