கிளிநொச்சியில் மாகாணசபை வேட்பாளர்களாக சிறிதரன் வழங்கிய பட்டியல்: ஜமீன்தாருக்கு இம்முறை சிக்கல்!

மாகாணசபை தேர்தல் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் நடைபெறுமென எதிர்பார்க்கப்படும் சூழலில், மாகாணசபை ஆசன விவகாரத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பிற்குள் காய் நகர்த்தல்கள் ஆரம்பித்துள்ளன.

தமிழ் தேசிய கூட்டமைப்பு இதுவரை சமச்சீரான ஜனநாயக அங்கமாக இருக்கவில்லை. இலங்கை தமிழ் அரசு கட்சியின் ஏகபோகம்தான் நிலவியது. தமிழ் அரசு கட்சி விரும்பியதை போல ஆசன பங்கீட்டையும், நியமனங்களையும் வழங்கி வந்தது. ஆனால் இப்பொழுது கள நிலைமையில் இப்பொழுது மாற்றம் ஏற்பட்டுள்ளது.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர் நியமன சர்ச்சை எழுந்தபோது, சிறிதரன் அந்த பொறுப்பிற்கு பொருத்தமற்றவர் என்பதை தமிழ்பக்கம் சுட்டிக்காட்டியது. தமிழ் அரசு கட்சிக்கு அப்பாலான- கூட்டமைப்பான எந்த பொறுப்பிற்கும் அவர் தகுதியற்றவர். பரந்த அரசியல் பார்வையற்றவர்- குறுகிய கட்சி சிந்தனையுடையவர் என்பதை சுட்டிக்காட்டியிருந்தோம்.

கடந்த மாகாணசபை, உள்ளூராட்சிசபை வேட்புமனு தாக்கலின் போது, கூட்டமைப்பாக கலந்து பேசி, கட்சிகளிற்கிடையிலான ஆசன பங்கீட்டை இறுதி செய்திருந்த நிலையில், யாருக்கும் தெரியாமல் திருட்டுத்தனமாக தனது பட்டியலை மாவட்ட செயலகத்தில் தாக்கல் செய்திருந்தார். மாவை சேனாதிராசா அப்போது, இதையெல்லாம் கண்டுகொள்ளாமல் இருந்தார்.

இப்படியான நடவடிக்கைகள் மூலம் கிளிநொசசி ஜமீன்தாராக சிறிதரன் நீடித்து வந்தார்.

இப்பொழுது மாகாணசபை தேர்தல் வருகிறது. இம்முறை கிளிநொச்சியை சிறிதரனின் “பளையமாக“ விடுவதில்லையென கூட்டமைப்பின் தலைவர்களும், தமிழ் அரசு கட்சியின் தலைமையும் முடிவு செய்துள்ளது.

சிறிதரன் இப்பொழுது எந்த முகாமில் இருக்கிறார் என்பது ஊரறிந்தது. தனது புதிய தலைவர் எம்.ஏ.சுமந்திரனின் அணியை பலமாக்க தீவிரமாக முயன்று வருகிறார். சுமந்திரனுடன் கொஞ்சம் அதிருப்தியில் இருந்த சாள்ஸ் நிர்மலநாதனை யாழ்ப்பாணத்திற்கு சுமந்திரனின் வீட்டிற்கே அழைத்து வந்து சமரசப்படுத்தி வைத்தார்.

ஒரு பக்கம் பிரபாகரன், மறுபக்கம் சுமந்திரன் என டபிள் அக்டிங்கில் மனிதர் பின்னி பெடலெடுத்துக் கொண்டிருக்கிறார்.

இந்த நிலைமையில் மாவையை பகைத்து கிளிநொச்சியை கைவிடவும் அவர் தயாரில்லை.

அண்மையில் மாவை சேனாதிராசாவின் வீட்டிற்கே சிறிதரன் சென்றுள்ளார். அதாவது, யாழ் நகரில் எம்.ஏ.சுமந்திரன் வீட்டில், மாவையை சந்திப்பதற்கு முன்னர்.

மாவையுடன் ஆறஅமர உட்கார்ந்து பேசியவர், “அண்ணை… நீங்கள் இப்பிடி எல்லா விசயத்தையும் இழுத்துக் கொண்டு போறததான் பிரச்சினை. மாகாணசபை தேர்தல் வருது. நீங்கள் முலமைச்சர் வேட்பாளர். நாங்கள் எல்லாம் வேலை செய்து உங்களை வெல்ல வைக்கிறம். வேட்பாளர்களையும் இப்பவே தீர்மானிப்பம். இப்பவே தீர்மானித்தால் அவர்கள் வேலை செய்ய சுகமாக இருக்கும். கிளிநொச்சிக்கு 3 பேர் என்னிடமுள்ளனர். நீங்கள் இப்பிடி இழுத்தடித்துக் கொண்டிருக்க, மற்றவையள் அதை செய்து பெயர் எடுத்துக் கொண்டு போய் விடுகிறார்கள். (சுமந்திரனை சொல்கிறாராம்) சட் என முடிவெடுங்கள்“ என கூறி, தான் சுமந்திரன் அணியில் இல்லையென்பதை போல ஒரு தோற்றத்தை உருவாக்க முயன்றார். அத்துடன் தன்னிடம் 3 வேட்பாளர்கள் உள்ளனர் என்ற தகவலையும் மாவையின் காதில் போட்டு வைத்துள்ளார்.

வேட்பாளர்கள் பற்றிய விபரத்தையும் மாவையிடம் தெரிவித்துள்ளனர். பச்சிலைப்பள்ளி தவிசாளர் சுரேன், முன்னாள் கல்வியமைச்சர் குருகுலராஜா, பூநகரி பிரதேசசபை உறுப்பினர் ஜெயகாந்தன் ஆகியோரை தனது வேட்பாளர்களாக தெரிவித்தார்.

கிளிநொச்சியில் 7 வேட்பாளர்களை மாகாணசபைக்கு களமிறக்க வேண்டும். இம்முறை தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில் சிறிதரனின் பட்டியலில் மட்டும் கிளிநொச்சியில் களமிறக்கப்படமாட்டார்கள் என தெரிகிறது. குறைந்தது 3 ஆசனங்களை இரண்டு பங்காளிக்கட்சிகளும் இம்முறை கோரும். அதற்கு மாவை சேனாதராசாவும் சம்மதிப்பார் என தெரிகிறது. குறைந்தது 2 ஆசனங்களாவது பங்காளிக்கட்சிகளிற்கு செல்லும். கிளிநொச்சியில் தமிழ் அரசு கட்சி சார்பில் மாவை சேனாதிராசா தரப்பினாலும்-அதாவது தமிழ் அரசு கட்சி வேட்பாளராக- சிறிதரன் குழு அல்லாமல்- ஒரு கல்வியியலாளர் களமிறக்கப்படுகிறார் என்பதை தமிழ்பக்கம் நம்பகரமாக அறிந்தது.

இதையெல்லாம் கூட்டிக்கழித்து பார்த்தால் கிளிநொச்சியில் இம்முறை ஜமீன் தரப்பில் 3 பேர்தான் களமிறக்கப்படுவார்கள்.

மாகாணசபை கனவுடன் கிளிநொச்சியில் இம்முறை பலர் உலாவுகிறார்கள். குறிப்பாக வட்டிக்கடை ஜீவன். மாகாணசபை ஆசனம் சிறிதரன் தருவார் என்ற நம்பிக்கையில், பாராளுமன்ற தேர்தல் சமயத்தில் சிறிதரனிற்கு பல வழிகளிலும் அவர் உதவியளித்திருந்தார். ஆனால், தனது வேட்பாளர் பட்டியலில் வட்டிக்கடை ஜீவனின் பெயரை சிறிதரன் கூறியிருக்கவில்லை.

மாகாணசபை தேர்தல் நெருங்கும்போது, இம்முறை கிளிநொச்சியில் பெரிய அக்கப்போர் காத்திருக்கிறது என்பது மட்டும் நிச்சயம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here