‘என்னைப் போல நீங்களும் மாற வேண்டும்’: சுகாதார விதிமுறைகளை மீறிய நாமல் வடக்கு இளைஞர்களிற்கு அழைப்பு!

தேசிய இளைஞர் சேவைகள் மன்ற யாழ்ப்பாணம் மாவட்ட அலுவகம் இளைஞர் மற்றும் விளையாட்டு அமைச்சர் நாமல் ராஜபக்ச திறந்து வைத்தார்.

யாழ்ப்பாணம் – பொன்னாலை வீதியில் கல்லுண்டாய் பகுதியில் இந்த அலுவலகக் கட்டடம் புதிதாக அமைக்கப்பட்டது.

யாழ்ப்பாணம் – கிளிநொச்சி மாவட்டங்களின் சமூக உள்கட்டமைப்பு  மேம்பாட்டுக்குழுக் கூட்டத்தில் பங்கேற்க யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்த  இளைஞர் மற்றும் விளையாட்டு அமைச்சர் நாமல் ராஜபக்ச, இளைஞர் சேவைகள் மன்றத்தின் யாழ்ப்பாணம் மாவட்ட அலுவலகத்தையும் திறந்து வைத்தார்.

இன்று பிற்பகல் 3 மணியளவில் இடம்பெற்ற இந்த திறப்பு நிகழ்வில் இளைஞர் மற்றும் விளையாட்டு இராஜாங்க அமைச்சர் அமித் தேனுக விதானகமகே, நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், யாழ்ப்பாணம் மாநகர முதல்வர் இம்மானுவேல் ஆனல்ட், யாழ்ப்பாணம் மாவட்டச் செயலாளர் க.மகேசன் மற்றும் அதிகாரிகள் எனப் பலர் கலந்துகொண்டனர்.

நிகழ்வில் உரையாற்றிய நாமல் ராஜபக்ச,

என்னைப்போல் வட பகுதிகளில் இருந்தும் இளைஞர்கள் பாராளுமன்ற உறுப்பினர்களாக தெரிவு செய்யப்பட்டு அமைச்சுகளை பொறுப்பெடுத்து யாழ்ப்பாண மாவட்டத்தில் அபிவிருத்திகளை மேற்கொள்ள வேண்டும்.

கடந்த 30 வருட காலமாக நடந்த யுத்தத்தின் தாக்கத்தின் காரணமாக வடபகுதி அபிவிருத்தி அடையாத நிலை காணப்பட்டது எனினும் யுத்தம் நிறைவடைந்த பின்னர் தற்போது நாட்டில் சுதந்திரம் நிலவி வருகின்றது

எனினும் தற்போதைய அரசாங்கம் வடபகுதியில் பல்வேறுபட்ட வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றது அதிலும் குறிப்பாக விளையாட்டு துறைக்கு முக்கியத்துவம் கொடுத்து நாம் பல்வேறுபட்ட வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றோம் யாழ்ப்பாண மாவட்டத்தில் உதைபந்தாட்டம், கிரிக்கெட் விளையாட்டுகளுக்கு மைதானங்கள்  இந்த அரசாங்கத்தை அமைத்துக் கொடுக்கப்பட உள்ளன அதே போன்று சர்வதேச ரீதியில் விளையாடுவதற்காக வடக்கிலிருந்தும் இளைஞர்கள் தெரிவு செய்யப்பட வேண்டும் என்பது எமது ஆர்வம் எனவே கடந்த 30 வருட காலமாக இருந்த நிலையை மறந்து நாம் அனைவரும் புதிய யுகம் நோக்கி பயணிப்பதன் மூலம் எதிர்காலத்தில்  எமது நாட்டினை அபிவிருத்தி செய்ய முடியும் எனவும் அவர் தெரிவித்தார்.

50 பேருக்கும் அதிகமானவர்கள் ஒன்றுகூட முடியாதென சுகாதார அமைச்சு புதிய வழமைக்கான ஒழுங்கு விதி அறிமுகப்படுத்தியுள்ள போது, அதை கணக்கிலெடுக்காம் விதி மீறலாக நடந்த இந்த கூட்டத்திலேயே, நாமல் அழைப்பு விடுத்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here