நாமல் நேரத்துக்கு ஒரு கதை சொல்லி ஏமாற்றுகிறார்: சிறிதரன் காட்டம்

தமிழ்த்தேசிய இனத்தின் அபிலாசைகளை பூர்த்தி செய்யக் கூடிய  தீர்வை முன்வையுங்கள் நாடு வளர்ச்சியை நோக்கி செல்லும் என பாராளுமன்றில் தமிழ்தேசியக் கூட்டமைப்பின் பராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று (18) உரையாற்றிய போதே இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

வடக்கு கிழக்கில் வாழும் தமிழர்களிடம் தாங்கள் ஓர் வேற்று நாட்டில் வாழும் உணர்வும் எண்ணமும் இருக்கிறது. காரணம் ஒரு இலட்சத்தி ஐம்பதாயிரத்துக்கு மேற்பட்ட படையினர் அங்கு குவிக்கப்பட்டு அவர்களுடைய பிரசன்னத்தோடு அந்த மக்கள் அங்கு அடக்கப்பட்டுக் கொண்டுள்ளார்கள்.

அவர்களுடைய சொந்த நிலங்கள் இன்னும் விடுவிக்கப்படவில்லை. அவர்கள் சுதந்திரமாக அந்த மண்ணிலே வாழமுடியாமல் இருக்கிறார்கள். அப்படியானால் அவர்கள் எப்படி இந்த நாட்டின் பிரஜைகள் என்று சொல்ல முடியும்.

நீண்டகாலாமாக அழுது கொண்டுள்ள மக்களின் கண்ணீருக்கு  இந்த நாட்டிலே என்ன பதில் இருக்கிறது. வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட மக்களது உறவுகள் இன்றைக்கு கிட்டத்தட்ட 1400 நாட்களுக்கு மேல் அவர்கள் தங்களது உறவுகள் வருவார்கள் என்பதற்காக  தெருக்களிலே குந்திக் கொண்டிருக்கிறார்கள்.  அவர்களுக்கான பதிலைச் சொல்ல இந்த நாட்டின் ஜனாதிபதியாலையோ, பிரதமைனாலையோ அல்லது நாட்டின் தலைவர்களினாலையோ  ஏன் இதுவரை ஒரு பதில் சொல்ல வில்லை.

ஜெனிவாவில் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தில் இருந்து நாங்கள் விலகிக் கொள்கின்றோம் என்று அரசாங்கம் சொல்கிறது. ஆனால் மன்னார் ஆயர் ராயப்பு யோசப் அவர்கள் நல்லிணக்க ஆணைக்குழுவிற்கு முன்னால் 146000 இற்கு மேற்பட்ட மக்கள் காணாமல் போயும் கொல்லப்பட்டும் உள்ளார்கள் என்ற உண்மையை சொன்னார். இதுவரை அவர்களுக்கு நீதி கிடைக்கவில்லை.

சிறையிலே இருக்கின்ற கைதிகள் இன்றைக்கு கொரொனாவால் பாதிக்கப்படுகிறார்கள். தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்க யாரும் தயார் இல்லை. அமைச்சர் நாமல் ராஜபக்ச கூட அவர்களுடன் சிறையில் இருந்தார். நான் வெளியில் வந்தால் விடுகிறேன் என்றார். இன்று அவருக்கு பெரும்பான்மை இருக்கிறது. அவருடைய அப்பா பிரதமர், சித்தப்பா நாட்டின் ஜனாதிபதி. ஏன் அவரால் அந்த அரசியல் கைதிகளை விடுதலை செய்ய முடியவில்லை. ஒரு காலத்திலே ஒரு பேச்சு இன்னொரு காலத்திலே ஒரு பேச்சு. ஆக இந்த நாட்டிலே வாழுகின்ற இனத்தை ஏமாற்றியது தான் இந்த நாட்டிலே நடந்திருக்கிறது.

பல்வேறு பட்ட இன்னல்களை இந்த மக்கள் சந்திக்கிறார்கள். குறிப்பாக தொல்பொருல் திணைக்களம், மகாவலி அபிவிருத்தி திணைக்களம், கடலோர காவல் திணைக்களம், வனவள திணைக்களம் ஆகியவை குறிப்பாக வடக்கு கிழக்கில் வாழ்கின்ற மக்களின் காணிகளை சுவீகரிக்கின்றார்கள். காணிகளை பறிகின்றார்கள். இளம் முயற்சியாளர்களுக்கு காணி வழங்குதலில் உள்ள பின்னனி என்ன?

இந்த நாடில் வாழும் தமிழர்கள் சரியான இலக்கோடும் நிம்மதியோடும் உண்மையான உரித்துக்களுடனும் வாழவேண்டுமேயானால் நீங்கள் திறந்த மனதோடு எல்லா இனங்களையும் மதிக்கின்ற குறிப்பாக 70 ஆண்டுகளாக தங்களுக்கு உரித்தான உரிமைக்கு போராடுகின்ற இந்த தமிழ் இனத்திற்காக ஒரு விடிவை நோக்கிய பயணத்தில் பேசுவதற்கு தயாராகுங்கள்.

தமிழ்த் தேசிய இனத்தின் அபிலாசைகளை பூரித்தி செய்யக் கூடிய வகையில் அவர்களையும் இந்த நாட்டின் பிரஜைகளாக ஏற்றுக் கொள்ளக் கூடிய வகையில் உங்களுடைய ஒரு தீர்வை முன்வையுங்கள். அப்போதுதான் நாடு வளர்ச்சியை நோக்கி செல்ல முடியும் என தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here