சென்னையில் தங்கியிருந்து சீரியல்களில் நடித்து வந்த யாழ் நடிகர் ஓடஓட வெட்டிக்கொலை: கள்ளக்காதலால் விபரீதம்!

சென்னை எம்.ஜி.ஆர்.நகரில் டி.வி.சீரியல் நடிகர், வீட்டின் முன் ஓட ஓட விரட்டிக் கொலை செய்யப்பட்டார். இலங்கையை சேர்ந்த இவர், தமிழகத்தில் தங்கியிருந்து சீரியல்களில் நடித்து வருகிறார்.

சென்னை எம்.ஜி.ஆர்.நகர், வள்ளல் பாரி தெருவில் உள்ள வீட்டில் வாடகைக்குக் குடியிருந்தவர் செல்வா என்கிற செல்வரத்தினம். இலங்கையின் யாழ்ப்பாணத்தை சேர்ந்த இவர், தனியார் தொலைக்காட்சியில் சீரியல் நடிகராக இருந்தார். செல்வரத்தினத்துக்கு திருமணமாகி 3 மகன்கள் உள்ளனர். அவர்கள் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள இலங்கை அகதிகள் முகாமில் குடியிருந்து வருகின்றனர். செல்வரத்தினம் மட்டும் தனியாக சென்னையில் தங்கியிருந்தார்.

இந்தநிலையில் செல்வரத்தினம் அடிக்கடி பெண் ஒருவரிடம் செல்போனில் நீண்டநேரம் பேசிக்கொண்டே இருப்பார். அவருடன் நட்பாகவும் பழகி வந்தார். அதை அந்தப் பெண்ணின் கணவர் கண்டித்திருக்கிறார். இந்தநிலையில் கடந்த 4 மாதங்களுக்கு முன் செல்வரத்தினம் விருதுநகருக்குச் சென்றிருந்த போது அந்தப் பெண்ணின் கணவருடன் தகராறு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து சூளைக்கரை காவல் நிலையத்தில் புகாரளிக்கப்பட்டது. அதன்பேரில் அனைவரிடம் போலீஸார் விசாரணை நடத்தியிருக்கின்றனர்.

இந்தச் சமயத்தில்தான் தீபாவளிக்கு அடுத்தநாள் ( 15) காலை 6.25 மணியளவில் வீட்டின் முன் நடந்துச் சென்ற செல்வரத்தினத்தை ஆட்டோவில் வந்த மர்ம கும்பல் ஓட ஓட விரட்டிக் கொலை செய்தது.

இதுதொடர்பாக செல்வரத்தினத்துடன் தங்கியிருந்த தனசேகர் என்பவர் எம்.ஜி.ஆர். நகர் காவல் நிலையத்தில் புகாரளித்தார். அதன்பேரில் போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து செல்வரத்தினத்தின் சடலத்தை மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இந்தக் கொலை தொடர்பாக போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரவின் ராஜேஷ் வழக்குபதிவு செய்து விசாரித்தார். விசாரணையில் கொலை நடந்த இடத்தில் உள்ள சிசிடிவி கேமராக்களை கொலையாளிகள் உடைத்துவிட்டு சென்றது தெரியவந்தது. மேலும் செல்வரத்தினத்தை கொலை செய்தது அந்தப் பெண்ணின் கணவர் விஜயகுமார் மற்றும் அவரின் கூட்டாளிகள் எனத் தெரியவந்தது. இதையடுத்து அவர்களைப் பிடித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here