இந்த செய்தியை தயவுசெய்து பிரசுரிக்காதீர்கள்!

சபையில் பணிபுரியும் ஊழியர்களின் இடமாற்றம் தொடர்பாக இடம்பெற்ற வாக்குவாதத்தில் சபை உத்தியோகத்தர்களை சபை அமர்விற்குள் அழைத்த வவுனியா நகரசபையின் செயலாளர் இது தொடர்பான செய்தியையும் பிரசுரிக்க வேண்டாம் என்று ஊடகங்களிடம் கோரிக்கை விடுத்திருந்தார்.

வவுனியா நகரசபையின் மாதாந்த அமர்வு தவிசாளர் இ.கௌதமன் தலைமையில் இன்றையதினம் இடம்பெற்றது. இதன்போது நகரசபையில் கடமையாற்றும் ஊழியர்கள் சிலரது இடமாற்றம் மற்றும் சம்பளவிடயங்கள் தொடர்பாக உறுப்பினர்களால் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டது.

இதன்போது கருத்து தெரிவித்த சபையின் செயலாளர் குறித்த ஊழியர்களின் விடயம் தொடர்பாக தெளிவுபடுத்தல்களை முன்வைத்ததுடன்,சபையில் பணிபுரியும் 8ற்கும் மேற்பட்ட முகாமைத்துவ உத்தியோகத்தர்களை சபை அமர்விற்குள் அழைத்து,கருத்துக்களை முன்வைத்ததுடன், தாம் அனைவரும் இடமாற்றமாகி செல்லவேண்டி வரும் என்றும் எச்சரித்திருந்தார்.

எனினும் சபை ஊழியர்களை அழைத்து வந்து அவர்களை இங்கு விசாரணை செய்யத்தேவையில்லை என அனேகமான உறுப்பினர்கள் கருத்து தெரிவித்ததுடன், ஊழியர்களை அனுப்புமாறும் தெரிவித்தனர்.

எமது பக்க நியாயத்தை நிரூபிப்பதற்காகவே உத்தியோகத்தர்களை சபைக்குள் அழைத்ததாக செயலாளர் தெரிவித்ததுடன்,உத்தியோகத்தர்கள் வருகைதந்த விடயத்தினை செய்திகளில் பிரசுரிக்க வேண்டாம் என்று ஊடகவியலாளர்களிடம் கோரிக்கை விடுத்திருந்தார்.

உத்தியோகத்தர்களை சபைக்கு உள்ளே அழைத்தமை உள்ளுராட்சி அமைப்பின் விதிமுறைகளை மீறும் செயற்பாடாகவே இருப்பதாக பலரும் இதன்போது விசனம் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here