வடக்கு விவசாய திணைக்களத்தின் வீழ்ச்சியும், ஒரு பெண் அதிகாரி பழிவாங்கப்படும் சம்பவமும்!

நாட்டின் ஜனதிபதி திறமையான அரச நிர்வாகத்தை பற்றி பேசி வருகிறார். கதிரைக்கு பாரமாக அதிகாரிகள் இருக்காதீர்கள், எழுத்திலுள்ள விதிமுறைகளை விட்டுவிட்டு திறமைக்கு மதிப்பளித்து, பொறுப்புக்களை வழங்குங்கள் என கூறி வருகிறார்.

ஆனால் அவர் கூறுவதை போல அரச நிர்வாகங்கள் இயங்குகிறதா என்ற மிகப்பெரிய கேள்வியுள்ளது.

இதற்கு மிகப்பெரிய உதாரணம் வடமாகாண விவசாய திணைக்களம். திணைக்களத்தின் உயரதிகாரிகள் காலத்திற்கு காலம் ஒவ்வொரு அதிகாரியையோ, அரசியல்வாதியையோ கையை காலாக நினைத்து பிடித்து, காலத்தை ஓட்டிக் கொண்டிருக்கிறார்கள்.

வடக்கு விவசாய திணைக்களத்திற்குள் நடக்கும் சீரழிவு, அதிகார போட்டி, செயற்திறனின்மை என்பவற்றை அம்பலப்படுத்துவதாக, சகிலா பானு விவகாரம் அமைந்துள்ளது.

முன்னைய வடக்கு முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரனினால், திறமையான அதிகாரியென அடையாளம் காணப்பட்டு வடக்கு விவசாய திணைக்களத்திற்கு அவர்  அழைக்கப்பட்டிருந்தார். விவசாய திணைக்கள தமிழ் அதிகாரிகளில் விரல்விட்டு எண்ணத்தக்க திறமையான அதிகாரிகளில் அவரும் ஒருவர்.

இதனாலேயே என்னவோ வடக்கு விவசாய திணைக்கள நிர்வாகம் அவரை கூட்டாக எதிர்த்தது.

அவர் வவனியா பிரதி விவசாய பணிப்பாளராக பொறுப்பேற்ற பின்னர், அதுவரை நட்டத்தில் இயங்கி வந்த வவுனியா பண்ணையை மிக இலாபமீட்டும் பண்ணையாக குறுகிய காலத்தில் மாற்றியிருந்தார். வவுனியா பண்ணையில் பல இலட்சம் ரூபா மாதாந்தம் மோசடி செய்யப்பட்டு வந்த நிலையில், அதையெல்லாம் ஆதாரங்களுடன் அறிக்கையிட்டிருந்தார்.

எனினும், அந்த மோசடியாளர்கள் யாரும் தண்டிக்கப்பட்டதாக தகவலில்லை.

மாறாக, சகிலா பானுவை குறிவைத்து கணக்காய்வு, விசாரணைக்குழு என வடக்கு நிர்வாகம் தொடர்ந்து செயற்பட்டது. அவரை வடக்கிற்கு வெளியில் விரட்ட தொடர்ந்து முயற்சிகள் நடந்தன. தற்போதைய ஆளுனர் பதவியேற்ற பின்னரும் அந்த நடவடிக்கை தொடர்ந்தது.

வடமாகாண விவசாய பணிப்பாளராக ஆ.சிவக்குமார் நியமிக்கப்பட்ட போது, வடமாகாணத்தின் தேறிய உள்நாட்டு உற்பத்தி 11 வீதமாக உள்ளது. 9 வருடங்களிற்கு மேலாக அவர் அந்த பொறுப்பில் இருக்கிறார். 2019ஆம் ஆண்டில் தேறிய உள்நாட்டு உற்பத்தி 2 வீதமாக உள்ளது. வடக்கு விவசாய திணைக்களம் கழுதை தேய்ந்து கட்டமெறும்பாகிய கதையாகியுள்ளமைக்கு இது ஒரு உதாரணம்.

இதேவேளை, சகில பானு பொறுப்பேற்ற பின்னர் வவுனியா அரச விதை உற்பத்தி பண்ணையின் வருமானம் 11 வீதத்தால் அதிகரித்திருந்தது. 1.6.2020 அன்று நடைபெற்ற கணக்காய்வு முகாமைத்துவ கூட்டத்தில் இதனை சுட்டிக்காட்டிய, கணக்காய்வுகுழு இது பற்றி வினவியிருந்தது.

அரச சுற்றுநிருபங்களின்படி, 5 வருடங்களின் மேல் இந்த பதவியை வகிக்க முடியாத போதும், அதை விட 2 மடங்கு அதிக காலமாக வடக்கு விவசாய திணைக்கள பணிப்பாளர் பதவி வகிக்கிறார். அவர் அரச பதவியில் இணைந்தது முதல் வடமாகாணத்திலேயே பணியாற்றியும் வருகிறார். விதிமுறையின்படி 10 வருடங்களிற்கு அதிகமாக ஒரே பிரதேசத்தில் ஒருவர் பதவிவகிக்க முடியாது.

அவரை பிரதியிட வடக்கில் தற்போது வேறு அதிகாரிகள் இல்லையென ஒரு காரணம் கூறப்படுகிறது. இந்த நிலைமை ஏன் உருவானது என்பதையும் சிந்திக்க வேண்டும். சேவை மூப்புடைய 4 அதிகாரிகளை “வெட்டி“யே சிவகுமார் வடக்கு விவசாய திணைக்கள பணிப்பாளரானார். அரசியல் தலையீட்டு நியமனம் என்ற அதிருப்தியுடன் மூத்தவர்கள் இடமாற்றம் பெற்றனர் அல்லது ஓய்வுபெற்றனர்.

அதாவது 10 வருடங்களின் முன்னர் முறையான நிர்வாக ஒழுங்கில் நியமனங்கள் வழங்கப்பட்டிருந்தால், இப்பொழுது பிரதியிட அதிகாரியில்லையென்ற நிலைமை ஏற்பட்டிருக்காது.

அத்துடன், குறிப்பிட்ட அதிகாரியான சகிலா பானுவை வடக்கை விட்டு வெளியேற்றவே இந்த நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாக ஊகிக்க முடிவதாக அதிகாரிகள் குறிப்பிடுகின்றனர்.

வடக்கு நிர்வாகத்திற்கு சகிலா பானு நியமிக்கப்பட்ட உடன், வவுனியா பண்ணை தொடர்பாக பல முறைப்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன. அவற்றில் ஒன்றை தவிர, மிகுதி அனைத்தும் மொட்டை கடிதங்கள். பெயர் குறிப்பிட்டு செய்யப்பட்ட முறைப்பாடு தொடர்பில் வடக்கு கணக்காய்வுகுழு மேற்கொண்ட விசாரணையில், அந்த குற்றச்சாட்டு போலியானது என கண்டறிந்தது. எனினும், போலி முறைப்பாடு செய்தவர் மீது எந்த நடவடிக்கையும் இல்லை.

இதுபோல, ஏனைய குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக விசாரணை செய்த குழு, அந்த விவகாரத்தில் அப்போதைய விவசாய அமைச்சின் செயலாளரையும் விசாரித்த பின்னரே தீரமானம் மேற்கொள்ளலாமென தெரிவித்தது. இதன்படி, தகுதியான வேறொரு அதிகாரி மூலம் அப்போதைய வடக்கு விவசாய அமைச்சின் செயலாளரிடம் விசாரணை நடத்தியதில், அவர் வடக்கு விவசாய திணைக்கள பொட்டுக்கேடுகளை புட்டுபுட்டு வைத்துள்ளார். அதில் முக்கியமாக, விவசாய திணைக்கள பணிப்பாளராக ஒருவர் சட்டவிதிகளிற்கு முரணாக நீண்டகாலம் பதவிவகிப்பதும் முதன்மையான காரணமாக சுட்டிக்காட்டியுள்ளார்.

வவுனியா விவசாய பணிப்பாளராக சகிலா பானு செயற்பட்ட நிலையில், அவரை மத்திய நிர்வாகத்திற்கு மாற்றம் செய்தனர். அதற்கு காரணமாக, அவர் மீது விசாரணை நடப்பதாக தெரிவித்தனர். எனினும், தாபன விதிக்கோவையின்படி விசாரணை நடத்தப்படுவதெனில் மாகாண நிர்வாகத்திற்கு வெளியில் அவரை அனுப்பி விட்டு மேற்கொள்ள முடியாது.

ஒரு பெண் அதிகாரிக்கு எதிராக வடக்கு நிர்வாக உயரதிகாரிகள் விதிமுறைகளையும், சட்டங்களையும் மீறி தொடர்ந்து செயற்படுவது ஏன் என்ற கேள்வியெழுந்துள்ளது?

ஒருவர் வடமாகாணத்தில் கடமையாற்ற முடியாது என அதிகாரிகள் அடம்பிடிப்பதன் மர்மம் என்ன? குறிப்பிட்ட பெண் அதிகாரி முஸ்லிம் சமூகத்தை சேர்ந்தவர் என்பதா? முஸ்லிம் சமூகத்தவர் ஒருவர் வடக்கில் பணியாற்ற முடியாதென்ற எழுதப்படாத சட்டத்தை வடக்கு அதிகாரிகள் உருவாக்க முயற்சிக்கிறார்களா?

இதேவேளை, வவுனியா வடக்கு கல்வி வலயத்தில் அண்மையில் நடந்த பெரும் மோசடி பற்றிய தகவல்கள் வெளியாகியிருந்தன. ஒரு மாதம், இரு மாதமல்ல- பல மாதங்களாக அந்த மோசடி நடந்தது. வடக்கு கணக்காய்வு திணைக்களம் அவ்வளவு நாள் அதை கண்டறிய முடியவில்லையென்பது ஏதோவொரு பலவீனத்தை சுட்டிக்காட்டுவதாகவும் அமைந்திருக்கலாம்.

இந்த அளவுகோலுடன் விவசாய திணைக்கள விவகாரத்தையும் அணுக வேண்டும். வவுனியா பண்ணையில் இரு வேறு விவகாரங்களில் கணக்காய்வு திணைக்களம் விசாரணை மேற்கொண்டது. ஏற்கனவே மோசடிகளால் நிரம்பியிருந்த நிலையில், அது குறித்த ஆவணங்களை சகிலா பானு சமர்ப்பித்ததை தொடர்ந்து ஒரு விசாரணை நடத்தப்பட்டது. ஆனால் அது தொடர்பில் நடவடிக்கையெடுக்கப்படவில்லை. விசாரணை தொடர்பான சில விடயங்களை சகில பானு, கணக்காய்வு திணைக்களத்திற்கு சுட்டிக்காட்டியிருந்தார். எனினும், அது குறித்து, நிர்வாக நடைமுறைகளை மீறி- சகிலா பானுவிற்கு தெரியாமல் விவசாய பணிப்பாளர் பதில் அளித்திருந்தார். விவசாய பணிப்பாளரின் அவசரத்தின் பின்னணி என்ன?

அண்மைய சம்பவங்கள் வடக்கு கணக்காய்வு குழுவை பலப்படுத்த- சுயாதீனப்படுத்த- தலையீடுகளின்றி இயங்க வைக்க நடவடிக்கையெடுக்க வேண்டுமென்பதையே புலப்படுத்துகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here