முல்லைத்தீவில் 44 ஆண்டுகால பாடசாலை வரலாற்றில் சித்தியடைந்த முதலாவது மாணவி!

முல்லைத்தீவு மாவட்டத்தின் மன்னாகண்டல் அரசினர் தமிழ் கலவன் பாடசாலை ஆரம்பிக்கப்பட்டு 44 ஆண்டுகால வரலாற்றில் முதன்முறையாக தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் 179 புள்ளிகளை பெற்று சித்தியடைந்துள்ளார்.

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட மன்னாகண்டல் கிராமமானது புதுக்குடியிருப்பு நகர் பகுதியில் இருந்து ஒதுக்கப்பட்ட ஒரு பிரதேசமாக காணப்படுகின்றது. இங்கே ஆசிரியர்கள் பற்றாக்குறை பாடசாலையின் பௌதீக வளப்பற்றாக்குறை என்று பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியிலும் ஒரு சில ஆசிரியர்களின் அயராத முயற்சியின் காரணமாக பாடசாலையின் 44 ஆண்டு கால வரலாற்றில் முதல் தடவையாக தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் 179 புள்ளிகளை பெற்று மோகனராசா சஞ்சனா என்கின்ற மாணவி சித்தியடைந்துள்ளார்.

பாடசாலை வரலாற்றில் முதன் முதலில் சாதனை படைத்த இந்த மாணவிக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர். ஒரு பின்தங்கிய பிரதேசமாக காணப்படுகின்ற இந்த பிரதேசத்திலே இந்த மாணவியின் உடைய சாதனை மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்

மாணவி மோகனராசா சஞ்சனா ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது- 44 ஆண்டுகால வரலாற்றிலேயே தான் பாடசாலையில் முதல் முதலில் புலமைப்பரிசில் பரீட்சையில் சாதனை நிகழ்த்தியுள்ளமை மிகவும் பெருமையாக இருப்பதாகவும் இதற்காக தனக்கு பெரும் உதவியாக இருந்த பாடசாலை அதிபர் ஆசிரியர்கள் பெற்றோர் அனைவருக்கும் நன்றி தெரிவிப்பதோடு எதிர்காலத்தில் வைத்தியராக வருகை தந்து பாதிக்கப்பட்ட தனது கிராமத்திற்கு சேவையாற்றுவதே தனது எதிர்கால இலட்சியம் எனவும் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தார்.

இந்த மாணவியின் தாயார் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போது- எங்களுடைய பாடசாலையின் 44 ஆண்டுகால வரலாற்றிலேயே முதன்முதலாக இந்த சாதனையை தன்னுடைய மகள் பதிவு செய்தமையையிட்டு பெருமை அடைவதாகவும் குறித்த பாடசாலையில் காணப்படும் பௌதிக வளப் பற்றாக் குறைகள் போன்றவற்றை நிவர்த்தி செய்து எதிர்காலத்திலும் இந்த பின்தங்கிய கிராமத்தில் இருந்து மாணவர்கள் முன்னேறி செல்வதற்கான வழி வகைகளை சம்பந்தப்பட்ட தரப்புகள் மேற்கொண்டு தர வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here