94 வீத செயற்திறனுடன் கொரோனா தடுப்பூசி தயார்: அமெரிக்க நிறுவனம் அதிரடி அறிவிப்பு!

அமெரிக்க நிறுவனமான மாடர்னா தயாரித்துள்ள கொரோனா தடுப்பூசி நோய்த் தொற்றிலிருந்து மக்களைப் பாதுகாக்க 94.5 சதவிகிதம் செயற்திறனுடன் செயல்படுவதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

3ஆம் கட்டமாக நடந்த கடைசி சோதனை முயற்சியின் இடைக்கால முடிவுகளின் அடிப்படையில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது.

30,000 பேருக்கு நடத்தப்பட்ட சோதனையில் 94.5% செயற்திறன் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து, எதிர்வரும் வாரங்களில் அவசரகால பயன்பாட்டு அங்கீகாரத்திற்காக அமெரிக்க உணவு மற்றும் மருந்து கட்டுப்பாட்டு நிர்வாகத்திற்கு விண்ணப்பிக்க திட்டமிட்டுள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.

பரிசோதனையின் போது, அமெரிக்கர்கள், ஆபிரிக்கர்கள், ஆசிய நாட்டவர்கள், ஸ்பானியர்கள் உள்ளிட்ட பல இனக்குழுக்களை சேர்ந்தவர்கள் பயன்படுத்தப்பட்டுள்ளனர்.

அமெரிக்காவின் ஃபைசர் மற்றும் ஜெர்மனியின் பயோஎன்டெக் நிறுவனங்களின் தடுப்பூசி 90 சதவிகிதம் பயன்திறனுடன் செயல்படுவதாக அறிவிப்பு வெளியானதைத் தொடர்ந்து, இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

முன்னதாக ரஷியாவின் ஸ்புட்னிக் வி தடுப்பூசி, நோய்த் தொற்றிலிருந்து பாதுகாப்பதில் 92 சதவிகிதம் பயன்திறனுடன் செயல்படுவதாக கடந்த வாரம் அறிவிக்கப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here