கமலா ஹாரிஸின் சொந்த ஊரில் கொண்டாட்டம்!

அமெரிக்க துணை ஜனாதிபதி தேர்தலில் கமலா ஹாரிஸ் வெற்றி பெற்றதால், அவரது பூர்வீக கிராமமான திருவாரூர் மாவட்டம், பைங்காநாடு, துளசேந்திரபுரம் மக்கள் மிகுந்த மகிழ்ச்சிக் கொண்டாட்டத்தில் இருந்து வருகிறார்கள். இனிப்புகள் வழங்கியும், பட்டாசுகள் வெடித்தும், தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகிறார்கள். இதனால் ஊரே உற்சாகத்தில் திளைத்துக்கொண்டிருக்கிறது.

அமெரிக்க துணை ஜனாதிபதி வேட்பாளராக கமலா ஹாரிஸ் அறிவிக்கப்பட்டதிலிருந்தே இந்தப் பகுதி மக்கள் மிகுந்த பெருமித கொண்டாட்டத்தில் இருந்து வந்தார்கள். இவரின் தாய்வழித் தாத்தா கோபாலன் இந்தக் கிராமத்தைச் சேர்ந்தவர் என்ற தகவல் வெளியானதால் நெகிழ்ச்சியில் ஆழ்ந்தார்கள். 90 ஆண்டுகளுக்கு முன்பு இங்குள்ள அக்ரஹாரத் தெருவில் வாழ்ந்திருக்கிறது, கோபாலனின் குடும்பம். ஆங்கிலேயே ஆட்சியில் சிவில் சர்வீஸ் அதிகாரியாகப் பணியாற்றிய கோபாலன், சென்னைக்குக் குடிபெயர்ந்திருக்கிறார்.

கமலா ஹாரிஸ் வெற்றிக்காக பூஜை நடத்திய மக்கள்

அவரின் மூத்த மகள் சியாமளா, மேற்படிப்புக்காக அமெரிக்கா சென்றிருக்கிறார். ஜமைக்கா நாட்டைச் சேர்ந்த டொனால்ட் ஜெ ஹாரிஸைத் திருமணம் செய்திருக்கிறார். இவர்களின் மகள்தான் கமலா ஹாரிஸ். அரசியல், பொருளாதாரம், சட்டம் எனப் பலதுறைகளில் பட்டம் பெற்ற கமலா ஹாரிஸ், கலிஃபோர்னியா தலைமை வழக்கறிஞர், சென்ட் உறுப்பினர் எனப் படிபடியாக உயர்ந்து, தற்போது அமெரிக்கத் துணை ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்.

“கமலா ஹாரிஸுக்கும் பைங்காநாடு, துளசேந்திரபுரத்துக்கும் என்ன சம்பந்தம்… பல ஆண்டுகளுக்கு முன்பு இவரது தாத்தா இங்கு வாழ்ந்திருக்கிறார். அவர் இங்கிருந்து சென்று நீண்டகாலம் ஆகிவிட்டது. அப்படியிருக்கும்போது கமலா ஹாரிஸின் வெற்றியை ஏன் இந்தப் பகுதி மக்கள் இவ்வளவு சந்தோஷமாகக் கொண்டாட வேண்டும்“ எனச் சிலர் கேள்வி எழுப்புகின்றனர். கமலா ஹாரிஸ் அமெரிக்காவில் வசித்தாலும்கூட, அவருக்கும் துளசேந்திரபுரம் கிராமத்துக்கும் இடையேயான பந்தம் தற்போதுவரை நீடித்துக்கொண்டுதான் இருக்கிறது.

கோயில் கல்வெட்டில் கமலா ஹாரிஸ் பெயர்

இங்குள்ள இவரது குலதெய்வ கோயிலான ஸ்ரீதர்மசாஸ்தா ஸ்ரீசேவகப்பெருமாள் கோயில் கல்வெட்டில் நன்கொடையாளர்கள் பட்டியலில் கமலா ஹாரிஸின் பெயரும் இடம்பெற்றிருக்கிறது. 2014ஆம் ஆண்டு இந்தக் கோயிலுக்கு 5,000 ரூபாய் நன்கொடை கொடுத்திருக்கிறார் கமலா ஹாரிஸ். தங்கள் கிராமத்தை பூர்வீகமாகக்கொண்ட பெண், அமெரிக்க துணை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டதை மிகவும் பெருமிதமாகக் கருதிய பைங்காநாடு துளசேந்திரபுரம் மக்கள், ஊர் முழுவதும் பல இடங்களில் வாழ்த்து பேனர்கள் வைத்துக் கொண்டாடினார்கள்.

கமலா ஹாரிஸ் வெற்றி பெற இங்கிருக்கும் ஸ்ரீதர்மசாஸ்தா ஸ்ரீசேவகப்பெருமாள் கோயிலில் ஊர்மக்கள் ஒன்றாகக் கூடி, சிறப்பு பூஜை மற்றும் அன்னதானம் நடத்தினார்கள். வீடுகளின் முன்பு வாழ்த்துக்கோலம் இட்டார்கள்.

இந்தநிலையில்தான் தற்போது கமலா ஹாரிஸின் வெற்றி இந்தப் பகுதி மக்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here