மட்டக்களப்பு பண்ணையாளர்களை காப்பாற்றுங்கள்; ஊடகவியலாளருக்கும் மிரட்டல்: பிரதமருக்கு அவசர கடிதம் அனுப்பிய கஜேந்திரகுமார்!

மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள பண்ணையாளர்களை பாதுகாக்குமாறு கோரி, பிரதமர் மஹிந்த ராஜபக்சவிற்கு அவசர கடிதமொன்றை யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அனுப்பி வைத்துள்ளார். இது தொடர்பாக செய்தி வெளியிட்ட ஊடகவியலாளர் நிலாந்தன் அச்சுறுத்தப்பட்டதையும் சுட்டிக்காட்டியுள்ளார்.

அந்த கடிதத்தில்-

மட்டக்களப்பு மாவட்டம் மயிலத்தைமடு பெரியமாதவனை பகுதியில் அமைந்துள்ள மேச்சல்தரை நிலப்பகுதியில் கடந்த ஓகஸ்ட் மாதம் தொடக்கம் சோளப் பயிர்ச் செய்கையில் ஈடுபட்டுவரும் பெரும்பான்மையினத்தைச் சேர்ந்த சிங்கள விவசாயிகளால் பண்ணையாளர்களுக்க உயிர் அச்சுறுத்தல் விடுக்கப்படுவது தொடர்ந்து இடம்பெற்று வருகின்றது.

கடந்த இரண்டரை மாதங்களாக பண்ணையாளர்களுக்கு உயிர் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டு வந்த நிலையில் கடந்த கடந்த 15.11.2020 அன்று குறித்த மேச்சல் நிலப்பகுதியில் தங்கியிருந்த பண்ணையாளர்களது இருப்பிடங்களைத் தேடி வாள்கள் கத்திகளுடன் சென்ற பெரும்பான்மையினத்தைச் சேர்ந்தவர்கள் மூன்று நாள் காலக்கெடுவுக்குள் அனைத்துப் பண்ணையாளர்களும் அவர்களது கால்நடைகளுடன் அங்கிருந்து வெளியேறிவிட வேண்டுமெனவும் இல்லையேல் கொலை செய்வோம் என்றும் அச்சுறுத்தியுள்ளனர்.

இந்த அச்சுறுத்தல் செயற்பாடுகள் தொடர்பில் செய்திகளை சேகரித்து வெளியிட்ட மட்டு ஊடகவியலாளர் செ.நிலாந்தன் பொலீசாரினால் விசாரணைகளுக்கு உள்ளாக்கப்பட்டு அச்சுறுத்தப்பட்டுள்ளார்.

பண்ணையாளர்கள் அச்சுறுத்தப்பட்டமை தொடர்பில் கரடியனாறு பொலிஸ் நிலையத்திலும் மட்டக்களப்பு மனித உரிமைகள் அலுவலகத்திலும் பண்ணையாளர்களால் முறையிடப்பட்டுள்ளது. எனினும் இதுவரை காவல்முறையினரால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையெ பண்ணையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

பண்ணையாளர்கள் எதிர்நோக்கியுள்ள உயிர் ஆபத்து நிலை தொடர்பில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்கள் மட்டக்களப்பு மாவட்ட பொலிஸ் அத்தியட்சகருடன் இன்று 18-11-2020 தொலைபேசியில் தொடர்பு கொண்டு நிலைமைகளை தெரியப்படுத்தியுடன் கரடியனாறு பொலிசார் பண்ணையாளர்கள் மேற்கொண்ட முறைப்பாடுகள் தொடர்பில் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதனையும் சுட்டிக்காட்டி பண்ணையாளர்களது பாதுகாப்பினை உறுதிப்படுத்துமாறும் அவர்கள் தொழில் செய்வதற்கு பெரும்பான்மையினத்தவர்களால் விடுக்கப்படும் நெருக்கடிகளை நிறுத்த நடவடிக்கை எடுக்குமாறும் கோரியிருந்தார்.

மேலும் இவ்விடயம் தொடர்பில் பிரதமர் மகிந்த ராஜபக்சவுக்கு அவசர கடிதம் ஒன்றினையும் அனுப்பியுள்ளார். அக்கடிதத்தில் பண்ணையாளர்களை பாதுகாப்பதற்கு உடனடியாகத் நடவடிக்கை எடுக்குமாறும் கோரியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here