கிராமத்தவர்கள் சிலராலேயே முடக்கப்பட்டுள்ள நெடுந்தீவு: மக்கள் பெரும் திண்டாட்டம்!

நெடுந்தீவு கடந்த 14 நாட்களாக முடக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். படகுப் போக்குவரத்தும் நடைபெறவில்லை. இதனால் அன்றாட செயற்பாடுகளில் ஈடுபட முடியாமல் மக்கள் திண்டாடுகிறார்கள்.

எனினும், இந்த முடக்கம் சுகாதார பிரிவினராலோ அல்லது அரசின் வேறெந்த நிர்வாக அலகாலோ ஏற்படுத்தப்பட்டதல்ல. இவ் முடக்கத்திற்கும் சுகாதார சேவைகள் திணைக்களத்திற்கும் தொடர்பு இல்லை என வடக்கு சுகாதார பணிப்பாளர் வைத்தியர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

கொரோனா பரவல் அபாயத்தையடுத்து, ஊர் மட்ட அமைப்புக்கள் எடுத்த முடிவின் பிரகாரம் முடக்கப்பட்டுள்ளதாக நெடுந்தீவு பிரதேச செயலாளர் தெரிவித்துள்ளார்.

இந்த முடக்கத்தினால் அங்கு வங்கிகளும் இயங்கவில்லை. அன்றாட தொழிலாளர்கள் நெடுந்தீவிற்கு வெளியில் வர முடியாத நிலையில், உழைப்பில்லாத நிலையில் வங்கியில் நகை அடைவு வைக்கவும் முடியாத நிலையில், பட்டினியை எதிர்நோக்குகிறார்கள்.

ரெலிகொம் இணைய வழியில் கோளாறு காரணமாக வங்கியை இயக்க முடியவில்லை என அரச அதிபர், பிரதேச செயலாளர் தெரிவித்துள்ளனர். குறித்த இணைய தொடர்புகள் கடற்படையின் அலைக் கோபுரத்தில் பொருத்தப்பட்டுள்ளதால் பாதுகாப்பு அமைச்சின் அனுமதி எடுப்பதில் தாமதம் நிலவுவதாக தெரிவிக்கின்றனர்.

அரசினால் முடக்கம் அறிவிக்கப்பட்ட பகுதிகளிற்கு அரசின் நிவாரணம் வழங்கப்படும். எனினும், ஊர் பிரமுகர்கள் சிலரால் அமுல்ப்படுத்தப்பட்டுள்ள இந்த முடக்கத்திற்கு யார் நிவாரணம் வழங்குவது என தெரியவில்லை.

கிராம மட்ட பிரமுகர்கள் என சில சம்மாட்டிமார் போக்குவரத்தை முடக்கியுள்ளதாக நெடுந்தீவு மக்கள் குற்றம்சுமத்துகிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here