கோட்டாவில் நம்பிக்கை தெரிவித்த சிறிதரன்: பொலிசாரின் அனுமதியுடன் கிளிநொச்சி துயிலுமில்லம் சிரமதானம்!

கிளிநொச்சி மாவீரர் துயிலுமில்லத்தை துப்பரவு செய்த நாடாளுமன்றஉறுப்பினர்
சி.சிறிதரன் உள்ளிட்டோரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது.
அத்துடன் சுகாதார நடைமுறைகளுடன் துப்பரவு பணிகளில் ஈடுபடவும் பொலிசார்
அனுமதி வழங்கியுள்ளனர்.

இன்று காலை 9 மணியளவில் கனகபுரம் மாவீரர் துயிலுமில்ல வளாகத்தினை
நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் தலைமையில் துப்பரவு செய்யம் பணிகள்
இடம்பெற்றது பாராளுமன்ற உறுப்பினருடன் பொது மக்களும் குறித்த நிகழ்வில்
கலந்துகொண்டனர்.

துப்பரவு பணிகள் இடம்பெற்றுக்கொண்டிருந்த நிலையில் கிளிநொச்சி தலைமை
பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமையிலான பொலிஸ் குழுவினர் அப்பகுதிக்கு வருகை தந்ததுடன், கிளிநொச்சி உதவி பொலிஸ் அத்தியட்சகர் புஸ்பகுமாரவும் வருகை தந்திருந்தார். இதன்போது தற்போதுஉ்ள்ள கொரோனா காலப்பகுதியில் அதிகளவான மக்கள் கூடியிருப்பது தொடர்பில் பொலிசார் பாராளுமன்ற சிறிதரனிடம் வினவினர். இதற்கு பதிலளித்த பாராளுமன்ற உறுப்பினர் சுகாதார நடைமுறைகளை பின்பற்றியே நாம் சிரமதான பணியில் ஈடுபட்டுவருவதாகவும், இலங்கை சட்டங்களிற்கு உட்பட்டு செயற்படுவதாகவும்
தெரிவித்தார்.

குறித்த விடயம் தொடர்பில் வாக்குமூலம் பதிவு செய்யப்பட வேண்டும் என
பொலிசார் தெரிவித்ததை அடுத்து அதற்கு சம்மதம் தெரிவிக்கப்பட்டது. இந்த
நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் உள்ளிட்ட பலரிடம்
வாக்குமூலம் பெறப்பட்டதுடன், வருகை தந்திருந்தவர்கள் பெயர் விபரம்
மற்றும் வாகன இலக்கங்களும் பொலிசாரால் பதிவு செய்யப்பட்டது. அங்கு
வருகை தந்திருந்தவர்களை பொலிசார் ஒளிப்பதிவும் செய்து கொண்டனர்.

வாக்குமூலம் அளிக்கப்பட்டதை தொடர்ந்து கருத்து தெரிவித்த சி.சிறிதரன்,
கடந்த வருடம் மாவீரர் நாள் நினைவேந்தலிற்கு ஜனாதிபதி எவ்வித தடையும்
விதிக்கவில்லை. இவ்வாறான நிலையில் இம்முறையும் தடை விதிக்கப்படாது என்று
நம்புகின்றேன். இவ்விடயம் தொடர்பில் கடந்த சில நாட்களிற்கு முன்னர்
ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளேன். அதேபோன்று நேற்றைய தினம்
சுமந்திரன் இவ்விடயம் தொடர்பில் நாடாளுமன்றில் உரையாற்றியிருந்தார்.

இவ்வாறானநிலையில் கடந்த வருடம் போன்று இவ்வருடமும் மாவீரர் நினைவேந்தலை அரசின் அனுமதியுடன் நடத்தலாமென நம்புகின்றேன். இன்றைய தினம் எம்மிடம் வாக்குமூலத்தினை பொலிசார் பதிவு செய்தனர். சுகாதார நடைமுறைகளை பின்பற்றியே துப்பரவு பணிகளில் ஈடுபட்டுள்ளதாக அவர்களிடம்
தெரிவித்துள்ளோம். இதுவரை எவ்வித தடைகளும் விதிக்கப்படவில்லை. கொரோனா
காலத்தில் இத்தனை பேர் ஏன் திரண்டீர்கள் என கேட்டனர். கடந்த சில
நாட்களிற்கு முன்னர் யாழ்ப்பாணத்தில் 250க்கு மேற்பட்டோர் ஒன்றாக
கூடியிருந்தனர். ஆனால் இங்கு மிக குறைவானோரே கூடினோம் என்ற விடயத்தை
தெரிவித்துள்ளோம் எனவும் அவர் தெரிவித்தார்.

வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டதை தொடர்ந்து சமூக இடைவெளிகளை பேணியும்,
சுகாதார நடைமுறைகளை பின்பற்றியும் துப்பரசு பணியில் ஈடுபடுமாறு பொலிசார்
பணித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here