தமிழ் தேசிய கூட்டமைப்பின் உள்ளூராட்சி மன்ற வரவு செலவு திட்டத்திற்கு ஈ.பி.ஆர்.எல் இன் ஆதரவை கோர முடிவு!

தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆளுயைிலுள்ள உள்ளூராட்சிசசபைகளின் வரவு செலவு திட்டத்தை வெற்றிபெற செய்ய ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (ஈ.பி.ஆர்.எல்.எவ்) அமைப்பின் ஆதரவை கோருவதென முடிவாகியுள்ளது.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர்களிற்கிடையிலான சந்திப்பில் நேற்று இது முடிவானதாக இலங்கை தமிழ் அரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தமிழ்பக்கத்திடம் உறுதிசெய்தார்.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் கட்சி தலைவர்கள் கூட்டம் நேற்று நடைபெற்றது. யாழ் மார்ட்டின் வீதியில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடந்த சந்திப்பில் தமிழ் அரசு கட்சி சார்பில் மாவை சேனாதிராசா, சீ.வீ.கே.சிவஞானம், ப.சத்தியலிங்கம், புளொட் சார்பில் த.சித்தார்த்தன், பா.கஜதீபன், ரெலொ சார்பில் செல்வம் அடைக்கலநாதன், சுரேன் ஆகியோடன் எம்.ஏ.சுமந்திரன், சி.சிறிதரன் ஆகியோரும் அழைக்கப்பட்டிருந்தனர்.

சில நாட்களின் முன் 3 கட்சிகளின் தலைவர்கள் கலந்து கொண்ட கூட்டத்தில் இந்த விவகாரம் பேசப்பட்டுள்ளது. அந்த சந்திப்பிலேயே மாவை சேனாதிராசாவை கூட்டமைப்பின் செயலாளராக தெரிவு செய்யும் தீர்மானம் எடுக்கப்பட்டது. இதற்கு பின்னர், தமிழ் அரசு கட்சி எம்.பிக்கள் சிலர் மாவையை சந்தித்து, தம்முடன் கலந்துரையாடாமல் அனைத்தும் நடந்து கொண்டிருப்பதாக கவலைப்பட்டிருந்தனர். இதையடுத்து, எம்.ஏ.சுமந்திரன், சி.சிறிதரன் இருவரையும் அழைத்து, ஏற்கனவே எடுக்கப்பட்ட தீர்மானம் அறிவிக்கப்பட்டது.

இது குறித்து இலங்கை தமிழ் அரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தமிழ்பக்கத்திடம் கூறும்போது- “வரவு செலவு திட்டத்தை சமர்பிக்கும்போது சில உள்ளூராட்சிசபைகள் அபாயத்தை சந்திக்கும் நிலையில் உள்ளன. இந்த சபைகளில் யாருடைய ஆதரவை பெறலாமென ஆலோசிக்கப்பட்டது. அரச தரப்பும, இலங்கை தமிழ் காங்கிரஸ், தமிழர் விடுதலை கூட்டணி என்பனதான் ஓரளவு உள்ளூராட்சி மன்ற பிரதிநிதித்துவத்தை கொண்டுள்ளன. இதில் காங்கிரஸ் தனி ரகம். அவர்களுடன் பேசி பலனில்லை. தமிழர் விடுதலை கூட்டணி-ஈ.பி.ஆர்.எல்.எவ் தரப்புடன் பேசி ஆதரவை பெறுவதென முடிவாகியுள்ளது.

இதிலுள்ள சிக்கல் யாழ்ப்பாணத்தில் த.வி.கூ சார்பில் தெரிவானவர்களில் பலர் ஆனந்தசங்கரி சார்புடையவர்கள். தேசியத்தலைவருடன் அவர் முரண்பட்டவர். அதனால் அவருடன் கூட்டு வைப்பதை பலர் விரும்பமாட்டார்கள். கூட்டமைப்பின் தலைவர்கள் கூடி முடிவெடுத்துள்ளனர். பார்ப்போம். கிளிநொச்சியிலுள்ள எந்த சபையின் வரவு செலவு திட்டமும் கவிழும் அபாயத்தில் இல்லை“ என்றார்.

ஈ.பி.ஆர்.எல்.எவ் தரப்புடன் பேசும் பொறுப்பு மாவை சேனாதிராசாவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அடுத்த சில நாட்களில் அவர் பேச்சை ஆரம்பிப்பார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here