அமெரிக்க ஜனாதிபதி மாளிகையில் 4 ஆண்டுகளின் பின் நாய்கள் நுழைகின்றன!

அமெரிக்க ஜனாதிபதி மாளிகையில் கடந்த 4 ஆண்டுகளாக எந்தவிதமான செல்லப்பிராணிகளும் வளர்க்கப்படாத நிலையில் ஜோ பைடன் குடிபுகும்போது அவருடன் சேர்ந்து அவரின் இரு நாய்களும் செல்ல உள்ளன.

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயகக் கட்சி சார்பில் போட்டியிட்ட ஜோ பைடன், துணை ஜனாதிபதி பதவிக்கு போட்டியிட்ட கமலா ஹாரிஸ் இருவரும் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டனர்.

தற்போது ஜனாதிபதியாக இருந்துவரும் டொனால்ட் ட்ரம்ப் காலத்தில் ஜனாதிபதி மாளிகையில் எந்தவிதமான செல்லப்பிராணிகளும் வளர்க்கப்படவில்லை.

ஜனாதிபதி ட்ரம்ப்புக்கு முன் 8 ஆண்டுகள் ஜனாதிபதியாக இருந்த பாரக் ஒபாமா இரு நாய்களை செல்லமாக வளர்த்தார். போர்ச்சுக்கீசிய நாய்களான போ, சன்னி என பெயரிடப்பட்ட இரு நாய்களை ஒபாமா வளர்த்தார். ஏறக்குறைய 8 ஆண்டுகளாக வெள்ளை மாளிகையில் இரு நாய்களும் வளர்ந்தன.

ட்ரம்ப் ஆட்சியில் 4 ஆண்டுகளாக எந்த வளர்ப்புப் பிராணிகளும் இல்லாத நிலையில் தற்போது ஜோ பைடன் ஆட்சியில் மீண்டும் நாய்கள் ஜனாதிபதி மாளிகைக்குள் செல்கின்றன.

ஜனாதிபதியாக ஜோ பைடன் மாளிக்கைக்குள் செல்லும் போது அவர் வளர்க்கும் ஜெர்மன் ஷெப்பர்ட் நாய்களான சாம்ப், மேஜர் ஆகிய இரு நாய்களும் உடன் செல்லும்.

ஜோ பைடன், அவரின் மனைவி ஜில் இருவரும் கடந்த 2018ஆம் ஆண்டு மேஜர் எனும் ஜெர்மன் ஷெப்பர்ட் நாயை தத்தெடுத்தனர். இந்த மேஜர் நாயை பைடனும், ஜில்லும் வேறு ஒரு இடத்தில் நிதியுதவி அளித்து வளர்த்து வந்த நிலையில் தங்களுடன் 2018ஆம் ஆண்டு முதல் வைத்துக்கொண்டனர்.

இதில் மேஜர் நாய், மீட்புப்பணியில் ஈடுபட்டு இடிபாடுகளில் சிக்கியவர்களைக் கண்டுபிடிக்கும் திறன், பயிற்சி பெற்ற நாயாகும். அந்தவகையில் மீட்புப்பணியில் ஈடுபடும் நாய் முதன்முதலில் வெள்ளை மாளிகைக்குள் செல்வது இதுதான் முதல்முறை. மேஜர் நாய் மட்டுமல்லாமல் அதோடு சேர்த்து சாம்ப் என்ற பெயரிடப்பட்ட ஜெர்மன் ஷெப்பேர்ட் நாயும் வெள்ளை மாளிகைக்குள் செல்கிறது.

இதில் சாம்ப் எனப் பெயரிடப்பட்ட நாய், ஜோ பைடனின் வீட்டில் சிறு குட்டியிலிருந்து வளர்க்கப்பட்டு வருகிறது. இதில் ஜோ பைடனின் சிறுவயது செல்லப்பெயரான சாம்ப் பெயரையே தனது நாய்க்கு வைத்து அதை பைடன் அழைத்து வருகிறார். கடந்த 4 ஆண்டுகளில் முதல் முறையாக வெள்ளை மாளிகைக்குள் நாய்கள் செல்ல உள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here